அதிகாரத்தைப் பகிர்ந்துகொள்ள ஆப்கன் அதிபர் பதவி வேட்பாளர்கள் இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது

423
ஆப்கானிஸ்தானில் கடந்த ஏப்ரல் மாதம் புதிய அதிபர் பதவிக்கான தேர்தல் நடைபெற்றது. இதன் முதல் சுற்று வாக்கு எண்ணிக்கையில் வேட்பாளர் அப்துல்லா அப்துல்லா முன்னிலை பெற்றிருந்ததாக அறிவிக்கப்பட்டது.

அதன் பின்னர் ஜூலை மாதம் வெளியிடப்பட்ட இரண்டாவது சுற்று வாக்கு எண்ணிக்கையில் மற்றொரு வேட்பாளரான அஷ்ரப் கனிக்கு சாதகமாக வாக்கு முடிவுகள் இருக்க அப்துல்லா இதனை ஏற்க மறுத்தார். போலி வாக்குகள் கலந்துள்ளதாகவும் அவற்றை நீக்கி வாக்கு எண்ணிக்கையை மீண்டும் நடத்தவேண்டும் என்று அவர் கோரினார். கடந்த 2001ஆம் ஆண்டிலிருந்து தலிபான் தீவிரவாதிகளுக்கு எதிராக செயல்பட்டு அந்நாட்டில் அமைதியை நிலைநாட்ட அமெரிக்க உள்ளிட்ட நேட்டோ துருப்புகள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தன.

இந்த ஆண்டிலிருந்து இந்தத் துருப்புகள் அங்கிருந்து விலகத் தொடங்கியுள்ள நிலையில் அங்கு ஏற்படும் அரசியல் நெருக்கடி தலிபான்களின் தாக்குதல்களை இன்னும் அதிகப்படுத்தக்கூடும் என்று கருதிய உலக நாடுகள் ஐ.நா மேற்பார்வையாளர்கள் தலைமையில் மறு வாக்கு எண்ணிக்கைக்கு ஏற்பாடு செய்தது. இதிலும் பிரச்சினைகள் ஏற்பட்ட நிலையில் எட்டு மில்லியனுக்கும் மேற்பட்ட வாக்குகள் எண்ணப்பட்டு இன்று முடிவுகள் அறிவிக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், நேற்று இரவு வேட்பாளர்கள் இருவருக்கும் இடையில் அதிகாரங்களைப் பகிர்வு செய்துகொள்ளும் ஒற்றுமை அரசாங்கம் குறித்த உடன்படிக்கை ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதிபராக அறிவிக்கப்பட உள்ள அஷ்ரப் கனி இந்த ஒப்பந்தத்திற்குப் பின் அப்துல்லாவை கட்டிப்பிடித்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.தற்போதைய அதிபர் ஹமீது கர்சாய் தங்கியிருக்கும் அதிபர் மாளிகையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சி தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டது. இன்னும் ஒரு வாரத்திற்குள் கனி ஆப்கனின் அதிபராகப் பதவி ஏற்கக்கூடும் என்று கர்சாயின் தகவல் தொடர்பாளரான அய்மல் பைசி தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து நீண்ட நாட்களாகக் காத்திருப்பில் இருக்கும் அமெரிக்காவுடனான இருதரப்பு பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு இந்த ஆண்டிற்குப் பின்னரும் சிறிய அளவிலான வெளிநாட்டுத் துருப்புகளை அவர் ஆப்கனில் நிலை நிறுத்திக் கொள்ளக்கூடும் என்று பைசி குறிப்பிட்டார்.

SHARE