ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பதவிகளில் இருந்து மகிந்த ராஜபக்ச ஆதரவாளர்களை களையெடுத்து விட்டு கட்சியில் தனது கரத்தை பலப்படுத்தியுள்ளார்.
பத்தரமுல்லையில் இன்று சனிக்கிழமை மாலை நடைபெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நிறைவேற்றுக் குழுக் கூட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளர் சுசில் பிரேம ஜயந்த, சுதந்திரக் கட்சியின் தேசிய அமைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச இந்த பதவியை முன்னர் வகித்து வந்ததுடன் அதனை ராஜினாமா செய்திருந்தார்.
தேசிய அமைப்பாளர் பதவிக்கு அமைச்சர் ராஜித சேனாரத்ன பரிந்துரைக்கப்பட்ட போதிலும் அவர் சுதந்திரக் கட்சியின் பிரதித் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
அதேவேளை மகிந்த ராஜபக்சவின் தீவிர ஆதரவாளரான முன்னாள் அமைச்சர் டளஸ் அழகப்பெரும வகித்து வந்த பொருளாளர் பதவி, வடமேல் மாகாண முன்னாள் முதலமைச்சர் எஸ்.பி. நாவின்னவுக்கு வழங்கப்பட்டுள்ளது.
கட்சியின் பொதுச் செயலாளர் பதவியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. முன்னாள் அமைச்சர் அனுரபிரியதர்ஷன யாப்பா தொடர்ந்தும் அந்த பதவியை வகிப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, மகிந்த ராஜபக்சவினால், சுதந்திரக் கட்சியின் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டிருந்த முன்னாள் பிரதி அமைச்சர் கருணா எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் தற்போது, சுதந்திரக் கட்சியின் உயர்மட்டத்தில் இருந்து ஓரங்கட்டப்பட்டுள்ளார்.