சர்வதேசத்தின் நடுநிலைமை இருந்தால் மாத்திரமே இனப்பிரச்சினைக்கான தீர்வு எட்டப்படும் எனவும் கூட்டமைப்பு சுட்டிக்காட்டியது.
ஐ.நா. மனித உரிமைப் பேரவையின் 26ஆவது கூட்டத்தொடர் ஆரம்பமாகியுள்ள நிலையில், அரச மற்றும் எதிர்த்தரப்புக்கள் அதிகாரப் பகிர்வு விடயத்தில் கருத்துக்களை வெளியிடுகின்றமை தொடர்பில் வினவிய போதே தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,
யுத்தம் முடிவடைந்து ஐந்து ஆண்டுகளில் எவரும் அதிகாரப் பகிர்வு பற்றியோ இரு தரப்பு இணக்கப்பாடு பற்றியோ பேச விரும்பவில்லை.
இன்று இலங்கை மீதான சர்வதேச விசாரணையொன்று உறுதிப்படுத்தப்பட்ட பின்னர் ஆளும் கட்சி உறுப்பினர்களும் எதிர்க்கட்சிகளும் அதிகாரப் பகிர்வு பற்றிய கருத்துக்களை வெளியிடுகின்றனர்.
உண்மையிலேயே தமிழ் மக்களின் பிரச்சினைக்கான தீர்வினை காண இவர்கள் விரும்பினால் ஆரம்பத்திலேயே அதிகாரப் பகிர்வு பற்றி வலியுறுத்தியிருக்க முடியும்.- சுரேஷ் பிரேமச்சந்திரன்
அரசாங்கம் தமது சுயநலத்தினை கருத்திற் கொண்டே இவ்வாறு கருத்துக்களை வெளியிடுகின்றது.
இனப் பிரச்சினைக்கான தீர்வினை பெற்றுக்கொள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசாங்கத்துடன் பலதரப்பட்ட பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்தும் பயனற்று போய்விட்டது.
இவ்வாறான நிலைமையில் இணக்கப்பாட்டினை அரச தரப்பு விரும்பாத சந்தர்ப்பத்தில் சர்வதேசத்தின் தலையீட்டின் மூலம் சர்வதேச மத்தியஸ்தத்தில் ஓர் தீர்வினைப் பெற்றுக்கொள்வதே ஒரே வழியாகும். அதனையே நாமும் எதிர்பார்க்கின்றோம்.
அதேபோல் இப்போதாவது அரசாங்கம் தமது உறுதியான நிலைப்பாடு என்ன என்பதை வெளிப்படையாகத் தெரிவிக்க வேண்டும்.
அல்லது அதிகாரப் பகிர்வு பற்றி எம்முடன் பேச்சுவார்த்தை நடாத்த தயாரா? என்பதை தெரிவிக்க வேண்டும்.
மாறாக அரசாங்கத்திற்குள் இருக்கும் ஒரு சிலர் அதிகாரப் பகிர்வு விடயத்தில் பேசத் தயாரில்லை எனக் கூறுவதும், வேறு சிலர் அதிகாரப் பகிர்வு பற்றி பேசுவதும் அர்த்தமற்ற விடயமாகும்.
வெறுமனே காலத்தை கடத்தும் பேச்சுவார்த்தைக்கு நாம் இனி ஒருபோதும் தயாரில்லை எனவும் அவர் தெரிவித்தார்.