காணி உரிமையாளர்களுக்கு இலங்கை அரசாங்கம் இழப்பீடு வழங்க வேண்டும்:

446

யாழ்.குடாநாட்டில் படையினரின் தேவைகளுக்காக பொதுமக்களின் காணிகளை சுவீகரிப்பதற்கு காணி உரிமையாளர்களுடன் இணைந்து நாம் எதிர்ப்பு தெரிவித்துவரும் நிலையில், சுவீகரிக்கப்படும் காணிகளுக்கு நஷ்டஈடு வழங்கப்படும் என கூறப்படும் கருத்துக்களை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா தெரிவித்துள்ளார்.

மக்களுடைய காணிகளை மிக நீண்டகாலம் மக்களுக்கு வழங்காமல் வைத்திருந்தமையினால், காணி உரிமையாளர்களுக்கு ஏற்பட்ட நஷ்டத்தை இலங்கை அரசாங்கம் வழங்க வேண்டும் என பலம்வாய்ந்த சர்வதேச நாடுகளுக்கு கோரிக்கை விடுப்போம் எனவும், மக்களுடைய காணிகளை மக்களிடமே வழங்குவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சர்வதேச மட்டத்தில் முயற்சித்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

யாழ்.மாவட்டத்தில் மிருசுவில், அச்சுவேலி, அல்வாய், வலிகாமம் வடக்கு, வடமராட்சி கிழக்கு உள்ளடங்கலான பல பகுதிகளில் படையினரின் தேவைகளுக்காக பொதுமக்களுடைய காணிகள், பொதுதேவை என அடையாளப்படுத்தப்பட்டு சுவீகரிப்பதற்காக அளவீடு செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுவரும் நிலையில், காணி உரிமையாளர்கள் மற்றும் அரசியல் கட்சியினரின் எதிர்ப்பினால் அவை முடக்கப்படுகின்றது.

எனினும் நிரந்தரமாக காணிகளை சுவீகரிக்கும் முயற்சிகள் கைவிடப்படாத நிலையில், அவ்வப்போது பொலிஸ் பாதுகாப்புடன் காணிகளை அளவீடு செய்வதற்கும் முயற்சிக்கப்படுகின்றது.

இந்நிலையில் மேற்படி காணி சுவீகரிப்பு நடவடிக்கைகளை நிரந்தரமாக கைவிடுவதற்கு தமிழ்த் தேசிய கூட்டமைப்பு முன்னெடுத்துவரும் நடவடிக்கைகள் தொடர்பில் கருத்து தெரிவிக்கும்போதே நாடாளுமன்ற உறுப்பினர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

விடயம் தொடர்பில் மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில்,

குடாநாட்டில் பொதுமக்களுடைய காணிளை படையினர் ஆக்கிரமித்திருக்கின்றமைக்கு எதிராக என்னுடைய பெயரில் உச்ச நீதிமன்றில் வழக்கு நடைபெற்று வருகின்றது.

இதேபோல் 2ஆயிரத்து 176 பேர் தொடர்ந்த வழக்கும் நடைபெற்று வருகின்றது. இவை ஒட்டுமொத்தமாக குடாநாட்டில் காணிகள் படையினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளமைக்கு எதிரானவையே.

இந்நிலையில் சமகாலத்தில் இடம்பெற்றுவரும் காணி சுவீகரிப்பு முயற்சிகளுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்ய வேண்டிய தேவை இல்லை என்றே நாம் கருதவேண்டியுள்ளது.

காரணம் நான் முன்னர் குறிப்பிட்டதைப் போன்று வழக்குகள் தற்போது நீதிமன்றில் நடைபெறுகின்றது. எனவே நாம் இந்த விடயத்தில் தற்போது மாற்றுக் கண்ணோட்டம் ஒன்றை கொண்டிருக்கின்றோம்..

அதாவது பொதுமக்களுடைய காணிகளை படையினரின் தேவைகளுக்காக சுவீகரிக்க முடியாது. காணி உரிமையாளர்களுக்கு நஷ்டஈடும் வேண்டாம். ஆனால் மக்களுடைய காணிகளை மிக நீண்டகாலம் உதாரணமாக வலி.வடக்கு மக்கள் இடம்பெயர்ந்து 23 வருடங்கள் நிறைவடைகின்றது.

எனவே 23 வருடங்களாக அந்த நிலத்தில் படையினர் ஆக்கிரமித்திருக்கின்றார்கள்.  23 வருடங்கள் அவர்கள் தங்களது சொந்த நிலங்களில் வாழ்ந்திருந்தால், அவர்கள் தோட்டம் செய்திருப்பார்கள், மீன்பிடித்திருப்பார்கள் அவற்றின் மூலம் அவர்கள் வாழ்வாதார ரீதியாக முன்னேற்றமடைந்திருப்பார்கள். ஆனால் நடந்தது என்ன?

மக்கள் 23 வருடங்கள் தொழில் இல்லமல், முறையான வாழ்வாதாரம் இல்லாமல், கல்வி இல்லாமல், அடிப்படை வசதிகள் இல்லாமல், மிக அவலம் நிறைந்த வாழ்வை வாழ்ந்திருக்கின்றார்கள்.

எனவே அவ்வாறு வாழ்ந்தமையினால் அந்த மக்களுக்கு உண்டான இழப்பிற்கு இலங்கை அரசாங்கம் இழப்பீடு வழங்க வேண்டும். அதனையே நாங்கள் கோருகின்றோம். அதற்காக சர்வதேச ஆதரவினை தேடும் நடவடிக்கைகளினையும் நிரந்தரமாக காணி அபகரிப்புக்களை தடுக்கும் வகையில் ஒரு சர்வதேச ஆணைக்குழு உருவாக்கும் நடவடிக்கையிலும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முனைப்புடன் செயற்பட்டு வருகின்றது.

மேலும் இதற்காக துருக்கி- சைப்பிரஸ் நாடுகளுக்கிடையில் கையாளப்பட்ட காணி தொடர்பான ஐரோப்பிய நீதிமன்ற தீர்ப்பினை நாங்கள் பெற்றிருக்கின்றோம்.

அதனடிப்படையில் நாங்கள் எங்களுடைய காணி பிரச்சினை தொடர்பான விடயத்தினையும் சர்வதேச மயப்படுத்துவதற்கான முயற்சிகளை மேற்கொள்வோம். என தெரிவித்துள்ளார்.

SHARE