பாராளுமன்ற உறுப்பினர் மாவை.சேனாதிராசாவே தமிழரசுக் கட்சியின் தலைமைப் பதவிக்குப் பொருத்தமானவர். தலைவர் இரா.சம்பந்தனுக்கு அடுத்தபடியாக அவரே தமிழரசுக் கட்சியை நீண்டகாலமாக கட்டிவளர்த்த பெருமைக்குரியவர் என வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்தார்.
இவ் விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
வடமாகாண ஆளுநர் மீள் நியமனம் காரணமாக முதலமைச்சர் பதவி விலகத் திட்டமிட்டுள்ளார் எனவும் முதலமைச்சர் பதவியிலிருந்து விலகி பெரிய பதவியை குறிவைக்கின்றார் எனவும் சிலர் கூறிவந்துள்ளனர்.
இவ் விடயங்கள் அனைத்தும் பொய் எனத் தெரிந்துகொண்ட பின்னர் அதே கதையைக் கூறியவர்கள், நான் தமிழரசுக் கட்சியின் தலைமைப் பதவிக்கு வரவுள்ளதாக கூறுகின்றனர்.
அப்பதவியை நான் பொறுப்பேற்பேன் என எவருமே நினைக்கக் கூடாது. உண்மையில் தமிழரசுக் கட்சியின் தலைமைப் பதவிக்கு மாவை.சேனாதிராசாவே வரவேண்டிவரும், வரக்கூடியவராகவும் உள்ளார்.
இதனை நான் உறுதியாக கூறுகின்றேன். நான் அறிந்தவரையில் கட்சியில் தலைமைகளும் அவ்வாறே கருதுகின்றனர்.
இவ்வாறான கதைகளைப் பரப்புவதன் மூலம் சிலர் கட்சியைச் சிதைக்க எடுக்கும் முயற்சியை முறியடித்து மாவை.சேனாதிராசாவிற்கு முழு ஒத்துழைப்பையும் வழங்குவேன் என்றார்.