அரசாங்கத்திற்கு எதிராக போராட்டம் – இது அன்பான எச்சரிக்கை

284

 

சில அதிகாரிகளின் செயற்பாடுகள் காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தின் அபிவிருத்திக்காக வரும் நிதிகள் திரும்பிச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அதற்குரிய நடவடிக்கையினை அரசாங்கம் எடுக்காவிட்டால் அரசாங்கத்திற்கு எதிராக போராட வேண்டிய நிலை ஏற்படும் என கிராமிய பொருளாதார பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர்அலி தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டச் செயலகத்தின் புதிய நிர்வாக கட்டடத் தொகுதிக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு திராய்மடுவில் இன்று நடைபெற்றது .

இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்தும் உரை நிகழ்த்துகையில்,

நல்லாட்சியின் விளைவாக 804 மில்லியன் ரூபா செலவில் மாவட்ட செயலகத்திற்கான அடிக்கல் நடப்பட்டுள்ளது. ஜனாதிபதி மற்றும் பிரதமரின் ஆலோசனையின் கீழ் அமைச்சர் வஜிர அபேவர்த்தனவின் ஒத்துழைப்பினால் இந்த மாவட்டத்திற்கு 1100 மில்லியன் ரூபா செலவில் அபிவிருத்தி பணிகள் ஒரு நாளில் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

 

இவை நாட்டில் நல்லாட்சியை ஏற்படுத்துவதற்காக நாங்கள் பட்ட கஸ்டங்களுக்கான நல்வரவுகளாகும். இன்று மட்டக்களப்பு மாவட்டத்தில் பாரிய பிரச்சினை எழுந்துள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்தின் அபிவிருத்திக்காக கொண்டு வரப்பட்ட 9000 மில்லியன் ரூபா நிதி திரும்பிச்செல்லும் நிலையேற்பட்டுள்ளது.

எமது மாவட்டத்தில் மண் அகழ்ந்து எமது தேவையினை பூர்த்தி செய்யமுடியாத துர்ப்பாக்கிய சூழ்நிலையேற்பட்டுள்ளது. இதன்காரணமாக இந்த 9000 மில்லியனும் திரும்பிச் சென்றுவிடுமா என்ற அச்சம் தோன்றியுள்ளது.

இந்ந விடயம் தொடர்பில் இந்த நாட்டின் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளேன். மேலும் அமைச்சர் மற்றும் அதிகாரிகளின் கவனத்திற்கும் கொண்டுவந்துள்ளேன். பாராளுமன்றத்திலும் இது தொடர்பில் பேசியுள்ளேன்.

அரசு இது தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும். இல்லையென்றால் இந்த மாவட்டத்தில் உள்ள அரசியல்வாதிகள் அனைவரும் ஒன்றிணைந்து பாரிய போராட்டத்தினை இந்த அரசாங்கத்திற்கு எதிராக மேற்கொள்ளவேண்டிய அன்பான எச்சரிக்கையினையும் இந்த இடத்தில் சொல்லியே தீரவேண்டும்.

மேலும் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஒப்பந்தங்களை தனியான சங்கத்தினை மட்டும் வைத்துக்கொண்டு செயற்படமுடியாது. அரசியல்வாதிகள்உ ள்ளனர், அதிகாரிகள் உள்ளனர், மாவட்ட அரசாங்க அதிபர் உள்ளார் அவர்கள்தான் அதனை எதிர்காலத்தில் முன்கொண்டுசெல்லவேண்டும்.

எதிர்காலத்தில் அரச நிதிப்பிரமாணங்களின் அடிப்படையில் இந்த வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும் எனவும் எம்.எஸ்.எஸ்.அமீர்அலி தெரிவித்தார்.

SHARE