வடமாகண அபிவிருத்திப்பணிகள் அரசாங்கத்துடன் ஒத்துப்போவது தமிழீஈழ கனவை சிதைவடையச் செய்கிறது

561

வடமாகாணசபையின் அபிவிருத்தி நோக்கிய திட்டங்களில் ஒரு அங்கமாக இன்று முழங்காவில் கிருஸ்ணபுரம் பகுதியில் முழங்காவில் மாதர்சங்கத்தின் வேண்டுகோளின் அடிப்படையில் இன்று வடமாகாண முதலமைச்சர் நீதியரசர் விக்னேஸ்வரனால் கோழிக்குஞ்சு உற்பத்தி நிலையத்திற்கான அடிக்கல் நாட்டிவைக்கப்பட்டது.

வடமாகாணத்தின் மீன்பிடி போக்குவரத்து கிராம அபிவிருத்தி அமைச்சினால் ஒதுக்கப்பட்ட நிதியினால் வகுக்கப்பட்ட திட்டத்தின் அடிப்படையில் அமைச்சர் டெனீஸ்வரனின் பணிப்பின்பேரில் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகின்றது.

இன்று இந்த நிகழ்வு ஒழுங்கு செய்யப்பட்டிருப்பதை அறிந்து நிகழ்விற்கு மக்களை செல்லவிடாது தடுக்கும் நோக்கில் இராணுவம் விடுத்த பல்வேறு அச்சுறுத்தல்களை மீறி மக்கள் தம்மால்தெரிவு செய்யப்பட்ட வடமாகாண சபையின் வேலைத்திட்டத்தின் ஆரம்ப நிகழ்விற்கு பெருவாரியாக ஆதரவு கொடுத்திருந்தனர்.

இந்த நிகழ்வில் முதன்மை விருந்தினராக முதல்வர் கலந்துகொள்ள பா.உறுப்பினர் சி.சிறீதரன் பா.உறுப்பினர் சுரேஸ்பிரேமச்சந்திரன் கல்வி அமைச்சர் த.குருகுலராஜா வடமாகாணசபை உறுப்பினர் அரியரத்தினம் உட்பட வடாமகாணசபையின் அமைச்சின் செயலாளர்கள் அதிகாரிகள் உட்பட மாதர்சங்க உறுப்பினர்கள் பூநகரி பிரதேசபை தவிசாளர் உறுப்பினர்கள் என பெருமளவானோர் கலந்துகொண்டு சிறப்பித்திருந்தனர்.

இங்கு உரையாற்றிய அமைச்சர் டெனீஸ்வரன்

தனது அமைச்சினால் பெண்களுக்கும் போரில் அங்கங்களை இழந்த சகோதரர்களுக்கும் வேலைத்திட்டஙகளில் முன்னுரிமை அளிக்கப்படும் தெரிவித்ததோடு இத்திட்டம் விரைவாக முழுமைப்படுத்தப்பட்டு மாதர் சங்கத்திடம் கையளிக்கப்படுமென உறுதி அளித்தார்.

நிகழ்வில் உரையாற்றிய பா.உறுப்பினர் சி.சிறீதரன்

வடமாகாண சபை வடக்கு கிழக்கு இணைந்த எமது தாயகத்தை நாம் ஆள்வதற்கான சிறுபுள்ளியென தெரிவித்துடன் வீட்டுத்திட்டம் தொடர்பாக சில கைக்கூலிகள் கூறும் கருத்துக்களால் மக்கள் குழப்பமடையத்தேவையில்லை எனவும் அதற்கான வழிவகைகளை எமது கட்சியால் காட்டமுடிமென நம்பிக்கை வெளியிட்டார்.

அத்தோடு பல மக்களின் காணிகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதால் எமது மக்களால் தமதுசொந்த காலில் நின்று தொழில் செய்ய முடியாத நிலையுள்ளதாகவும் தெரிவித்தார்.

இங்கு உரையாற்றி பா.உறுப்பினர் சுரேஸ்பிரேமசந்திரன்

வடமாகாண சபையின் நடவடிக்கைகளுக்கு இராணுவம் தடைகள் போடுவதை கண்டித்ததுடன்.எந்த தடைகளாலும் தமிழ் மக்கள் தம் சுதந்திரத்தை பெறப்போவதை ஒருபோதும் தடுக்கமுடியாது எனவும் தெரிவித்த அவர் குளங்கள் புனரமைக்கப்படவேண்டுமெனவும் வடமாகாண சபையின் கீழ் செயலகங்களில் காணப்படும் நிதிமோசடிகள் ஆய்வு செய்யப்பட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவேண்டுமெனவும் தெரிவித்தார்.

நிகழ்வில் முதன்மை விருந்தினராக கலந்துகொண்ட முதலமைச்சர் விக்னேஸ்வரன் உரையாற்றும்போது

அரசாங்கம் வடக்கு கிழக்கில் இன்னும் 25வருடங்களுக்கு இராணுவத்தை நிறுத்தி தமிழர்களை தலையெடுக்கவிடாமல் சிங்கள குடியேற்றங்களை செய்து அடக்குமுறைகளை மேற்கொள்ளும் திட்டத்தை தான் 2009க்கு முன்னமே அறிந்துள்ளதாகவும் தற்போது அதையே இராணுவம் செய்துவருதாகவும் தெரிவித்தார்.அரசாங்கம் தொட்டிலையும் ஆட்டி பிள்ளையையும் கிள்ளி விடும் வேலையை செய்துவருவதை நான் அறிவேனென தெரிவித்தார்;.

இராணுவம் நினைப்பதுபோல வடக்கு கிழக்கில் நிலைக்க முடியாது.மனிதன் ஒன்று நினைக்க கடவுள் ஒன்று நினைப்பார் என தெரிவித்து அங்கு வந்திருந்த இராணுவ புலனாய்வாளர்களுக்கும் விளங்கும்படி சிங்கள மொழியிலும் இராணுவத்தின் நடவடிக்கைகள் மீதான தன் கண்டனத்தை தெரிவித்தார்.

அத்துடன் பல்வேறு இராணுவத்தடைகளையும் மீறி நிகழ்வில் கலந்துகொண்ட மக்களுக்கு நன்றி தெரிவித்தார்.

(மேலதிக இணைப்பு) இராணுவத்தினரின் படங்களை எடுத்து விளம்பரம் செய்வோம்: எச்சரிக்கும் விக்னேஸ்வரன்

மக்களுக்குப் பயனளிக்கும் பலவித செயற்திட்டங்களில் நாம் இப்பொழுது இறங்கியுள்ளோம். இதுவரை காலமும் “நாங்கள் எதைச் செய்தோம்?” என்றார்கள். இப்பொழுது “ஏன் செய்கின்றோம்?” என்கிறார்கள் என வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

இராணுவம் வடகிழக்கு மாகாணத்தில் தொடர்ந்து இருபத்து ஐந்து வருடங்களுக்கேனும் இருக்கவேண்டும் என்று ஆட்சியாளர்கள் எதிர்பார்க்கின்றார்கள். அந்தக் காலகட்டத்தில் சிங்களவரை பெருவாரியாகக் கொண்டு வந்து இங்கு குடியிருத்தி,  இந்நாட்டில் பறங்கியர் ஒருகாலத்தில் இருந்தார்கள் என்று நாம் எவ்வாறு இப்பொழுது கூறுகின்றோமோ, அதே போல் இங்கு தமிழ்ப் பேசும் மக்கள் ஒருகாலத்தில் இருந்தார்கள் என்று கூறக் கூடிய ஒரு காலகட்டத்தை உருவாக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

எனக்குக் கிடைத்த தகவலின் படி 2008ம் ஆண்டிலேயே அரசாங்கம் சார்ந்த உயர் அதிகாரி ஒருவர் “போர் விரைவில் முடிந்து விடும். ஆனால் எமது இராணுவம் குறைந்தது 25 வருடங்களாவது வடகிழக்கு மாகாணங்களில் நிலைநிறுத்தப்பட்டு தமிழ்ப் பேசும் மக்களைத் தலையெடுக்க விடாமல் பண்ண வேண்டும்” என்று கூறியுள்ளாராம்.

அவர் குறிப்பிட்ட கூற்றுக்கு ஏற்பவே நடவடிக்கைகள் நடந்து வருவதாகத் தென்படுகிறது. அவர்களுக்கு ஒன்று மட்டும் கூற விரும்புகிறேன் 1988ம் ஆண்டில் ஒரு இந்திய இராணுவ உயர் அதிகாரி என் நண்பர் ஒருவருக்குக் கூறினாராம் பின்வருமாறு, “நாங்கள் இங்கு வந்து விட்டோம். இனி 100 வருடங்களுக்கு இலங்கையை விட்டுப் போக மாட்டோம்”
என்றாராம்.

ஆனால் அடுத்த வருடமே பிரதமர் வீ.பீ.சிங்கின் வருகையுடன் இந்திய இராணுவம் வாபஸ் பெறப்பட்டது. Man proposes God disposes என்பார்கள் அதாவது மனிதன் முன்மொழிவான் இறைவன் முடித்து வைப்பான் என்பதின் அர்த்தத்தை நாங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

இராணுவத்தில் இருந்து சிலர் இங்கு வந்து படமெடுத்துக் கொண்டிருப்பதாக அறிகிறேன். ஏன் என்று எனக்குப் புரியவில்லை. எமது பாதுகாப்புக்கா அல்லது மக்களை அச்சுறுத்துவதற்கா படம் எடுக்கின்றீர்கள்? பாதுகாப்பென்றால் எங்கள் மக்களுக்குத் தேவையான ஒரேயொரு பாதுகாப்பு இராணுவத்தினரிடம் இருந்து தான்.

நாங்கள் இராணுவத்தினரை எங்களைப் பாதுகாருங்கள் என்று கூறவில்லை.

இராணுவம் இங்கு இருப்பதால் எம் மக்கள் தான் பாதுகாப்பின்றி பயத்திற்கு ஆளாகின்றார்கள். படம் எடுப்போர் அவ்வாறு செய்வதை உடனே நிறுத்த வேண்டும். இல்லை என்றால் எங்கள் இளைஞர் யுவதிகளைக் கொண்டு உங்களின் படங்களை நாம் எடுத்து தெற்கிலே பத்திரிகைகளில் விளம்பரம் செய்வோம்.  இவ்வாறு தான் இராணுவம் இங்கு படம் எடுக்கின்றார்கள்  என்றுசொல்லி வைப்போம்.

இதே போல்த் தான் கடந்த 7ம் திகதி இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வருடாந்த மகாநாட்டிற்கு கனகராயன் குளம், நெடுங்கேணி, புதுக்குடியிருப்பு போன்ற இடங்களில் இருந்து வர எத்தனித்த எம்மக்கள் இராணுவத்தினரால் தடுத்து நிறுத்தப்பட்டனர்.

தொட்டிலையும் ஆட்டிவிட்டு குழந்தையையும் கிள்ளிவிடும் பணியில்  அரசாங்கம் ஈடுபட்டு வருகின்றது. ஒரு புறம் எம்முள் இணக்கம் வேண்டும், நாம் சேர்ந்து பணியாற்ற வேண்டும் என்று ஊரறிய, உலகறிய, வாய் வழியகக் கத்துகின்றார்கள் அரசாங்கத்தவர்கள்.

மறுபுறம் இராணுவக் கட்டுப்பாட்டைக் கூட்டி மக்களை அச்சுறுத்தி அவர்களின் ஜனநாயக உரிமைகளை அவர்கள் பிரயோகிப்பதைத் தடுக்க முயல்கின்றார்கள்.

எமது தமிழ்ப் பேசும் மக்கள் தமது மத ரீதியான வேற்றுமைகளை மறந்து ஒருமித்துச் செயலாற்ற முன்வர வேண்டும். வேற்றுமைகளை நாம் விரிவடையச் செய்தால் 25 வருடமல்ல 50 வருடங்களுக்கும் இராணுவத்தை வடகிழக்கு மாகாணங்களில் இருந்து திருப்பி அனுப்ப முடியாது.

எம் மக்களிடையே கலாச்சாரச் சீரழிவுகளை ஏற்படுத்தி, பாகுபாட்டை ஏற்படுத்தி மக்கள் ஒன்று சேராமல் தடுக்கச் சதிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதனை நாம் எமது ஒற்றுமையால் முறியடிக்க வேண்டும் அதற்கேற்றவாறு தான் மக்களுக்குப் பயன் தரும் வேலைத்திட்டங்களை, மக்களுக்கு வாழ்வாதாரங்களை வழங்கும் வேலைத்திட்டங்களை உருவாக்கி நடைமுறைப்படுத்தி வருகின்றோம்.

எந்தவித பாகுபாடுமின்றி இப்பேர்ப்பட்ட வேலைத்திட்டங்களில் எமது தமிழ்ப் பேசும் மக்கள் அனைவரும் ஐக்கியப்படுத்தப்படுவார்கள்.  எல்லாவிதத் தடைகளையும் நாம் தகர்த்தெறிந்து முன்னேறும் காலம் தற்பொழுது உதித்துள்ளது என முதலைச்சர் விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

TPN NEWS

SHARE