வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனை அழைத்துச் சென்று பொய்யான நாடகம் ஒன்றை காட்டுவதற்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச முயற்சித்தார்

542
இந்தியாவின் காங்கிரஸ் அரசாங்கத்திற்கு வழங்கப்பட்ட அனைத்து வாக்குறுதிகளையும் ஒப்பந்தங்களையும் நிறைவேற்றுமாறு புதிய பிரதமர் நரேந்திர மோடி இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்வை வலியுறுத்தியுள்ளமை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு மகிழ்ச்சியை தருகின்றது என அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் ஏற்படுத்திக் கொண்ட உடன்படிக்கையின் பிரகாரம் உருவாக்கப்பட்டதும் அரசியல் அமைப்பில் ஏற்றுக்கொள்ளப்பட்டதுமான 13ம் திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்த வேண்டும் என்றதுடன், அதற்கு அப்பாலும் சென்று அதிகாரப் பகிர்வை அர்த்தப்படுத்த வேண்டும் என்று பிரதமர் மோடி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுடனான முதலாவது சந்திப்பிலேயே வலியுறுத்தியுள்ளார்.

எனவே, இனியும் காலம் தாழ்த்தாது 13ம் திருத்தம், அதிகாரப்பகிர்வு என்பவற்றை அரசாங்கம் மீள ஆரம்பிக்க வேண்டும் என்றும் சுட்டிக்காட்டினார்.

கொழும்பில் நேற்று நடைபெற்ற அதிகாரத்தைப் பகிர்ந்து நாட்டை ஒருமைப்படுத்தும் அமைப்பு ஊடகவியலாளர் சந்திப்பிலேயே சுமந்திரன் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து அங்கு உரையாற்றுகையில் தெரிவித்ததாவது,

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கும் காங்கிரஸ் கட்சித் தலைமையிலான அரசாங்கத்திற்கும் தாம் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றத் தேவையில்லை. அவர்கள் ஆட்சியில் இல்லாதபோது அவர்களுக்கு அளித்த வாக்குறுதிகளும் செயலற்றுப் போய்விட்டது என்ற எண்ணத்திலேயே இலங்கை அரசாங்கம் மகிழ்ச்சியில் இருந்தது. ஆனால், கொடுக்கப்பட்ட வாக்குறுதிகள் மன்மோகன் சிங்கிற்கோ காங்கிரஸிற்கோ அல்ல. இந்தியாவிற்கு என்பதனை மோடி நினைவுபடுத்தியுள்ளார்.

இந்தியப் பிரதமரின் பதவி ஏற்பு விழாவிற்கு வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனை அழைத்துச் சென்று பொய்யான நாடகம் ஒன்றை காட்டுவதற்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச முயற்சித்தார். ஆனால், மிகவும் துணிச்சலுடன் மஹிந்தவின் அழைப்பை முதலமைச்சர் வெளிப்படையாக மறுத்தார். நான் தங்களுடன் வந்தால் நாட்டில் நிலவும் உண்மை மறைக்கப்படும் என்றும் முதலமைச்சர் தெரிவித்தார். இந்த செய்தியும் இந்தியாவிற்குச் சென்றுள்ளது.

13ம் திருத்தம் அதற்கு அப்பாலான அதிகாரப்பகிர்வு என்பதனைவிட சாதாரண விடயங்களில்கூட நாம் ஒடுக்கப்படுகின்றோம். எமது வடமாகாண முதலமைச்சருக்கான அதிகாரங்கள் என்பதே கேள்விக்குறியாக உள்ளன. முதலமைச்சரின் விருப்புக்கமைய மாகாண சபையின் பிரதம செயலாளர் மற்றும் பிரதி பொலிஸ்மா அதிபரைக்கூட முதலமைச்சரினால் நியமிக்க முடியவில்லை. முதலமைச்சர் சரியான விதத்தில் யாப்பு அதிகாரங்களின்படி இயங்குவதற்குக்கூட இங்கு அனுமதி இல்லை.

இந்த சூழ்நிலைகளையெல்லாம் புரிந்துகொண்ட பின்னரே இந்தியப் பிரதமர் நரேந்திரமோடி ஜனாதிபதிக்கு 13ம் திருத்தம் மற்றும் அதிகாரப் பகிர்வு தொடர்பில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இந்து நாடு இந்திய நாடு என்ற வகையில் இந்தியப் பிரதமர் எமக்கு இழைக்கப்பட்ட அநீதிகளை விளக்கமாக புரிந்து கொண்டுள்ளார் என்பன ஜனாதிபதி மஹிந்தவுடனான முதலாவது சந்திப்பே உலகிற்கு வெளிப்படுத்தியுள்ளது.

இந்திய வெளியுறவு செயலாளர் சுஜாதா சிங் வெளியிட்டுள்ள ஊடக செய்தி இதனை தெளிவுப்படுத்தியுள்ளது.

எனவே, இனியும் காலம் தாழ்த்தி எம்மை அரசாங்கம் ஏமாற்ற முடியாது. 13ம் அரசியலமைப்பு திருத்தத்தை அமுல்படுத்தி அதற்கு அப்பாலான அதிகாரப் பகிர்வை நடைமுறைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் காலம் தாழ்த்தாது உடனடியாக செயற்பட வேண்டும் என்றார்

சுமந்திரன் எம்.பி.

 

SHARE