அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் கொழுந்து விட்டு எரியும் காட்டுத் தீக்கு பயந்து சுமார் 20 ஆயிரம் மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர்

608
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் கொழுந்து விட்டு எரியும் காட்டுத் தீக்கு பயந்து சுமார் 20 ஆயிரம் மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர்.

அமெரிக்காவில் ஆண்டுதோறும் கோடைக்காலங்களில் ஏற்படும் வெப்பத்தால் திடீர், திடீரென காட்டு மரங்கள் தீப்பிடித்து எரிந்து கடுமையான சேதத்தை ஏற்படுத்தி வருகிறது.

தற்போது, கலிபோர்னியா மாகாணத்தில் 100 டிகிரிக்கும் அதிகமான வெயில் சுட்டெரித்து வரும் நிலையில், தெற்கு கலிபோர்னியா பகுதியின் காடுகளில் உள்ள மரங்கள் அனைத்தும் தீப்பிடித்து எரியத் தொடங்கி விட்டது.

இதனையடுத்து, அப்பகுதியில் உள்ள ராணுவத்தளம் மற்றும் ஒரு பொழுதுப்போக்கு மையம் ஆகியவை இழுத்து மூடப்பட்டன. மேற்குக் கடற்கரை பகுதியையொட்டியுள்ள புதர்களும் தீப்பற்றி எரிகிறது. இதனால், அமெரிக்காவின் மாநிலங்களை ஒன்றிணைக்கும் 5 நெடுஞ்சாலைகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

கார்ல்ஸ்பட் என்ற இடத்தில் ஒரு ஓய்வு விடுதி மற்றும் சில வீடுகளையும் தீ பொசுக்கி அழித்தது. அப்பகுதியில் உள்ள சுமார் 11 ஆயிரம் மக்களை பாதுகாப்பான இடங்களை தேடி செல்லுமாறு உள்ளூர் நிர்வாகம் வலியுறுத்தியுள்ளதால் அவர்கள் தங்களது வீடுகளை பூட்டிவிட்டு வெளியேறினர்.

இதேபோல், சான் டியாகோ பகுதியில் வசிக்கும் சுமார் 20 ஆயிரம் மக்களையும் வெளியேறுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தினர். அப்பகுதியில் தீயணைப்புப் படையினர் கடுமையாக போராடி தீயை அணைத்ததன் விளைவாக அந்த எச்சரிக்கை பின்னர் கைவிடப்பட்டது.

SHARE