அரசியற் சதியில் சிங்களவரை தம்பக்கம் வென்றெடுப்பதற்காக தமிழரைப் பலியிடும் அரசியல் யாப்பு மரபை பிரித்தானியர் இலங்கையில் தோற்றுவித்தனர்.

337

 

அரசியல் அமைப்பு எனப்படுவது சாதாரண சனங்களைப் பொறுத்தவரை ஒரு கடினமான வறண்ட பாடப்பரப்பு. அரசறிவியல் மாணவர்களால் அல்லது ஆய்வாளர்களால் நுணுகி ஆராயப்படும் இவ் விடயப்பரப்பை சாதாரண வாசகர்கள் விரும்பிப் படிப்பது குறைவு. ஈழத்தமிழர்கள் மத்தியில் அரசியலமைப்பு விவகாரங்களைப் பற்றி இதுவரையிலும் வெளிவந்திருக்கக் கூடிய பெரும்பாலான நூல்கள் ஒன்றில் பரீட்சை மைய நோக்குநிலையிலிருந்து எழுதப்பட்டவை அல்லது ஆய்வு நோக்கு நிலையிலிருந்து எழுதப்பட்டவை. அரசியலமைப்பை சாதாரண சனங்களும் விளங்கத்தக்க விதத்தில் எளிமையாகவும் சுவாரசியமாகவும் எழுதத்தக்க விமர்சகர்கள் தமிழ்த்தேசியப் பரப்பில் மிகச்சிலரே உண்டு. அவர்களில் ஒருவரே மு.திருநாவுக்கரசு. அவருடைய அரசியலமைப்பைப் பற்றிய ஒரு நூல் அண்மையில் வெளியிடப்பட்டது. வவுனியாவிலும், லண்டனிலும் ஒரே நாளில் வெளியிடப்பட்ட இவ் நூலானது ஈழத்தமிழர்களைப் பொறுத்தவரை ஒரு முக்கியமான காலகட்டத்தில் வெளிவந்திருக்கிறது.

625-500-560-350-160-300-053-800-900-160-90
அரசியலமைப்பு விவகாரங்கள் கடினமானவைதான் என்ற போதிலும் அவை பற்றி கற்றகவும், தெளியவும் வேண்டிய ஒரு காலகட்டத்தில் இப்பொழுது ஈழத்தமிழர்கள் நிறுத்தப்பட்டிருக்கிறார்கள். இனப்பிரச்சினைக்கான ஒரு தீர்வை உள்ளடக்கிய புதிய அரசியலமைப்பு ஒன்று விரைவில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. முதலில் இப் புதிய அரசியலமைப்பு நாடாளுமன்றத்தின் ஒப்புதலை பெறவேண்டி இருக்கும். அரசியலமைப்பு பேரவையாக மாற்றப்பட்டிருக்கும் நாடாளுமன்றத்தில் இப்புதிய அரசியலமைப்புக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை கிடைக்க வேண்டும். அவ்வாறு மூன்றில் இரண்டு பெரும்பான்மையை உருவாக்குவதற்கு ஆறு வாக்குகள் தேவைப்படுகின்றன. அந்த ஆறு வாக்குகளை அரசாங்கம் இரண்டு வழிகளில் பெறமுடியும். ஒன்று கூட்டமைப்பிடம் இருந்து பெறுவது, இரண்டு மகிந்த அணிக்குள் இருந்து மேலும் ஒரு தொகுதியினரை உருவி எடுப்பது. கூட்டமைப்பிடம் தங்கியிருந்தால் இனப்பிரச்சினைக்கான தீர்வைப் பொறுத்தவரை கூட்டமைப்போடு ஏதோ ஓர் இணக்கத்திற்கு வரவேண்டியிருக்கும் அல்லது மகிந்த அணிக்குள் இருந்து ஆட்களைக் கழட்டுவதாக இருந்தால் சாம, பேத, தான,தண்டம் என்று ஏதாவது ஒரு வழியில் முயற்சிக்க வேண்டியிருக்கும்.
கிடைக்கப்பெறும் தகவல்களின்படி எல்லா நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் அரசாங்கத்திடமிருந்து ஒர் அறிவித்தல் வந்துள்ளது. அதன்படி இப்போது அவர்களிடமுள்ள வாகனத்தைத் தவிர மேலும் ஒரு புதிய வாகனம் அவர்களுக்கு வழங்ப்படக்கூடும். அது மிகவும் விலையுயர்ந்த சொகுசு வாகனமாக இருக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. அந்த வாகனத்திற்கு வேண்டிய ஒரு சாரதிக்குரிய விபரங்களைச் சமர்ப்பிக்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் கேட்கப்பட்டுள்ளது. இவ்வாறு சலுகைகளை வழங்குவதன் மூலம் மகிந்த அணியை மேலும் பிளவுபடுத்தலாம். அதற்குள்ளிருந்து உருவக்கூடிய ஆட்களை உருவி நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பாண்மையை உருவாக்கலாம். அப்படிப்பட்ட ஒரு பெரும்பாண்மை உருவாக்குமிடத்து தமிழ் உறுப்பினர்களின் வாக்குகளில் தங்கியிருக்கும் தேவை ஏற்படாது. இதுவும் சிலசமயம் தீர்வின் அடர்த்தியை குறைத்து விடலாம்.
எப்படியோ மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெறுமிடத்து புதிய அரசியலமைப்பு நாடாளுமன்றத்தால் ஏற்றுக் கொள்ளப்படும். அதன்பின் அது பொதுசன வாக்கெடுப்பு ஒன்றிற்கு விடப்படும். இப்போது உள்ள நிலமைகளின்படி இரண்டு விடயங்கள் அந்த வாக்கெடுப்பின் முடிவை தீர்மானிக்ககூடும். முதலாவது மகிந்த அணி எவ்வளவு தூரத்திற்கு அதைக் குழப்ப முடியும் என்பது, இரண்டாவது தமிழ் மக்கள் எடுக்கப்போதும் முடிவு எத்தகையது என்பது. தமிழ் மக்கள் அந்த வாக்கெடுப்பில் அரசாங்கத்திற்கு ஆதரவாக வாக்களித்தால் புதிய அரசியலமைப்பு மக்களாணையைப் பெற்று விடும். மாறாக தமிழ் மக்கள் வாக்களிப்பை பகிஷ;கரித்தாலோ அல்லது எதிராக வாக்களிக்க நினைத்தாலோ என்ன நடக்கும்?
சில சமயம் நாட்டில் இப்பொழுது நிலவும் ஸ்திரத்தன்மை குலைந்து போய்விடும். இலங்கைத்தீவு தொடர்பிலான மேற்கைத்தேய மற்றும் பிராந்திய வியூகங்கள் குழப்பப்படலாம். தமிழ் மக்களின் கேந்திர முக்கியத்துவம் மறுபடியும் உலக சமூகத்திற்கு உணர்த்தப்படலாம். நாடு மீண்டும் ஒருமுறை நிச்சயமற்றதோர் அரசியல் சூழலுக்குள் தள்ளப்படலாம். அதாவது தமிழ் மக்கள் எடுக்கப்போகும் முடிவு இந்த இடத்தில் நிர்ணயகரமானதாக இருக்கும்.
சில சமயம் தமிழ் மக்கள் மகிந்தவைப் பழி வாங்கவேண்டும் என்று இதற்கு முந்தைய இரண்டு தேர்தல்களிலும் சிந்தித்ததைப் போன்று சிந்திப்பார்களாக இருந்தால் இப்போது இருக்கும் ஸ்திரத்தன்மை தொடர்ந்தும் பெலப்படுத்தப்படும். எனவே தமிழ் மக்கள் எடுக்கப் போகும் முடிவுகளே இப் பிராந்தியத்தின் வலுச்சமநிலையை தீர்மானிக்கக் கூடிய ஓர் அரசியல் சூழல் இன்னும் சில மாதங்களில் இலங்கைத் தீவில் ஏற்படக்கூடும்.
ஆனால் வவுனியாவில் மு.திருநாவுக்கரசுவின் நூல் வெளியிட்டு வைக்கப்பட்ட பொழுது அதில் உரையாற்றிய புளட் இயக்க தலைவர் சித்தார்த்தன் கூறியவற்றின் அடிப்படையில் பார்த்தால் புதிய அரசியலமைப்பானது எதிர்பார்க்கப்படும் கால எல்லைக்குள் நாளாளுமன்றத்தில் சமர்;ப்பிக்கப்படுமா? என்ற ஐயமும் எழுகின்றது. சித்தார்த்தன் புதிய அரசியலமைப்பிற்கான உபகுழு ஒன்றில் அங்கம் வகிக்கின்றார். அந்த உபகுழுவைக் கூட்டுவதில் உள்ள கஷ;டங்களை அவர் அந்த உரையின் போது சுட்டிக் காட்டினார். ஆகக்குறைந்தது மூன்று உறுப்பினர்களாவது வருகை தந்தால்தான் ஓர் உபகுழுவைக் கூட்டமுடியுமாம். அவ்வாறு மூன்று உறுப்பினர்களைச் சேர்த்து தமது உபகுழுவைக் கூட்டுவதற்கு தாம் மிகவும் கஷ;டப்படுவதாகவும் அவர் அதில் சொன்னார்.

இனப்பிரச்சினைக்கான தீர்வு, நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி முறையை மாற்றுவது, தேர்தல் முறையை மாற்றுவது ஆகிய மூன்று பிரதான அம்சங்களிலும் உடன்பாடு எட்டப்படாத வரையிலும் புதிய அரசியலமைப்பு அதன் இறுதி வடிவத்தை பெறமுடியாது என்றும் அவர் சுட்டிக்காட்டினார். எனவே எதிர்பார்க்கப்படும் ஒரு கால எல்லைக்குள் புதிய அரசியலமைப்பு வாக்கெடுப்பிற்கு விடப்படுமா என்ற கேள்வி எழக்கூடிய விதத்தில் அவருடைய உரை அமைந்திருந்தது.
இப்படியாக புதிய அரசியலமைப்பானது எப்பொழுது வாக்கெடுப்பிற்கு விடப்படும் என்பது தொடர்பில் சந்தேகங்கள் உண்டென்ற போதிலும் எதிர் காலத்தில் என்றைக்கோ ஒரு நாள் அப்படியொரு வாக்கெடுப்பை தமிழ் மக்கள் எதிர் கொள்ள வேண்டி வரலாம். அப்படியொரு நிலமை வரும் பொழுது கேந்திர முக்கியத்துவம் மிக்க தமது வாக்குகளை எவ்வாறு பிரயோகிப்பது என்பது தொடர்பில் அதாவது தமது அரசியல் பேரத்தை எப்படி மிக உயர்வாக வைத்துக் கொள்வது என்பது தொடர்பில் தமிழ் மக்களுக்கு விழிப்பூட்ட வேண்டிய ஒரு காலகட்டம் இதுவாகும். இப்படியொரு காலச்சூழலில்தான் மு.திருநாவுக்கரசுவின் நூல் வெளிவந்திருக்கிறது. அந்நூலின் உள்ளடக்கத்தை பின்வருமாறு சுருக்கமாகக் கூறலாம்.
இலங்கைத் தீவின் யாப்பு வரலாறு எனப்படுவதே இனஒடுக்கு முறையின் வரலாறுதான். சிங்கள, பௌத்த மேலாண்மை வாதமானது யாப்பை ஓர் ஒடுக்கும் கருவியாகவே கையாண்டு வந்திருக்கிறது. இவ்வாறு தமிழ் மக்களை ஒடுக்கும் ஒரு யாப்பு மரபெனப்படுவது பிரித்தானியரின் பிரித்தாளும் தந்திரத்தின் ஒரு தொடர்ச்சியே என்று மு.திருநாவுக்கரசு கூறுகின்றார். பிரித்தானியர் இச் சிறிய தீவை ஆண்ட போது முதலில் தமிழ்த் தலைவர்களை அரவணைத்து அதன் மூலம் சிங்களத் தலைவர்களைக் கையாண்டார்கள்; என்றும் ஆனால் இந்திய சுதந்திரப் போராட்டத்தின் விளைவாக தமிழ் மக்கள் காந்தியத்தின்பால் ஈர்க்கப்பட்டதை அடுத்து இந்தப் பிரித்தாளும் பொறிமுறையில் பிரித்தானியர் மாற்றத்தை ஏற்படுத்தினர் என்றும் மு.திருநாவுக்கரசு கூறுகின்றார்.

அதாவது ஹன்டி பேரின்பநாயகம் போன்ற தமிழ் தலைவர்கள் காந்தியின் அபிமானிகளாக மாறிய ஒரு பிராந்தியச் சூழலில் ஈழத்தமிழர்கள் இந்;தியச் சுதந்திரப் போராட்டத்தின் ஆதரவாளர்களாக காணப்பட்டனர். இதைக் கண்டு அஞ்சிய பிரித்தானியா சிங்களத் தலைவர்களை அரவணைக்கும் ஒரு போக்கை கடைப்பிடிக்கலாயிற்று. இதனால் பெரும்பாண்மையினரின் கையை ஓங்கச் செய்யும் ஓர் அரசியலமைப்பு பாரம்பரியத்தை அவர்கள் தொடக்கி வைத்தனர் என்றும் அதையே பின்வந்த சிங்களத் தலைவர்களும் மேலும் விஸ்தரித்துச் சென்றனர் என்றும் மு.திருநாவுக்கரசு கூறுகின்றார். அதாவது இந்தியாவிற்கும் ஈழத்தமிழர்களுக்குமிடையிலான புவிசார் அரசியல் நெருக்கத்தை முன் வைத்தே பிரித்தானியர் அந்த முடிவை எடுத்ததாக மு.தி கூறுகின்றார். அங்கிருந்து தொடங்கி இன்றுவரையிலும் ஈழத்தமிழர்கள் பலியிடப்படுவதற்கு இதுவே காரணம் என்றும் அவர் வாதிடுகிறார். இந்தியாவின் பின்னணிக்குள் வைத்து ஈழத்தமிழர்களைப் பார்ப்பதால் தான் எல்;லாப் பெரிய நாடுகளும் ஈழத்தமிழர்களை பலியிட்டு வருகின்றன என்று அவர் கூறுகிறார்.
‘இந்தியாவிற்கு எதிரான தமது யுத்தத்தையே சிங்கள மக்கள், தமிழ் மக்கள் மீது காலம் காலமாகப் புரிகின்றனர். தமிழ் மக்களை மொழி, பண்பாடு, இந்துமதம் சார்ந்து இந்தியாவுடன் இணைத்துப் பார்ப்பதினாலும், இலங்கையில் இந்தியாவின் ஆதிக்கத்தை பரவவிடாமல் தடுப்பதற்கு தமிழினத்தை அழிப்பது அவசியம் என்ற மேற்படி புவிசார் அரசியல் பார்வையின் விளைவாகவும் தமிழ் மக்கள் மீதான தமது இன அழிப்பு அரசியலை ஈவிரக்கம் இன்றியும், சமரசம் இன்றியும் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இவ்வாறு வரலாற்று ரீதியாக இந்தியா மீது சிங்கள-பௌத்தர்களுக்கு இருக்கும் அச்சமும் அதன் அடிப்படையிலான இந்திய எதிர்ப்புவாதமும், தமிழருக்கு எதிரான இன அழிப்பு அரசியலாய் வடிவம் பெற்ற நிலையில் ஈழத் தமிழ் மக்கள் புவிசார் அரசியலின் கைதிகளாய் அதற்குள் சிக்குண்டு அல்லல்படுகின்றனர்’ என்று மு.தி கூறுகிறார்.

‘சிங்கள-பௌத்தர்களுக்கும் இந்தியாவிற்கும் இடையே உள்ள வரலாற்றுப் பகைமையை முதலீடாக்கி அதன் மூலம் இலங்கையின் நவீன வரலாற்றில் சிங்கள-பௌத்தர்களுக்கும், இந்தியாவிற்கும் இடையான பகைமையைத் தூண்டி வளர்த்து கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இலங்கையில் இந்தியாவிற்கு எதிரான தமது கேந்திர நலன்களை அடைவதில் பிரித்தானியர் வெற்றி பெற்றனர். இந்த அரசியற் சதியில் சிங்களவரை தம்பக்கம் வென்றெடுப்பதற்காக தமிழரைப் பலியிடும் அரசியல் யாப்பு மரபை பிரித்தானியர் இலங்கையில் தோற்றுவித்தனர். பிரித்தானியர் சட்டபூர்வமாகத் தோற்றுவித்த அந்த அழிவுப் பாதையின் தொடர் வளர்ச்சியே இற்றை வரையான அரசியல் யாப்புக்களாகும்’ என்று கூறும் மு.தி இலங்கைத் தீவின் யாப்பு மரபை அதன் புவிசார் அரசியல் பின்னணிகளுக்கூடாக ஆராய்கிறார்.

அதாவது இலங்கைத் தீவின் இனப்பிரச்சினை எனப்படுவதே ஒரு புவிசார் அரசியற் பிரச்சினைதான் என்பது அவருடைய வாதமாகும். எனவே அதற்குரிய தீர்வும் ஒரு புவிசார் அரசியல் தீர்மானத்திற்கூடாகவே கண்டடையப்பட வேண்டும் என்ற ஒரு முடிவிற்கு அவர் வருகிறார். இதில் யாப்பானது இன ஒடுக்கு முறையின் கருவியாகப் பயன்படுத்தப்பட்டு வரும் ஒரு காரணத்தினால் அதில் இனி நிகழப்போகும் மாற்றங்களும் முன்னைய யாப்புக்களின் தொடர்ச்சியாகவே அமையக்கூடும் என்ற ஒரு முடிவிற்கு வாசகரை இந்நூல் நகர்த்திச் செல்கிறது. அதாவது இலங்கைத் தீவின் யாப்புப் பாரம்பரியம் எனப்படுவது தமிழ் மக்களுக்கு எதிரானது. அந்தப் பாரம்பரியத்தை மாற்றாமல் யாப்பின் இதயத்தில் மாற்றம் ஏற்படப் போவதில்லை என்ற ஒரு தெளிவிற்கு இந்நூல் இட்டுச்செல்கிறது.

ஆனால் மன்னாரில் நடந்த ‘தடம் மாறுகிறதா தமிழ் தேசியம்?’ என்ற கருத்தரங்கில் உரையாற்றிய சம்பந்தர் வேறு விதமாகச் சிந்திப்பது தெரிகிறது. அங்கு தன்னை நோக்கி எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு நேரடியாக பதில் கூறாது மறைமுகமான ஒரு தொகுப்புரையை அவர் வழங்கியிருந்தார். அத் தொகுப்புரையில் அவர் சந்திரிக்காவை, ரணிலை, மைத்திரியை தான் நம்புவதாகக் கூறியிருந்தார். சிங்களத் தலைவர்கள் தீர்வைத் தரமாட்டார்கள் என்ற வாதம் வறட்டுத்தனமானது என்றும் அவர் கூறினார்.அதைச் சொல்லும் போது அவருடைய குரலை உயர்த்தி அழுத்தி தீர்மானகரமாகக் கூறினார் என்பதை இங்கு சுட்டிக்காட்ட வேண்டும். இதுவரையிலும் உருவாக்கப்பட்ட எல்லா அரசியலமைப்புக்களும் தமிழ் மக்களின் பங்களிப்பின்றியே உருவாக்கப்பட்டன என்றும் ஆனால் இம்முறை தமிழ் மக்களின் பங்களிப்போடு ஓர் அரசியலமைப்பு உருவாக்கப்படுகிறது என்றும் அதில் கூட்டமைப்பானது வழிநடத்தும் குழுவில் அங்கம் வகிப்பதாகவும் அவர் தெரிவித்திருந்தார். எனவே சம்பந்தர் மன்னாரில் வைத்து கூறியவற்றை தொகுத்து நோக்கின் அவர் சிங்களத் தலைவர்களை நம்புகிறார் என்பது தெரிகிறது. சிங்களத் தலைவர்களின் மனோநிலையில் மாற்றம் ஏற்பட்டிருப்பதாகவும் அவர் நம்புவது தெரிகிறது. இது மு.திருநாவுக்கரசுவின் நூலில் கட்டியெழுப்பப்படும் தர்க்கத்திற்கு எதிரானது.
இந்நூல் வெளியீட்டு விழாவில் சித்தார்த்தன் மேலும் ஒரு விடயத்தைச் சுட்டிக்காட்டினார்.அண்மையில் தந்தி தொலைக்காட்சிக்கு திருமதி சந்திரிகா வழங்கிய பேட்டியில் அவரிடம் பின்வரும் தொனிப்பட கேட்கப்பட்டதாம்…… ‘நீங்கள் பல ஆண்டுகளுக்கு முன்பு முன்மொழிந்த தீர்வு யோசனைகள் இப்பொழுதும் பொருத்தமானவை என்று நம்புகிறீர்களா?’ என்று. அதற்கு அவர் சொன்னாராம்…..’அநேகமாக இல்லை…..ஏனெனில் இப்பொழுது புலிகள் இயக்கம் இல்லை’ என்ற தொனிப்பட.
இந்நிகழ்வில் உரையாற்றிய அரசியல் ஆய்வாளர் யோதிலிங்கம்; இந்நூல் சிங்கள பௌத்த பேரினவாதத்தை; மிகவும் துலக்கமாகவும், விரிவாகவும் தோலுரித்துக் காட்டுகின்றது என்று கூறினார். ஆனால் சம்பந்தர் கூறுகிறார் தான் இப்போதுள்ள அரசாங்கத்தின் தலைவர்களை நம்புவதாக. அதாவது தமிழ் தேசியப் பரப்பில் அதிகம் எழுதிக் கொண்டிருக்கும் அறிஞர்கள், ஆய்வாளர்கள் போன்றோரின் கருத்துக்களும் ஈழத்தமிழர்களின் அரசியலுக்கு தலைமை தாங்கும் சம்பந்தரின் கருத்துக்களும் ஒன்றுக்கொன்று முரணாகக் காணப்படுகின்றன. இதில் எது சரி? இன்னும் சில மாதங்களில் தமிழ் மக்கள் அதைக் கண்டு பிடித்து விடுவார்கள்.

SHARE