அரசியலமைப்பு மாற்றம் தமிழருக்கு விடிவைத் தருமா?

262

 

போர் முடிவுக்கு வந்து ஏழு ஆண்டுகளாகியும் தமிழ் மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்படவில்லை, தமிழ் மக்களுக்கான அரசியல் அதிகாரங்கள் பகிரப்படவில்லை என்ற குற்றச்சாட்டுகளைச் சுமத்திக் கொண்டிருக்கும் தமிழர் அரசியல் தரப்பு, தமிழர் பிரச்சினைக்கு எவ்வாறு தீர்வு காண்பது என்பது தொடர்பான எந்த உறுதியான நிலைப்பாட்டுக்கும் வரமுடியாத நிலையில்தான் இருக்கிறது.

மஹிந்த ராஜபக்ச அரசாங்கம் பதவியில் இருந்து அகற்றப்படுவதற்கு முந்திய பல தசாப்தங்களாக தமிழர்களால் பேசப்பட்டு வந்த பிரதான விடயம், அதிகாரப் பகிர்வோ, தமிழீழமோ அல்ல.தமிழர் பிரச்சினைக்கான நிரந்தர அரசியல் தீர்வு என்பது பற்றியே, மைத்திரிபால சிறிசேன அரசாங்கம் பதவிக்கு வரும் வரையில் தமிழர் தரப்பினால் பேசப்பட்டு வந்த பிரதான விடயமாகும்.

ஜே.ஆர். ஜயவர்தன, பிரேமதாச, டி.பி.விஜேதுங்க, சந்திரிகா குமாரதுங்க, மஹிந்த ராஜபக்ச என்று ஐந்து ஜனாதிபதிகளின் ஆட்சிக்காலத்தில் முதன்மை பெற்றிருந்த அரசியல் தீர்வு என்ற விடயம், இப்போது மைத்திரிபால சிறிசேனவின் ஆட்சிக்காலத்தில் முக்கியத்துவமற்ற விடயமாக மாறியிருக்கிறது.

தமிழர் பிரச்சினைக்கான அரசியல் தீர்வு குறித்து முன்னைய அரசாங்கங்களுடன், தமிழர் விடுதலைக் கூட்டணி பேசியது, பல்வேறு தமிழ் இயக்கங்கள் பேச்சுக்களை நடத்தின, பின்னர் விடுதலைப் புலிகள் பேசினர். கடைசியாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் பேசியது.

ஆனாலும், தமிழர்களின் பிரச்சினைகளைத் தீர்க்கின்ற, அவர்களின் அரசியல் அபிலாசைகளைத் தீர்க்கின்ற, அரசியல் தீர்வைக் காண முடியவில்லை. எந்தவொரு சிங்கள அரசியல் தலைமையும், தமிழர் பிரச்சினையைத் தீர்க்கின்ற அரசியல் தீர்வு ஒன்றைக் காண்பதற்குத் தயாராக இருக்கவில்லை.

அதுவே தமிழர் தரப்பில் அரசாங்கங்களுடன் பேச்சு நடத்திய தரப்புகளை வெறுப்படைய செய்தது. ஆயுதப் போராட்டங்களைத் தீவிரப்படுத்தும் உந்துதலைக் கொடுத்தது.ஆயுதப் போராட்டம் தோற்கடிக்கப்பட்ட பின்னரும் கூட, மஹிந்த ராஜபக்ச அரசாங்கத்துடன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பேச்சுக்களை நடத்தியது.ஆனாலும், ஒரு பயனும் கிடைக்கவில்லை.

தமிழர் பிரச்சினைக்கு பேச்சுக்களின் மூலம் அரசியல் தீர்வு காணும் எல்லா முயற்சிகளும் தோல்வியில் முடிந்த வரலாறே எம்முன் நீண்டு கிடக்கிறது.இப்படியொரு சூழலில் ஆட்சி மாற்றத்துக்குப் பின்னர் பதவிக்கு வந்திருக்கும் மைத்திரிபால சிறிசேன- – ரணில் விக்கிரமசிங்க கூட்டு அரசாங்கமானது, அரசியல் தீர்வு தொடர்பான தனியான பேச்சுக்கள் எதையுமே தமிழர் தரப்புடன் இன்று வரை நடத்தவுமில்லை. நடத்துவதற்கான முயற்சிகளில் இறங்கவுமில்லை.

இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தவுடன், 100 நாள் வேலைத் திட்டம் என்று அறிவித்து, அடுத்த நாடாளுமன்றத் தேர்தலுக்கான தயார்படுத்தல்களில் இறங்கியது.நாடாளுமன்றத் தேர்தல் வரை தமிழர் பிரச்சினை பற்றி எதுவும் பேச முடியாது, அதற்குப் பின்னர் தான் எல்லாம் என்று கைவிரித்தது.

நாடாளுமன்றத் தேர்தலில் ஆட்சியைப் பிடித்து, ஒரு ஆண்டுக்கு மேலாகி விட்ட நிலையிலும், அரசியல் தீர்வு குறித்துப் பேசுவதற்கான எந்த முயற்சிகளும் எடுக்கப்படவில்லை. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், அரசியல் தீர்வு குறித்து அரசாங்கம் பேச்சு நடத்த முன்வரவேண்டுமென்று கோரிக்கை விடுக்கவோ, அழுத்தங்களைக் கொடுக்கவோ இல்லை. அரசாங்கமும் அதுபற்றிக் கவலை கொள்ளவில்லை.

புதிய அரசியலமைப்பின் ஊடாக தமிழ் மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்படும் என்ற வெற்று வாக்குறுதியின் அடிப்படையில்தான் எல்லாமே நடந்து கொண்டிருக்கிறது.

இதற்கு முந்திய அரசியலமைப்புகள் தயாரிக்கப்பட்ட போது, தமிழர்களுடன் கலந்தாலோசிக்கப்படவில்லை, அவர்களின் யோசனைகள் உள்ளடக்கப்படவில்லை, ஆனால், புதிய அரசியலமைப்பை உருவாக்கும் விடயத்தில் தமிழர்களும் உள்ளடக்கப்பட்டுள்ளனர், தமிழர்களின் கருத்துக்களும், யோசனைகளும் உள்வாங்கப்படும் என்பதையிட்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் பரமதிருப்தி வெளியிட்டு வருகிறார்.

அரசியலமைப்பு ரீதியாக தமிழர்களின் உரிமைகள் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை. ஆனால், அரசியலமைப்பு மாற்றம் ஒன்றின் ஊடாக மாத்திரமே, தமிழர்களின் பிரச்சினைக்கு நிலையான அரசியல் தீர்வு காணப்பட்டு விடுமா என்பது கேள்விக்குரிய விடயம்.

ஏனென்றால், இலங்கையின் அரசியலமைப்பின், 13 ஆவது திருத்தச்சட்டத்தில் காணி, பொலிஸ், அதிகாரங்களை மாகாணங்களுக்கு வழங்குவது பற்றிக் கூறப்பட்டிருக்கிறது . ஆனால், அந்த அதிகாரங்கள் இன்று வரையில் எந்த மாகாணசபைக்கும் வழங்கப்படவில்லை.மாகாணசபைகளுக்கு அந்த அதிகாரங்களைப் பெறுவதற்கு எடுக்கப்பட்ட முயற்சிகளும் கைகூடவில்லை.

காரணம், அரசியல் ரீதியாக மாகாணங்களுக்கு அதிகாரங்களை வழங்கும் விருப்பும் அதற்கான தற்றுணிவும் எந்த அரசாங்கத்துக்கும் இருக்கவில்லை.எனவே , அரசியலமைப்பு ரீதியான மாற்றம் என்பது அவசியமான ஒன்றாகவே இருந்தாலும், அது தமிழர்களின் அரசியல் அபிலாசைகளை தீர்க்கின்ற, தமிழர்களுக்கு அதிகாரங்களைப் பகிர்ந்து அளிக்கின்ற ஒன்றாக இருக்கும் என்று நம்ப முடியவில்லை.

தமிழர்கள் எதிர்பார்ப்பது, சமஷ்டி ஆட்சிமுறையின் அடிப்படையிலான ஒரு அதிகாரப்பகிர்வு முறையையேயாகும். அதற்காகவே கடந்த தேர்தல்களில் தமிழ் மக்கள் வாக்களித்திருக்கிறார்கள்.ஆனாலும், தற்போதைய அரசாங்கத்திலுள்ள இரண்டு பிரதான கட்சிகளுமே சமஷ்டி முறையிலான அதிகாரப்பகிர்வுக்குத் தயாராக இல்லை என்று அறிவித்திருக்கின்றன.

புதிய அரசியலமைப்பு ஒற்றையாட்சியை அடிப்படையாகக் கொண்டதாகவே இருக்கும் என்று மீண்டும் மீண்டும் ஜனாதிபதியும், பிரதமரும், அமைச்சர்களும் உறுதி அளித்து வருகின்றனர்.தமிழர்களின் அரசியல் விருப்பு புறக்கணிக்கப்பட்டு ஒற்றையாட்சி அரசியலமைப்பு ஒன்றைத் தயாரிக்கும் முயற்சிகள் முன்னெடுக்கப்படும் கட்டத்தில் அரசியலமைப்பு உருவாக்கத்தில் பங்களிக்கும் தமிழர் தரப்பு என்ன செய்யப் போகிறது?

பெரும்பான்மை சிங்கள மக்களின் எதிர்ப்பை மீறி எந்தவொரு அரசாங்கமும் தமிழருக்கான நியாயமான தீர்வை வழங்கப் போவதில்லை. அதுவும், சிங்கள மக்களின் ஆதரவைப் பெருமளவில் கொண்டிராத இப்போதுள்ளது போன்ற ஒரு அரசாங்கத்தினால், மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடனும், சர்வஜன வாக்கெடுப்பை நடத்தியும், தமிழர்களின் உரிமைகளை உறுதிப்படுத்தும் அரசியலமைப்பை நிறைவேற்ற முடியாது.

அவ்வாறானதொரு நிலை ஏற்பட்டால், தமிழர்களுக்கு அதிகாரங்களை அளிக்கும் விடயங்களை நீக்கிவிட்டு, ஒரு அரசியலமைப்பை நிறைவேற்றுவதற்கு தற்போதைய அரசாங்கம் தயாராகவே இருக்கும்.தமிழர்களின் பங்களிப்புடன், அவர்களின் யோசனைகளையும் உள்வாங்கி தயாரிக்கப்பட்ட அரசியலமைப்பு என்ற பெயரும் நிலைத்திருக்கும்.

ஆனால் தமிழருக்கான அதிகாரங்கள் எதுவும் உறுதிப்படுத்தப்பட்டிருக்காது. உரிமைகள் உறுதி செய்யப்பட்டிருக்காது. இப்போதுள்ள அரசியலமைப்பில் எப்படி வாழ்ந்தார்களோ அதுபோலவே வாழ்வதற்கு நிர்ப்பந்திக்கப்படுவார்கள்.அப்படியொரு நிலைக்குள் மூழ்கும் போது, நாம் வெளியே போகிறோம் என்று தமிழர் தரப்பு வெளியேறினாலும், தமிழர்களின் பங்களிப்புடன் உருவாக்கப்பட்ட அரசியலமைப்பு என்ற பெயர் மாத்திரம் நிலைத்து விடும்.

அத்தகையதொரு கட்டத்துக்குச் செல்வதற்கு முன்னர், தமிழர் பிரச்சினைகளைத் தீர்க்கின்ற அரசியல் தீர்வு ஒன்று குறித்து, சிங்கள அரசியல் தலைமைகளுடன் இணக்கப்பாட்டுக்கு வரவேண்டியது அவசியம்.அவ்வாறான ஒரு அரசியல் இணக்கப்பாட்டை உருவாக்கும் எந்த முயற்சிகளிலும் ஈடுபடாமல் வெறுமனே அரசியலமைப்பு திருத்தத்தில் மாத்திரம் கவனம் செலுத்திக் கொண்டிருந்தால், மீண்டும் தமிழர்கள் ஏமாற்றப்படும் நிலைக்கே கொண்டு செல்லப்படுவார்கள்.

அரசியல் தீர்வுக்கான பேச்சுக்கள் என்பது முக்கியமானது. அதனை விலக்கி, அரசியலமைப்பு மாற்றத்தை மாத்திரம் தமிழர் தலைமைகள் முன்னிறுத்த முனைந்தால், தமிழர்கள் கோருகின்ற உரிமைகளை அரசியலமைப்பில் உள்வாங்க முடியாத கட்டம் ஒன்று ஏற்படும் போது, ஏமாற்றமே மிஞ்சி நிற்கும்.அத்தகையதொரு நிலையில் சிங்களத் தலைமைகளுக்கு எந்தப் பாதிப்பும் வந்து விடாது.

அவர்கள் தமக்குத் தேவையானதை, கட்சிகளுக்கிடையிலான பகையை மறந்து ஒன்றுபட்டு நின்று நிறைவேற்றிக் கொள்வார்கள். அங்கே தமிழர்கள் மாத்திரமே நடுத்தெருவில் விடப்படுவார்கள்.ஒற்றையாட்சிக்குள் தமிழர்களின் பிரச்சினைக்கு எவ்வாறு நிலையான தீர்வு காணப்பட முடியாதோ, அரசியலமைப்பு மாற்றமும், நிலையான தீர்வைத் தருகின்ற ஒன்றாக அமையாது.

ஏற்கனவே சமஷ்டி பற்றி தமிழர்கள் முன்வைத்த எண்ணக்கருவையே, கலாநிதி லால் விஜேநாயக்க போன்ற அரசியலமைப்பு உருவாக்கலில் முக்கிய பங்காற்றும் தரப்பினர் நிராகரித்து விட்ட நிலையில், இதுபோலத் தமிழர்களின் அரசியல் அபிலாசைகளை நிராகரிப்பது ஒன்றும் சிங்கள அரசியல் தலைமைகளுக்கு பெரிய விடயமே அல்ல.

காலம்காலமாக தமிழர்களை ஏமாற்றியே பிழைப்பு நடத்தி வந்தவர்களே இந்தளவுக்கு விழிப்பாக செயற்படும் நிலையில், காலம் காலமாக ஏமாற்றப்பட்ட தமிழர்கள் எவ்வளவு காலத்துக்குத் தான், ஏமாந்து கொண்டேயிருக்கப் போகிறார்கள்?

SHARE