மே 18, நவம்பர் 27 இரு தினங்களையும் நினைவுகூரலுக்காக பிரகடனம் செய்யுங்கள்

526

வன்னிப் போரில் உயிரிழந்தவர்களுக்கான நினைவேந்தல் நிகழ்வு அகத்திலும் புறத்திலும் நடந்தேறின.

வன்னிப் போரில் பறிகொடுத்த எங்கள் உறவுகளை நினைவு கூருவது நம் தார்மீகக் கடமை. அதிலிருந்து விலகுவோமாயின் அது எங்கள் இருப்பைக் கேள்விக் குறியாக்கிவிடும்.

எனினும் நினைவேந்தல் தொடர்பில் படைத்தரப்பு அதீத முக்கியத்துவம் கொடுத்தது எதற்கானது என்று தெரியவில்லை.

நாட்டில் உத்தம தலைவர்கள் இருந்திருந்தால் வன்னிப் போரில் உயிரிழந்தவர்களின் நினைவு கூரலுக்காக பொது விடுமுறையையே வழங்கியிருப்பார்கள்.

போர் நடந்தது உண்மை. அதில் போராளிகள் மட்டுமல்ல பல்லாயிரக் கணக்கான தமிழ் மக்களும் உயிரிழந்து போயினர்.

போராளிகள், பொது மக்கள் என்ற சொற்பதங்கள் பொதுமையானவையே தவிர, அவற்றைச் சுருக்கிப்பார்த்தால் அவையாவும் மகன், உடன்பிறப்பு, கணவன், மனைவி, பிள்ளை, தாய், தந்தை என்ற உறவு முறைகளுக்குள் உள்ளடங்கும்.

இவ்வாறான உறவு முறை இருக்கும் போது நிச்சயமாக தங்களின் இரத்த உறவுகளை தமிழ் மக்கள் நினைவு கூருவர்.

இதைத் தடுக்க நினைப்பது மகா மடைமைத்தனம். எனவே நினைவு கூருவதை அரசு அங்கீகரிக்காமல் விட்டமை திருத்தப்பட வேண்டிய பிழை.

ஒவ்வொரு வருடத்திலும் மே 18 வரவே போகிறது. ஒவ்வொரு மே 18லும் இராணுவமும் பொலிஸூம் பாதுகாப்பு நடவடிக்கையை தீவிரமாக்கி ஒரு பதட்டமான சூழ்நிலையை ஏற்படுத்துவதானது, இந்த நாட்டில் அமைதியைக் குழப்புவதற்குப் போதுமானதாகும்.

எனவே இலங்கை அரசாங்கம் தமிழ் மக்களுடன் நல்லுறவை ஏற்படுத்த வேண்டுமாயின் முதலில் இரண்டு தினங்களை தமிழ் மக்களின் நினைவுகளுக்கான நாட்களாக அங்கீகரித்து அன்றைய நாட்களை பொது விடுமுறைக்குரிய நாட்களாகவும் பிரகடனம் செய்ய வேண்டும்.

அந்த இரு நாளில் ஒன்று மே 18. மற்றையது நவம்பர் 27. நாட்டில் நடந்த இன யுத்தத்தில் உயிரிழந்த அத்தனை தமிழ் மக்களையும் நினைவு கூருவதற்குரிய நாளாக மே 18ஐயும்.

விடுதலைப் போராட்டத்தில் உயிரிழந்த அத்தனை போராளிகளையும் (விடுதலைப் புலிகள் மட்டுமன்றி, அனைத்து அமைப்புகள் சார்பிலும் மண் மீட்புக்காக உயிரிழந்தவர்கள்) நினைவு கூரும் நாளாக நவம்பர் 27ஐயும் பிரகடனம் செய்ய வேண்டும்.

இதன் மூலம் தமிழ் மக்களின் நினைவுகூரல் உரிமை அரசினால் அங்கீகரிக்கப்பட்டது என்ற ஒரு நினைப்பு தமிழ் மக்களிடம் ஏற்படும். இது அரசு பற்றிய நேர்க்கணிய சிந்தனைக்கு இட்டுச் செல்லும்.

அதேநேரம் போரில் உயிரிழந்த படையினர், சிங்கள மக்கள் என்போருக்கான நினைவு நாட்களும் பிரகடனப்படுத்தப்படுவது பொருத்தமானது.

இவை மக்கள் மனங்களில் ஆழப்பதிந்துள்ள போர்வடுக்களை அகற்றுவதற்குப் பேருதவியாய் அமையும்.

இதை விடுத்து இதோ! தடுத்துக் காட்டுகிறோம் என்றால், அங்கு அரசியல் வியாபாரம் நடத்த முற்படும். எனவே உயிரிழந்தவர்களை நினைவு கூருவதில் அரசியல் ஆதாயம் உழைக்க எவரும் முற்படக்கூடாது.

மாறாக உயிரிழந்த ஆத்மாக்கள் சாந்தி அடைவதற்கான வழிபாடாகவும், நாங்கள் உயிர் வாழ்வதற்காக நீங்கள் குருதி சிந்தினீர்கள் என்ற நன்றி நினைப்பாகவும் அமைய வேண்டும்.

இதுவே பொருத்துடையது.

இதைவிடுத்து அரசியல் செல்வாக்கிற்கான ஒரு சந்தர்ப்பமாக நினைவு கூரலை எவரும் நினைத்து விடாதீர்கள்.

www.newstamilwin.com

SHARE