அர்ஜென்டினா வெளியேறிவிடுமோ என்று பயந்தேன் – மெஸ்சி

544
உலக கோப்பை கால்பந்து போட்டியில் நேற்று முன்தினம் இரவு நடந்த 2-வது சுற்றில் அர்ஜென்டினா அணி 1-0 என்ற கோல் கணக்கில் சுவிட்சர்லாந்தை வீழ்த்தி கால்இறுதிக்கு முன்னேறியது.

வெறும் 2 நிமிடங்கள் நீடித்தால் ஆட்டம் பெனால்டி ஷூட்-அவுட்டுக்கு சென்று விடும் என்ற சூழலில், 118-வது நிமிடத்தில் பெனால்டி எல்லை வரை பந்தை கடத்தி வந்த அர்ஜென்டினா கேப்டன் லயோனல் மெஸ்சி, அதை சக வீரர் ஏஞ்சல் டி மரியாவிடம் திருப்பினார். டி மரியா பந்தை அருமையாக கோலாக்கி, பரபரப்புக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

நடப்பு தொடரில் தொடர்ந்து 4-வது முறையாக ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்ட மெஸ்சி நிருபர்களிடம் கூறுகையில், ‘கோல் அடிக்காத கடைசி நிமிடங்கள் வரை நான் மிகவும் பதற்றத்தில் இருந்தேன். ஒரு சிறிய தவறு இழைத்தாலும் கண்டிப்பாக நாங்கள் தாயகம் திரும்ப வேண்டியிருக்கும் என்பதை உணர்ந்திருந்தோம்.

அது மட்டுமின்றி எந்த காரணத்தை கொண்டும் ஆட்டம் பெனால்டி ஷூட்-அவுட்க்கு சென்று விடக்கூடாது என்று விரும்பினோம். அப்படி நடந்து விடக்கூடாது என்ற சிந்தனையே எங்களுக்குள் ஓடிக் கொண்டிருந்தது. ஏனெனில் பெனால்டி ஷூட்-அவுட்டால் நாங்கள் எல்லோரும் பாதிக்கப்பட்டிருக்கிறோம். அதிர்ஷ்டவசமாக நாங்கள் கூடுதல் நேரத்திலேயே வெற்றி பெற்று, அடுத்த சுற்றுக்கு முன்னேறி விட்டோம்.

இந்த கோலை பொறுத்தவரை முதலில் நானே அடிக்க முயற்சி செய்யலாமா என்று நினைத்தேன். ஆனால் அந்த சமயத்தில் கோல் எல்லைக்குள் டி மரியாவை பார்த்ததும் எனது முடிவை மாற்றி, அவரையும் கோல் முயற்சியில் இணைப்பது என்று முடிவு செய்தேன். அதிர்ஷ்டவசமாக அவர் பந்தை கோல் வலைக்குள் செலுத்தினார்’ என்றார்.

அர்ஜென்டினா பயிற்சியாளர் அலெக்ஜான்ட்ரோ சபெல்லா கூறும் போது, ‘முதல் 90 நிமிடத்திற்குள் (வழக்கமான ஆட்ட நேரம்) நாங்கள் வெற்றி பெற்றிருக்க வேண்டும். அதற்குரிய தகுதியான அணியாக நாங்கள் விளையாடினோம். முதல் பாதியில் கூட இரண்டு முறை கோல் அடிக்கும் வாய்ப்புகள் கிடைத்து நழுவி போயின. பிற்பாதியில் மேலும் ஆதிக்கம் செலுத்தி, கோல் நோக்கி 6 ஷாட்டுகளை அடித்தோம். ஆனால் எதுவும் கைகூடவில்லை’ என்றார்.

60 ஆண்டுகளுக்கு பிறகு கால்இறுதிக்குள் நுழைந்து விட வேண்டும் என்ற சுவிட்சர்லாந்தின் கனவு நனவாகாத ஏமாற்றத்துடன் சுவிட்சர்லாந்து பயிற்சியாளர் ஓட்மார் ட்ஸ்பெல்டு விடைபெற்றார். ஜெர்மனியை சேர்ந்த 65 வயதான அவர் ஏற்கனவே இந்த உலக கோப்பையுடன் ஓய்வு பெறுவதாக அறிவித்திருந்தார்.

ஓட்மார் அடிப்படையில் ஒரு பத்திரிகையாளர் ஆவார். பயிற்சி பணிக்கு முழுக்கு போட்ட அவர் அடுத்து டி.வி.யில் பணியாற்றப் போவதாக கூறியிருக்கிறார்.

SHARE