மாவை சேனாதிராஜா எம்.பி. நேற்று பராளுமன்றில் உரையாற்றிய போது அதனை செவி ஒலிவாங்கி மூலம் கேட்டுக்கொண்டிருந்த பிரதியமைச்சர்களான சரத் வீரசேகர மற்றும் லலித் திசாநாயக்க உள்ளிட்ட ஆளும் தரப்பினர் மாவை எம்.பி.யுடன் வாக்குவாதப்பட்டதுடன் இடையூறுகைளயும் ஏற்படுத்தினர்
ஐக்கிய தேசியக் கட்சியினால் அரசாங்கத்துக்கு எதிராக நேற்று செவ்வாய்க்கிழமை பாராளுமன்றத்தில் கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணை மீது உரையாற்றிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட எம்.பி. மாவை சேனாதிராஜாவின் உரை மீதான மொழிபெயர்ப்பில் தவறுகள் இடம்பெற்றிருந்ததாக அக்கட்சியின் எம்.ஏ.சுமந்திரன் எம்.பி.சபையின் கவனத்தை ஈர்த்து சபாபீடத்திற்கு சுட்டிக்காட்டினார்.
இதே சமயத்தில் பிரதியமைச்சர் லலித் திசாநாயக்கவுக்கும் யாழ். மாவட்ட எம்.பி.யான திருமதி விஜயகலா மகேஸ்வரனுக்குமிடையிலும் கடும் வாக்குவாதம் இடம்பெற்றதை அவதானிக்க முடிந்தது. இருவரும் காரசாரமாக பேசி ஏசிக்கொண்டனர்.
விடுதலைப் புலிகளை நினைவு கூருவதற்கே கூட்டமைப்பு முயற்சிக்கின்றது. புலிகளே முன்னாள் அமைச்சர் மகேஸ்வரனையும் கொன்றிருந்தனர் என்று பிரதியமைச்சர் லலித் திசாநாயக்க தெரிவித்தார். இதனையடுத்து எழுந்த திருமதி விஜயகலா மகேஸ்வரன் எம்.பி. எனது கணவரை புலிகள் கொல்லவில்லை யுத்த வெற்றி நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி பயங்கரவாதிகளால் கொல்லப்பட்ட தமிழ்த் தலைவர்களது பெயர்களை கூறியுள்ளார். அதில் ஜனாதிபதி மகேஸ்வரனின் பெயரை குறிப்பிடவில்லை.
இதிலிருந்து புலிகள் எனது கணவரை கொல்லவில்லை என்பது தெளிவானது என்று தெரிவித்தார். இதனையடுத்து இருவருக்குமிடையில் கடும்வாக்குவாதம் இடம்பெற்றது. மாவை எம்.பி.யின் உரையின் போது ஆளும் கட்சியின் சிலர் தொடர்ச்சியாக இடையூறுகளை ஏற்படுத்திய வண்ணம் இருந்தனர்.
அவரது உரையின் நடுவில் ஒழுங்குப் பிரச்சினை ஒன்றை எழுப்பிய ஐக்கிய தேசியக் கட்சி எம்.பி.யான ரவி கருணாநாயக்க மாவை எம்.பி.யின் உரையினது மொழிபெயர்ப்பில் தவறிருப்பதாக சுட்டிக்காட்டினர்.
இதன்போது சபை குழப்பகரமாகவே இருந்தது. இதற்கு மத்தியிலேயே மாவை எம்.பி. தனது உரையை நிறைவு செய்தார். மாவை எம்.பி.யின் உரையின் முடிவில் ஒழுங்குப் பிரச்சினையை எழுப்பிய சுமந்திரன் எம்.பி. மாவை சேனாதிராஜா எம்.பி.யினது உரையினை நான் இரு மொழிகளிலும் செவிமடுத்துக்கொண்டிருந்தேன்.
எனினும், மொழிபெயர்ப்பில் முரண்பாடு இருந்ததை அவதானிக்கக் கூடியதாக இருந்தது. என சபைக்குத் தலைமை தாங்கிய ஜானக பண்டார கவனத்திற்கு கொண்டுவந்தார். இதற்குப் பதிலளித்த ஜானக பண்டார எம்.பி. இது தொடர்பில் கவனம் செலுத்துவதாகக் கூறினார்.