அலையென மக்கள் திரண்ட பிரான்ஸ் தமிழர் விளையாட்டு விழா: எழுச்சிக்கோலம் பூண்ட ஐ.நாவை நோக்கிய மில்லியன் கையெழுத்து இயக்கம்!

378
பிரான்ஸ் தமிழர்களின் விளையாட்டு விழாவில் பெருந்திரளான மக்கள் பங்கெடுத்துள்ளதோடு, ஒரு மில்லியன் கையெழுத்து இயக்கம் எழுச்சிக் கோலம் பூண்டுள்ளது.பிரான்ஸ் தமிழர் புனர்வாழ்வுக்கழகத்தின் முன்னெடுப்பில் 18வது ஆண்டாக இடம்பெற்றுள்ள இப்பெருநிகழ்வில் பிரென்சு மற்றும் தமிழ் சமூக அரசியற் பிரமுகர்கள் பலர் பங்கெடுத்து நிகழ்வுக்கு வலுவூட்டியுள்ளனர்.சிறுவர் முதல் பெரியோர் வரையிலான விளையாட்டுகள், இசையரங்குகள், வர்த்தக திடல்கள், தாயகத்தினை நினைவுப்படுத்தும் உணவுவகைகள் என பல்சுவை நிகழ்வாக இது அமைகின்றது.இந்நிகழ்வில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் ஏற்பாடு செய்திருந்த பரப்புரைத்திடலில், இலங்கையை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்துமாறு ஐ.நாவைக் கோரும் கையெழுத்து இயக்கத்தில் பெருந்திரளான மக்கள் உணர்வுபூர்வமாக கையொப்பங்களை இட்டுள்ளனர்.

‘போர்க்குற்றங்கள், மனித இனத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் இனப்படுகொலை ஆகியவற்றுக்கு முற்றிலும் எந்தப் பொறுப்பேற்பும் இல்லை என்பதால், இலங்கையில் தற்போதைய சூழ்நிலை ஐ.நா.சாசனம் அத்தியாயம் 7 பிரிவு 39 இன் கீழ் ‘அமைதிக்கான அச்சுறுத்தல்’ தொடர்ந்து கொண்டிருக்கும் நிலையை உள்ளடக்கியதாக இருக்கிறது’ என்று இக்கையெழுத்து மனுவில் கோரப்படுகின்றது.

இணையவழி முறையூடாக ஒரு மில்லியனை இக்கையெழுத்து இயக்கம் நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில் நேரடியாக படிவங்கள் மூலம் ஒப்பங்களும் உலகத் தமிழர் பரப்பெங்கும் பெறப்பட்டுக் கொண்டு வருகின்றது.

இந்நிலையில் இப்பெருவிழாவுக்கு வருகை அங்குரப்பணத்தினை செய்திருந்த பிரென்சு அரசியற் பிரமுகர்களான திருமதி.மரி ஜோர்ச் புவே (முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர், தமிழர் விவகாரங்களுக்கான பிரென்சு பாராளுமன்றத் தலைவி), திரு.ஸ்ரீவன் துறுசல் (மாகாணசபை அவைத்தலைவர்), திரு.தெறி மெனின் (புளேன் மெனில் நகரபிதா), திரு.கொந்தன் கெசல் (டுனி துணை நகரபிதா) ஆகியோர் கையொப்பங்களை இட்டு தமிழர்களின் நீதிக்கான போராட்டத்துக்கான தங்களின் தோழமையினை வெளிப்படுத்தினர்.

இவர்களோடு திரு.அலன் ஆனந்தன் (டுனி நகர சபைப் பிரதிநிதி, புனர்வாழ்வுக்கழக ஆலோசர், உலகத் தமிழர் பண்பாட்டு இயக்க பிரான்ஸ் தலைவர்), திரு.ஜெயசந்திரன் (நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அவைப்பிரதிநிதி), திரு.ஜெயா (மாவீரர் குட்டியின் சகோதரர்) ஆகியோரும் விளையாட்டு நிகழ்வினை இனிதே முறையாக தொடக்கி வைத்திருந்தனர்.

ஒரு மில்லியன் கையெழுத்து இயக்கத்தின் பிரான்சுக்கான ஒருங்கிணைப்பாளர் திரு.பாலசந்திரன் அவர்களது முதன்மையில் நிறுவப்பட்டிருந்த நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் திடலில் கையொப்பங்களை பெறுவதறான அட்டைகள் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்பட்டதோடு, அரசாங்கத்தின் வெளியீடுகள் மற்றும் ஒளிப்படங்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தது.

SHARE