இந்தியா-பாக்கிஸ்தான். போர் மூண்டால்?.. விளைவுகள்.. அதிர்ச்சி தகவல்

260

 

இந்தியா பாகிஸ்தான் இடையே போர் மூண்டால் இருநாடுகளைச் சேர்ந்த 2.1 கோடி மக்கள் உயிரிழப்பார்கள் என்று பாதுகாப்புத் துறை நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

arms

உயிரிழப்புகள்..இதுதொடர்பாக அமெரிக்காவைச் சேர்ந்த ரட்ஜெர்ஸ், கொலரோடா-பவுல்டர் மற்றும் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள் கடந்த 2007ஆம் ஆண்டு நடத்திய ஆய்வின்படி, இதனால் இரண்டாம் உலகப்போரில் உயிரிழந்த வீரர்களின் எண்ணிக்கையில் பாதியாக இந்த போரில் உயிரிழப்புகள் இருக்கக் கூடும் என்று கூறப்பட்டுள்ளது.

சுற்றுச்சூழல் பாதிப்பு..

உலக அளவில் அணுஆயுதங்களைக் கொண்ட இரு நாடுகளின் போரால் புவியின் ஓசோன் படலத்தில் பாதி அழியும் என்றும் எச்சரிக்கைக் குரல்கள் எழாமலில்லை. இரு நாடுகளிடையே ஏற்படும் போரில் நூற்றுக்கும் மேற்பட்ட அணு ஆயுதங்கள் பயன்படுத்தப்படும். இதானால் ஏற்படும் சூழலியல் மாற்றத்தால் உலக மக்கள்தொகையில் பாதிபேர் வறட்சி மற்றும் பசியால் வாடுவர் என்று அணுஆயுதப் போருக்கு எதிரான மருத்துவர்கள் கூட்டமைப்பு ( International Physicians for the Prevention of Nuclear War)கடந்த 2013-ல் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரு நாடுகளின் அணுஆயுத பலம்..

கடந்த 2015ஆம் ஆண்டு கணக்கின்படி, பாகிஸ்தானிடம் 110 முதல் 130 அணுஆயுத ஏவுகணைகள் இருக்கக் கூடும். 2011ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின் படி, 10 முதல் 110ஆக இருந்தது. இது உலக அளவில் அணு ஆயுதங்களுக்கு எதிரான அணு விஞ்ஞானிகள் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள தகவல் (Bulletin of the Atomic Scientists, a global disarmament advocacy). இந்தியாவிடமோ 110 முதல் 120 ஏவுகனைகள் கைவசம் இருக்கின்றன. பாகிஸ்தான் கைவசமுள்ள ஏவுகனைகள் மூலம் இந்தியாவின் முக்கியமான மெட்ரோபாலிடன் நகரங்களான டெல்லி, மும்பை, பெங்களூரு மற்றும் சென்னை ஆகிய நகரங்களைத் தாக்க முடியும் என்கிறார்கள் மேலேகுறிப்பிட்ட அதே அமைப்பினர். பாகிஸ்தான் கைவசமுள்ள ஏவுகணைகளில் 66 சதவீத ஏவுகணைகள் தரையிலிருந்து மேலெழும்பித் தாக்கக் கூடியவையே. அதிகபட்சமாக 2,500 கி.மீ. தூரம் வரை பாகிஸ்தான் ஏவுகனைகளால் தாக்க முடியும் என்று கூறப்படுகிறது. இதேபோல வான்வழித் தாக்குதலுக்குப் பயன்படுத்தக் கூடியதாக 28 சதவீத ஏவுகணைகள் பாகிஸ்தானிடம் உள்ளன. பாகிஸ்தான் கடற்படையிடம் 8 ஏவுகணைகள் கைவசமிருப்பதாகத் தகவல்.

இந்தியாவைப் பொருத்தவரை பிரித்வி மற்றும் அக்னி ஏவுகணைகள் பலம் சேர்க்கின்றன. இதன்மூலம் பாகிஸ்தான் போன்ற சிறிய அளவிலான நாட்டை சில மணி நேரங்களிலேயே தீக்கிரையாக்க முடியும் என்று எச்சரிக்கை மணி அடிக்கிறார்கள் பாதுகாப்புத் துறை நிபுணர்கள். அணு ஆயுதங்களுக்கு எதிரான அணு விஞ்ஞானிகள் கூட்டமைப்பு தரும் தகவல்களின் படி, இந்தியாவிடம் தரையிலிருந்து தாக்க வல்லமை பெற்ற 56 ஏவுகணைகளும், வான்வழித் தாக்குதலுக்குப் பயன்படுத்தும்படியான 48 ஏவுகணைகளும், கடல்வழித் தாக்குதலுக்காக 14 ஏவுகணைகளும் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் பாகிஸ்தானின் முக்கியநகரங்களான இஸ்லாமாபாத், லாகூர், கராச்சி, ராவல் பிண்டி மற்றும் ராணுவத் தலைமையகம் அமைந்துள்ள நௌஷீரா ஆகிய இடங்களை சிலமணி நேரங்களில் தரைமட்டமாக்கி விடும் என்கிறார் மும்பையை மையமாகக் கொண்டு இயங்கும் தேசிய பாதுகாப்பு மைய ஊழியரான சமீர் பட்டீல் தெரிவித்துள்ளார்.

எல்லையைச் சூழ்ந்த போர் மேகம்..

ஜம்மு காஷ்மீரின் யூரி ராணுவத் தலைமையகத்தில் புகுந்து 4 பயங்கரவாதிகள் கடந்த 18ஆம் தேதி நடத்திய தாக்குதலில் இந்திய ராணுவத்தைச் சேர்ந்த 18 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தான் உதவியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதனால் பாகிஸ்தானுக்கு தகுந்த பதிலடி கொடுக்க வேண்டும் என்ற குரல்கள் நாடு முழுவதும் எழுந்தன. இதையடுத்து இந்தியா-பாகிஸ்தான் எல்லையை ஒட்டிய பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் இந்திய ராணுவம் புதன்கிழமை நள்ளிரவு தாக்குதல் நடத்தியது. இதில் 7 பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டன. இதில் 35 முதல் 40 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தான் பதிலடி கொடுக்க்கக் கூடும் என்பதால் இருநாடுகள் எல்லையை போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்..

தாக்குதல் நடவடிக்கைக்குப் பிறகு பாகிஸ்தான் எல்லையை ஒட்டியுள்ள பகுதிகளில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை இந்தியா எடுத்துள்ளது. எல்லைப் பகுதியை ஒட்டி வசிக்கும் மக்கள் அந்த பகுதிகளிலிருந்து வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேலும், பாகிஸ்தான் எல்லைப் பகுதிகளில் ரோந்து பணிகளை ராணுவம் மற்றும் துணை ராணுவப் படைகள் அதிகரித்துள்ளன. இதேபோல மகராஷ்டிரா, குஜராத், பஞ்சாப் மற்றும் ஜம்மு காஷ்மீர் மாநிலங்களில் ரோந்து பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதேபோல எல்லையை ஒட்டிய கடல் பகுதிகளிலும் ரோந்து பணிகளை கடற்படை அதிகப்படுத்தியுள்ளது. எல்லைப்பகுதியை ஒட்டி 10 கி.மீ. சுற்றளவுக்கு வரும் பள்ளிகளை மூட உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

SHARE