தாம் இலங்கை வந்திருப்பது, நாட்டின் மனித உரிமைகள் விடயங்கள் தொடர்பில் ஆராய்வதற்கு மாத்திரமே என்று ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம் பிள்ளை தெரிவித்துள்ளார்.
ஒரு வார கால விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ள நவநீதம் பிள்ளை இன்றைய தினம் வடக்கு பிரதேசத்திற்கான விஜயத்தினை மேற்கொண்டார்.
அவர் இன்றைய தினம் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர், வட மாகாண ஆளுனர் மற்றும் காணாமல் போனவர்களின் உறவினர்கள் ஆகியோருடன் கலந்துரையாடல்களை நடத்தியுள்ளார்.
வடக்கு ஆளுநர் ஜீ ஏ சந்திரசிறியுடன் இடம்பெற்ற சந்திப்பின் போது, மாவட்டத்தில் இடம்பெற்று வரும் அபிவிருத்திகள் தொடர்பில், ஆளுனரால், நவநீதம் பிள்ளைக்கு விளக்கமளிக்கப்பட்டது.
அவர், ஆளுநர் காரியாலயத்திற்கு செல்ல முன்பட்ட போது, அங்கு எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டது.
ஆர்ப்பாட்டம் மேற்கொண்டவர்கள், யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியில், தமது உறவினர்கள் கடத்திச் செல்லப்பட்டதாக தெரிவித்திருந்தனர்.
காணாமல் போனவர்களின் உறவினர்களினால் இணைந்து ஏற்படுத்திய இயக்கத்தினால் இந்த ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
ஆளுநருடனான சந்திப்பின் பின்னர், மனித உரிமைகள் ஆணையபாளர் நவநீதம்பிள்ளை, யாழ்ப்பாண பொது நூலகத்தில் இடம்பெற்ற கூட்டம் ஒன்றின் போதும் கலந்து கொண்டார்.
இந்த கூட்டத்தின் போது வடக்கின் அபிவிருத்தி தொடர்பில் கருத்துரைத்த அவர், தாம் வடக்கில் இடம்பெற்று வரும் மீளமைப்பு பணிகளை கண்காணித்தாக தெரிவித்தார்.
அதன் பின்னர் அவர் யாழ்ப்பாணத்தில் உள்ள உயர்ஸ்தானிகர் காரியாலயத்திற்கும் விஜயம் செய்தார்.
யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள குடியியல் சமூகம், பிரதேசவாசிகளுடனான கலந்துரையாடலின் பின்னர் கிளிநொச்சியில் உள்ள தேசிய தொழிற்பயிற்சி நிலையத்திற்கும் சென்றார்.
இதனை தொடர்ந்து மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம் பிள்ளை, இறுதி யுத்தம் இடம்பெற்ற முள்ளிவாய்கால், நந்திக்கடல் போன்ற பிரதேசங்களுக்குச் சென்றதுடன், பொது மக்களுடனும் கலந்துரையாடினார்.
இதன்போது காணாமல் போன தமது பிள்ளைகள், உறவினர்களை கண்டறிந்து தருமாறு பொது மக்களால் அவரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது.
அத்துடன், கேப்பாப்பிளவு, மாவடிகிராமம், கொக்கிலாய், கொக்குத் தொடுவாய் ஆகிய பிரதேசங்களுக்கு சென்ற அவர், அந்த பிரதேச பொது மக்களின் பிரச்சினைகளை கேட்டறிந்து கொண்டதுடன், அவற்றை நிவர்த்தி செய்ய தன்னாலான முயற்சிகளை மேற்கொள்வதாகவும் தெரிவித்தாக எமது செய்தி தொடர்பாளர் குறிப்பிட்டார்.
TPN NEWS