தடைகள் எமக்கு புதியவை அல்ல! எமக்கான வழிகளை உருவாக்கி புதிய பரிமாணத்தில் அனைவரும் ஒன்றுபட்டு உழைப்போம்

733

இலங்கை அரசாங்கத்தின் சர்வாதிகாரப் போக்கினைக் கண்டித்து தமிழர் ஒருங்கிணைப்புக் குழு அறிக்கையொன்றினை வெளியிட்டுள்ளது.

அவ்வறிக்கையின் முழு விபரம் பின்வருமாறு,

ஈழத் தமிழரின் இனப் பிரச்சினையை சர்வதேச மட்டத்தில் சனநாயக வழியிலான அரசியல் போராட்டங்களை முன்னெடுத்து, தமிழரின் தார்மீக உரிமைப் போராட்டத்தின் நியாயத்தையும் இலங்கைத் தீவில் 65 ஆண்டுகளாக ஈழத்தமிழர் மீது அரங்கேறிவரும் இனப்படுகொலை வன்கொடுமையை சர்வதேச நாடுகளுக்கு விளக்கி,

உலக நாடுகளை சிறிலங்கா அரசுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமளவுக்கு இராசதந்திர ரீதியில் அரசியல் செயல்பாடுகளை முன்னெடுத்துவந்த எமது 16 புலம்பெயர் அமைப்புக்கள் மற்றும் புலம்பெயர் செயற்பாட்டாளர்கள், உணர்வாளர்கள், சில முன்னாள் போராளிகள் உள்ளடங்கலாக 424 பேரை அண்மையில் சிறிலங்கா பேரினவாத அரசு தடை விதித்திருப்பதானது அப்பட்டமான மனிதவுரிமை மீறல் என்பதோடு, சனநாயகத்துக்கு எதிரான சர்வாதிகார செயற்பாடு ஆகும்.

எமது பாரம்பரிய தாயகமான தமிழீழ தேசத்தின் மீட்பினையும் சிங்கள பாசிச அரசுகளின் இனக்கொலையிலிருந்து தமிழ்மக்களை பாதுகாப்பதை பிரதான இலக்காகவும், சமகாலத்தில் புலம்பெயர்ந்து வாழும் நாம் எமது மொழி, கலை, கலாசார விழுமியங்களைக் காத்து எமது எதிர்காலச் சந்ததியினர் உலகில் தலைசிறந்த மனிதர்களாக உருவாவதற்கு உழைக்கும் நோக்கத்தினையும் தன்னகத்தே கொண்ட அமைப்பே தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவாகும்.

அளப்பரிய தியாக உணர்வும் மானுடநேயமும் கொண்டோர், சிறந்த கல்விமான்கள், தேசப்பற்றாளர்கள், மாமனிதர்கள் ஆகியோரை உள்ளடக்கி உருவாக்கப்பட்டதே தமிழர் ஒருங்கிணைப்புக் குழு.

பூமிப்பந்தின் அனைத்துப்பரப்பிலும் சேவைகளை முன்னெடுத்துவரும் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவானது, சமூக அக்கறைகொண்ட ஆயிரமாயிரம் தொண்டர்களைத் தன்னகத்தே உள்ளடக்கியுள்ள, தமிழினத்தை அடையாளப்படுத்திநிற்கும் தனித்துவமான, கட்டுக்கோப்பான ஒரு பாரம்பரியம்மிக்க அமைப்பாகும்.

தமிழருக்கு எதிரான ஆயுத வன்முறைக்கு எதிராகவும் பட்டினிப் போருக்கு எதிராகவும் நாடுகளின் சட்டங்களுக்கு உட்பட்டு பெரும்பங்காற்றிவரும் புலம்பெயர் தமிழ் அமைப்புக்களைத் தடை செய்வதனூடாக தமக்கெதிரான சர்வதேச அழுத்தங்களிலிருந்து தப்பிவடலாம் எனச் சிங்களம் கற்பனையில் மிதக்கின்றது.

போரினால் ஒடுக்கப்பட்ட மக்களின் மறுவாழ்விற்காகவும் தமிழருக்கு எதிரான இனவழிப்பைத் தடுத்து நிறுத்துவதற்காகவும் இழைக்கப்பட்ட கொடுமைகளுக்கு சர்வதேசத்திடம் நீதிகேட்டும் போராடிவரும் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு உட்பட 16 தமிழ் அமைப்புக்களையும் உலகின் எந்தப் பரப்பில் வாழ்ந்தாலும் “எமது மண் எமக்கு வேண்டும்” என்ற கொள்கையோடு வாழ்ந்துவரும் உலகத் தமிழர்களையும் தடை செய்திருக்கும் சிங்கள அரசின் கீழ்த்தரமான நடவடிக்கையை தமிழ்மக்கள் சார்பாக நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம். அதேவேளை, இந்தத் தடைகளைக் கண்டு நாம் அஞ்சியோட மாட்டோம் என்பதையும் திட்டவட்டமாகத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

எமது தாயக உறவுகள் நாளாந்தம் கைது, சித்திரவதை, கொலை, பாலியல் வன்கொடுமை, இனக்கலப்பு, கலாசாரச் சீரழிவு, நில ஆக்கிரமிப்பு, மொழிச் சிதைவு, அடிமைப்பட்ட வாழ்வு எனப் பலவழிகளிலும் நசுக்கப்பட்டு திட்டமிட்ட ஒரு நவீன மென்தீவிர இனவழிப்புக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்கள்.

நாட்டின் இறைமையுள்ள அரசு என்ற ஆயுதத்தால் பெரும்பாலான சர்வதேச நாடுகளின் ஆதரவோடு தமிழர்களை இலங்கைத் தீவிலிருந்து சிறிலங்கா அரசு படிப்படியாக அழித்துவருகிறது. அதன் இராசதந்திர சூழ்ச்சியாலும் நயவஞ்சகப் பொய்ப் பரப்புரையாலும் சர்வதேச நாடுகளின் ஆதரவை திரட்டி தமிழர்களை அழிக்கின்ற வன்செயலை எந்தவித தயக்கமும் இன்றி மிகவும் முனைப்போடு செய்துவருகிறது.

இப்படியாக அழிக்கப்பட்டுவரும் எமது இனத்தையும் உரிமைகளையும் பாதுகாப்பதற்காக போராடிவருகின்ற புலம்பெயர் தமிழ் அமைப்புக்களையும் மனிதவுரிமைச் செயற்பாட்டாளர்களையும் சிறிலங்கா இனவாத அரசு தடைசெய்திருப்பதானது தமிழரின் பிரதிநிதித்துவத்தை முற்றாக ஒழித்துக்கட்டுவதோடு, தமிழர்களை கூறுபோட முற்படுகின்ற செயலாகும்.

தாயகத் தமிழர்களின் புலத்தில் வாழும் உறவுகளுடனான இணைப்பைத் துண்டிப்பது, அவ்வாறு துண்டிப்பதன் மூலம் தாய்நாட்டில் வசிக்கும் தமிழர்களை தனிமைப்படுத்தி, சர்வதேசத்தின் கண்களை மறைத்து, தமது இனப்படுகொலை செயல்திட்டத்தை மேலும் தீவிரப்படுத்துவது. இதை எதிர்க்கும் சக்தியாகவுள்ள புலம்பெயர் தமிழ்ச் சமூகத்தை சட்டவிரோதமாக்குவது. இதுவே இன்றைய சிங்கள அரசின் தடைக்கான காரணங்களாக உள்ளன.

மேலும், தமிழர்கள் அடுத்த கட்ட அமைதி வடிவிலான உரிமைப் போராட்டங்களை முன்னெடுப்பதை சிந்திக்கவிடாது முடக்குவதோடு தமிழ்மக்கள் மத்தியில் அச்சவுணர்வை ஏற்படுத்தும் ஓர் பாரிய உளவியற் போரை கட்டவிழ்த்துவிட்டுள்ளது.

சில வாரங்களாக நடைபெற்றுவரும் சோடிக்கப்பட்ட புலிகளின் மீளுருவாக்கம் பற்றிய நாடகமும் அதைக் காரணங்காட்டி நிகழ்த்தப்பட்டுவரும் கைதுகள், கடத்தல்கள், கொலைகள் என்பவையும் இந்த அச்சமூட்டல் மற்றும் சர்வதேசத்திடமிருந்து தமிழர்களை அன்னியப்படுத்துதல் என்பவற்றையே இலக்காகக் கொண்டுள்ளன. இதன் உச்சக்கட்டமே புலம்பெயர் தமிழர்மீதான தடையாக அமைகின்றது.

அதாவது, மாறிவரும் உலக ஒழுங்கில் அண்மையில் நிறைவேற்றப்பட்ட சிறிலங்காவுக்கு எதிரான ஐ.நா.வின் சர்வதேச விசாரணை ஒருவேளை முன்னெடுக்கப்படுமானால் சாட்சிகளையும் ஆதாரங்களையும் ஒருங்கிணைத்துத் தரவல்ல அமைப்புகளைத் தடைசெய்வதனூடாக அச் சாட்சிகளையும் ஆதாரங்களையும் அதிகாரமற்றதாக்குவது அல்லது மலினப்படுத்துவதே அவர்களது நோக்கமாக இருக்கமுடியும்.

தமிழினத்துக்கு எதிராக கட்டவிழ்த்துவிடப்படும் இவ்வாறான தடைகள், அடக்குமுறைகள் ஒன்றும் தமிழர்களுக்கு புதியவை அல்ல. நாம் இன்னும் வீரத்தோடும் எழுச்சியோடும் எமது உரிமைப் போராட்டத்தை முன்னெடுக்க வேண்டியது இன்றைய காலத்தின் கட்டாயமாக உள்ளது. இந்த தடைகளையும் சவால்களையும் கடந்து எமது இலட்சியப் பாதையில் எவ்வாறு வீறுகொண்டு பயணிக்கப் போகுறோம் என்பதில்தான் எமது வெற்றி தங்கியுள்ளது.

அடுத்தகட்ட வினைத்திறன் மிக்க செயல் முன்னகர்வுகளை மேற்கொள்வதற்கான ஆய்வுகளை அனைத்து தமிழ் அமைப்புகளும் ஒன்றிணைந்து மேற்கொள்ள வேண்டும். குறிப்பாக பல்வேறு நாடுகளோடும் நாட்டு மக்களோடும் அனைத்துவகையிலும் உறவை வளர்த்துக்கொள்ளல், அவற்றின் ஆதரவை திரட்டுதல், இலங்கையில் நடைபெறும் மனிதவுரிமை மீறல்களை தவறாது சேகரித்து ஆவணமாக்குதல்,

மனிதவுரிமை அமைப்புக்களை நமக்காகக் குரல்தர வைத்தல் போன்ற அரசியல் நிர்வாகப் பணிகளோடு, சிங்களப் பாசிசவாதிகளிடம் கையேந்தும் நிலையிலிருந்து எமது மக்களை விடுவித்து அவர்களுக்கான வாழ்வாதார உதவிகளை நாமும் நாம் வாழும் நாட்டவரும் இணைந்து முன்னெடுத்தல், கல்வியை மேம்படுத்தல், தமிழ் மக்களினதும் அவர்களது அரசியல் சமுதாய உரிமைகளிலும் அக்கறைகொண்டோரை தாயகத்தில் பாதுகாப்பதற்கு சர்வதேச அரசுகளையம் துறைசார் அமைப்புக்களையும் நாடுவது போன்ற பல்வேறு பணிகளை நேர்த்தியாகவும் நேர்மையாகவும் முன்னெடுக்க வேண்டும்.

இப்படி பல்வேறு, மிகவும் அத்தியாவசியமாக முன்னெடுக்கப்பட வேண்டிய கடமைகளை ஆய்வு செய்து அனைத்து அமைப்புகளும் ஒன்றுபட்டு தங்கள் தங்கள் பணிகளை கடமைப் பங்கீட்டின் அடிப்படையில் பொறுப்பேற்று குறித்த ஒரு இலக்கை நோக்கி எல்லோரும் சமாந்தரமாக பயணிக்க வேண்டிய தேவை உள்ளது.

எம்மை குழப்புவதற்காகவும் எமது நகர்வுகளை முடக்குவதற்காகவும் எதிரி நாளாந்தம் ஏதோவொரு உளவியல், நாசகார வேலையை செய்தவண்ணமே இருப்பான். அதைக்கண்டு அஞ்சிவிடாது அல்லது எமது கவனத்தை குலைக்காது நாம் எமது நிர்ணயிக்கப்பட்ட பாதையில் எமக்கான குறித்த கடமையை செய்தவண்ணமே இருக்கவேண்டும்.

எமது இனத்தின் விடுதலைக்காக நாம் எல்லோரும் ஒன்றுபட்டுப் போராடவேண்டியது எமது தார்மீக வரலாற்றுக் கடமையாகும். எமது தேசியத் தலைவர் மேதகு. வே. பிரபாகரன் அவர்கள் கூறியிருப்பது போல், “அனைத்துத் தமிழ் மக்களும் ஒரே இனம் என்ற தேசாபிமான உணர்வுடன் போராட்டத்தில் பங்கு கொண்டால் எமது விடுதலை இலட்சியம் வெற்றி பெறுவது நிச்சயம்.” என்னும் அவர்களின் கருத்துக்களை நெஞ்சிலே சுமந்துகொண்டு இந்த போராட்டத்தை ஒவ்வொரு தமிழ் மகனும் முன்னெடுக்க முன்வரவேண்டும்.

எனவே, எமது அன்புக்குரிய தமிழ் மக்கள் ஒவ்வொருவரும் தங்களிடம் கிடைக்கின்ற ஒவ்வொரு சிறு கடமையைக்கூட ஆர்வத்தோடு, சிறப்பாகச் செய்ய முன்வர வேண்டும். இது மக்களுடைய போராட்டம்.

மக்கள் தங்கள் உரிமைகளை மீட்பதற்கான போராட்டம். எங்களுடைய விடுதலையை பெறுகின்றவரை, எங்களுடைய சுதந்திர தமிழீழத்தை மீட்கின்றவரை நாம் ஓயாது தொடர்ந்து போராட வேண்டியது எமது இனத்துக்கான தார்மீக நியதியாக உள்ளது.

காலத்தின் பாதையில், எமக்கான வழிகளை உருவாக்கி, ஒவ்வொருவரும் ஒரு விடுதலைப் போராளியாகமாறி இந்தப் புதிய பரிமாணத்தில் நகரும் போராட்டத்தை கையிலெடுத்து இலக்கை நோக்கி எல்லோரும் ஒன்றுபட்டு உழைப்போமாக.

“தமிழரின் தாகம் தமிழீழ தாயகம்.”

1.சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு
2. பிரித்தானியா தமிழர் ஒருங்கிணைப்புக் குழு
3. யேர்மன் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு
4. இத்தாலி தமிழர் ஒருங்கிணைப்புக் குழு
5. பிரான்ஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு
6. நோர்வே தமிழர் ஒருங்கிணைப்புக் குழு
7. நியூசீலான்ந் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு
8. ஓஸ்ரேலியா தமிழர் ஒருங்கிணைப்புக் குழு
9. சுவீடன் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு
10.நெதர்லாண்ட் தமிழர் பேரவை
11. பெல்ஜீயம தமிழர் கலை பண்பாட்டுக் கழகம்
12. டென்மார்க் தமிழ் அமைப்புகளின் ஒன்றியம்

 

SHARE