இலங்கையில் இனங்களுக்கு இடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் வகையில் விசாரிப்புக்களை மேற்கொண்டு உரிய தீர்வுகளை தருவதற்காக ஜனாதிபதி செயலணிப்படை ஒன்று உருவாக்கப்படவுள்ளது.
இந்த படையணி, இனங்களுக்கு இடையில் ஏற்பட்டுள்ள அவசரப் பிரச்சினைகளை இனங்கண்டு தீர்க்கும் முயற்சிகளை மேற்கொள்ளும்.
நீண்டகாலமாக விசாரணைகள் இன்றி தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் பிரச்சினையும் இதில் அடங்கும் என்று அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.
பொலிஸ் மா அதிபரின் தகவல்படி 275 தமிழ் அரசியல் கைதிகள் விசாரணைகள் இன்றி தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் ஐந்து பிரிவுகளாக பிரித்து பிரச்சினைக்கு தீர்வை காணமுடியும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை இந்த நகர்வை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வரவேற்றுள்ளது.
குறித்த படையணி, வடக்கு கிழக்கில் அபகரிக்கப்பட்ட காணிகளை மீட்டுக்கொள்ளல், பெண்களை தலைமைகளாக கொண்ட குடும்பங்களின் பிரச்சினைகளை தீர்த்தல், போரில் அங்கவீனமடைந்தவர்களின் பிரச்சினைகள் என்பவற்றுக்கும் தீர்வுகளை முன்வைக்க வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார்.