ஊழல் குற்றச்சாட்டில் பதவி விலகிய இந்தோனேஷியா அமைச்சர்

551
இஸ்லாமியப் பெரும்பான்மையினர் வசிக்கும் இந்தோனேஷியாவில் அதிபர் சுசிலோ பம்பாங் யுதோயோனோ அமைச்சரவையில் மத அமைச்சராக செயல்பட்டு வந்தவர் சூர்யதர்மா அலி ஆவார். மெக்காவிற்கு செல்லும் புனிதப் பயணங்களுக்கான நிதி ஒதுக்கீடுகள் முறைகேடாக செலவு செய்யப்பட்டிருப்பதாக எழுந்துள்ள புகாரைத் தொடர்ந்து இவர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

கடந்த 2012-13ஆம் ஆண்டிற்கான ஹஜ் புனிதப் பயணத்தின்போது 20 மில்லியன் டாலர் மதிப்பிலான சிறப்பு நிதி தவறான முறையில் கையாளப்பட்டிருப்பதாக அந்நாட்டின் ஊழல் எதிர்ப்பு நிறுவனம் கடந்த வாரம் அமைச்சர் மீது குற்றம் சுமத்தியது. ஹஜ் யாத்திரைக்காகப் பணம் செலுத்தியவர்கள் ஆண்டுக்கணக்கில் காத்திருக்க நேரிடும்போது சென்ற ஆண்டு அலியின் உறவினர்கள் மற்றும் அரசியல்வாதிகள் போன்ற நூற்றுக்கும் மேற்பட்டோர் காத்திருப்பை மீறி மெக்காவிற்கு சென்றுவந்தது அந்நாட்டு மக்களிடையே கொதிப்பை ஏற்படுத்தியது. அரசு பணமும், மக்களின் பணமும் கலந்திருந்த இந்த சிறப்பு நிதியை அலி சட்டத்திற்குப் புறம்பாக கையாண்டிருந்தது வெளிவந்தது.

இதனைத் தொடர்ந்து நேற்று அந்நாட்டு அதிபரை சந்தித்தபின் அலி தனது பதவி விலகல் முடிவைத் தெரிவித்துள்ளார். தலைநகர் ஜகர்த்தாவிற்கு வெளியே உள்ள போகோரில் உள்ள அதிபர் மாளிகையில் இந்த செய்தியை வெளியிட்ட மாநில செயலர் சுடி சிலாலாஹி அலி தான் குற்றமற்றவர் என்பதை வலியுறுத்தியதாகவே கூறினார்.

கடந்த 2012-ஆம் ஆண்டில் ஊழல் குற்றச்சாட்டுகளினால் பதவி விலகிய விளையாட்டுத்துறை அமைச்சரைத் தொடர்ந்து மீண்டும் ஊழல் முறைகேடுகளில் பதவி விலகும் இரண்டாவது அமைச்சர் இவர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கதாகும். பத்தாண்டு கால ஆட்சிக்குப் பின்னர் இந்த ஆண்டு பதவி விலகவுள்ள அதிபர் யுதோயோனோவின் ஜனநாயகக் கட்சியினை இந்த குற்றச்சாட்டுகள் மிகவும் பாதித்துள்ளன என்று பத்திரிகைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

SHARE