ஆண்களே உங்கள் சருமம் மங்குகிறதா? இதோ சரிசெய்ய டிப்ஸ்

819
கோடைகாலம் தொடங்கியதுமே தோலின் நிறம் மங்கத் தொடங்கிவிடுகிறது.சூரியன் வெளியிடும் புறஊதாக்கதிர்கள், சருமத்தில் அதிக அளவு மெலனின் என்ற ஒரு பொருளைச் சுரக்கச் செய்கின்றன.

ஒரு காலத்தில் பெண்கள் மட்டுமே அதைப் பற்றி மிகவும் எச்சரிக்கையாக இருந்தனர்.

ஆனால் இன்று ஆண்களும் இதைப் பற்றி அக்கறை கொள்ளத் தொடங்கியுள்ளனர்.

ஆண்களே இதோ உங்களுக்கான இயற்கையான வழிமுறைகள்.

தயிர்

நம்மில் பலர் கோடைகாலத்தில் உடம்பைக் குளுமையாக வைத்துக் கொள்ள நிறைய தயிர் அல்லது மோர் எடுத்துக்கொள்வதுண்டு.

இது சருமத்தில் உள்ள காற்றோட்ட துளைகளை உறுதிப்படுத்தி வெயிலால் ஏற்படும் கருமை நிறத்தைக் குறைக்கும். இதை செய்ய ஒரு வித்தியாசமான வழி இருக்கிறது.

ஒரு கப் தயிரை எடுத்து அதனுடன் தக்காளி அல்லது வெள்ளரிக்காய் சாற்றை கலந்து கொள்ளவும். அதனுடன் கடலை மாவை சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள்.

இந்த கலவையை முகம் மற்றும் கழுத்தில் நன்கு பூசுங்கள். அதை 30 முதல் 45 நிமிடங்கள் வரை விட்டு பின்னர் வெதுவெதுப்பான தண்ணீரில் கழுவுங்கள்.

எலுமிச்சைச் சாறு

முகத்தை சுத்தம் செய்ய மற்றுமொரு இயற்கையான பொருள் எலுமிச்சை என்பது நாம் அறிந்ததே.

ஒரு புதிய எலுமிச்சைப் பழத்தைப் நறுக்கிப் பிழிந்து முகத்தில் கருமை நிறம் தோன்றியுள்ள இடத்தில் தடவுங்கள். அது நன்கு காயும் வரை வைத்திருக்கவும். இதனுடன் சர்க்கரையையும் சேர்த்துக் கொள்ளலாம்.

ஏனென்றால் சர்க்கரை இயற்கையாகவே தூய்மைப்படுத்தும் குணங்களைக் கொண்டுள்ளது. ஒரு வாரத்தில் இரண்டு அல்லது மூன்று முறை இதைச் செய்வதன் மூலம் விரும்பிய பலன்களைக் காணமுடியும்.

உருளைக்கிழங்கு

வெயிலால் மங்கிய உங்களுடைய மேல் தோலினை அகற்ற உருளைக்கிழங்கையும் பயன்படுத்தலாம்.

உருளைக்கிழங்கில் வைட்டமின் ‘சி’ அதிக அளவில் நிரம்பியிருப்பதால், இயற்கையாகவே வெண்மையளிக்கும் தன்மையைக் கொண்டுள்ளது.

இரண்டு சிறிய உருளைக்கிழங்குகளை எடுத்து தோலை நீக்கிக் கொள்ளுங்கள். அவற்றை சிறு துண்டுகளாக நறுக்கி நன்கு மிக்ஸி அல்லது பிளெண்டரில் அறைத்து அதை சருமத்தின் மங்கிய பகுதிகளில் தடவுங்கள்.

அந்த சாற்றை தோல் உறிஞ்சிக்கொள்வதை நிறுத்தும் வரை சுமார் அரை மணிநேரம் வைத்திருந்து பின்பு கழுவி விடுங்கள்.

சோற்றுக் கற்றாழை

சோற்றுக் கற்றாழைச் செடியை அனைவரும் வீட்டில் வைத்திருக்க வேண்டியது அவசியம். ஏனென்றால் அது பல வழிகளில் சருமப் பாதுகாப்பு மற்றும் உடல் நலக்குறைவுகளைப் போக்கவல்லது.

அதன் சாற்றை உங்கள் சருமத்தின் மீது தடவுவதன் மூலம் ஒரே வாரத்தில் உங்கள் சரும நிறம் மேம்படும்.

இது சருமத்தின் மேலடுக்குகளை சுத்தம் செய்யவும் ஊட்டமளிக்கவும் உதவுகிறது. இரவில் தூங்கச் செல்லும் முன் இதன் சாற்றை முகத்தில் தடவிக் கொள்ளலாம்.

காலையில் தடவுவதன் மூலம் சருமத்திற்கு புத்துணர்ச்சி தருவதோடு சரும அடுக்குகளை மிருதுவாக வெகு நேரத்திற்கு வைத்திருக்க உதவும்.

SHARE