ஆப்கானிஸ்தானின் புதிய அதிபராக அஷ்ரப் கனி தேர்வு:அப்துல்லா அப்துல்லாவுடன் சமரசம்

418
தலிபான்களின் தாயகமாக விளங்கிவந்த ஆப்கானிஸ்தானில் நேட்டோ படைகளின் பாதுகாப்புடன் கடந்த 12 ஆண்டுகளுக்கும் மேலாக ஜனநாயக ஆட்சி நடைபெற்றுவந்தது.

இந்நிலையில், கடந்த ஏப்ரல் மாதம் புதிய அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இதன் முதல் சுற்று முடிவின்போது அப்துல்லா அப்துல்லா முன்னிலை வகிப்பதாக அறிவிக்கப்பட்டார்.

இரண்டாவது சுற்று எண்ணிக்கை முடிவடைந்து ஜூன் மாதம் வெளிவந்த அறிவிப்பில் மற்றொரு வேட்பாளரான அஷ்ரப் கனி முன்னிலையில் இருந்தார். இதனை ஏற்றுக்கொள்ள அப்துல்லா அப்துல்லா மறுத்ததால், தேர்தல் முடிவுகளை வெளியிட முடியாத குழப்பமான சூழ்நிலை உருவானது.

இந்த விவகாரத்தில் அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி ஜான்கெர்ரி  சமரசம் செய்ய முயற்சித்த போதிலும் பிரச்சினை வலுத்துக் கொண்டே வந்தது. நீண்ட நாட்களாக இழுபறி ஏற்பட்டதால் தேர்தல் முடிவுகளை வெளியிட முடியாத நிலை நீடித்து வந்தது.

எனவே, மோசடி வாக்குகளை தணிக்கை செய்து, அதன்பின்னர் தேர்தல் முடிவை வெளியிடுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

ஜனநாயக காற்றை சுவாசித்துவரும் ஆப்கானிஸ்தான், மீண்டும் தலிபான்களின் கோரப்பிடிக்குள் சென்று விடாமல் தடுக்கும் வகையில் ஐக்கிய நாடுகள் சபை மற்றும் அமெரிக்காவின் ஆலோசனையின்பேரில் அப்துல்லா அப்துல்லா மற்றும் அஷ்ரப்கனி  ஆகியோர் நடத்திய பேச்சுவார்த்தையில் அதிகாரத்தை இருவரும் சமமாக பகிர்ந்து கொள்வது என்று நேற்று முடிவு செய்யப்பட்டது.

இதனையடுத்து, இதற்கான ஒப்பந்தத்தில் இன்று இருவரும் கையொப்பமிட்டனர். அதன் பின்னர், அதிபர் மாளிகையில் சுமார் 10 நிமிடங்கள் நீடித்த சிறிய விழாவில் ஆப்கானிஸ்தானின் புதிய அதிபராக அஷ்ரப் கனி அறிவிக்கப்பட்டார்.

புதிய அதிபராக அறிவிக்கப்பட்ட அஷ்ரப் கனியை அவரது போட்டி வேட்பாளரான அப்துல்லா அப்துல்லா கட்டித்தழுவி வாழ்த்தினார்.

புதிய அதிபராக அஷ்ரப் கனி தேர்வு செய்யப்பட்டதை முறைப்படி அறிவித்த அந்த நாட்டின் தலைமை தேர்தல் ஆணையாளர் அஹமத் யூசுப் நுரிஸ்தானி, மறு எண்ணிக்கையின் போது எத்தனை மோசடி வாக்குகள் நீக்கப்பட்டன? யார், யாருக்கு எவ்வளவு வாக்குகள் கிடைத்தன என்பவை உள்ளிட்ட எந்த விபரத்தையும் வெளியிடவில்லை.

’இந்த தேர்தலில் அனைத்து தரப்பிலும் முறைகேடுகள் நடந்ததாக மக்கள் கருதுகின்றனர். ஆப்கானிஸ்தானின் அதிபராக அஷ்ரப் கானி வெற்றி பெற்றதாக தேர்தல் கமிஷன் அறிவிக்கின்றது. இதன் மூலம் இந்த தேர்தல் ந்டைமுறை முடிவுக்கு வந்தது’ என அவர் அறிவித்தார்.

புதிய அதிபராக பொறுப்பேற்கும் அஷ்ரப் கனியை முன்னாள் அதிபர் ஹமித் கர்சாய் வாழ்த்தினார். ’இந்த நாட்டின் வளத்துக்காகவும், நன்மைக்காகவும் அஷ்ரப் கனியும், அப்துல்லா அப்துல்லாவும் சமாதான ஒப்பந்தம் செய்து கொண்டதை வரவேற்பதில் நான் மகிழ்ச்சியடைகின்றேன்.

அவர்களது முயற்சியால் இந்த நாட்டில் நீடித்த அமைதி நிலவும் என்று நம்புகிறேன்’ என்று ஹமித் கர்சாய் கூறினார்.

புதிய அதிபராக அஷ்ரப் கனி பொறுப்பேற்பது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு நாளை வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அதனையடுத்து, பிரதமர் பதவிக்கு நிகரான நாட்டின் தலைமை செயல் நிர்வாகி உள்ளிட்ட சில பதவிகளுக்கான பெயர்களை அப்துல்லா அப்துல்லா அறிவிப்பார் என கூறப்படுகின்றது.

தலிபான் எதிர்ப்பு நிலையை தீவிரமாக கடைபிடித்துவரும் அப்துல்லா அப்துல்லாவுக்கு தஜிக் உள்ளிட்ட சில இனத்தவரிடையே ஏகோபித்த செல்வாக்கு உள்ளது. உலக வங்கியில் பணியாற்றிய அனுபவம் நிறைந்த பொருளாதார நிபுணரான அஷ்ரப் கனிக்கு பஷ்தூன் பழங்குடியினரின் அமோக ஆதரவு உள்ளது.

ஆப்கானிஸ்தான் அரசியல் வரலாற்றிலேயே முதன்முறையாக இவர்கள் இருவரிடமும் தற்போது நாட்டின் அதிகாரம் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.

இந்த இரட்டை அதிகார ஆட்சிமுறை என்பது அந்நாட்டின் வளர்ச்சி, தலிபான் ஒழிப்பு போராட்டம் போன்றவற்றில் எந்த வகையான பலனைத் தரும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் என்று அரசியல் வல்லுனர்கள் கருதுகின்றனர்.

SHARE