இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் அணித்தலைவர் முகமது அசாருதீனின் சர்ச்சைகள் நிறைந்த வாழ்க்கை படமாக்கப்பட்டு உள்ளது

346
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் அணித்தலைவர் முகமது அசாருதீனின் சர்ச்சைகள் நிறைந்த வாழ்க்கை படமாக்கப்பட்டு உள்ளது.கிரிக்கெட்டில் முன்னணி ஆட்டக்காரராக இருந்த அசாருதீனின் சொந்த வாழ்க்கை பரபரப்பும் விறுவிறுப்பும் நிறைந்தது.இவருக்கு இரண்டு மனைவிகள், முதல் மனைவி நவ்ரீன். 9 வருடங்கள் இருவரும் ஒன்றாக குடும்பம் நடத்தினர்.

இதன் பிறகு அசாருதீன் வாழ்க்கையில் இந்தி நடிகை சங்கீதா பிஸ்வானி வந்தார். இதையடுத்து முதல் மனைவியை விவாகரத்து செய்த அசாருதீன், சங்கீதா பிஸ்வானியை 1996ல் இரண்டாவது திருமணம் செய்து கொண்டார்.

இதன் பின்னர் மேட்ச் பிக்சிங் எனும் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக இவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. இதனையடுத்து அசாருதீனுக்கு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் கடந்த 2000ம் ஆண்டு ஆயுட்கால தடை விதித்தது.

இதை எதிர்த்து அவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். கடந்த 8ம் திகதி அசாருதீன் மீதான தடை சட்ட விரோதமானது என்று ஆந்திர உயர்நீதி மன்றம் அறிவித்தது. மேலும், அவர் மீதான தடையையும் நீக்கியது.

இந்நிலையில் சர்ச்சைகள் நிறைந்த அசாருதீனின் வாழ்க்கை படமாக்கப்பட்டு உள்ளது. இதற்கு ‘அசார்’ எனப் பெயரிட்டுள்ளனர்.

இப்படத்தில் அசாருதீன் கேரக்டரில் இம்ரான் ஹாஸ்மி நடித்துள்ளார். அதில் 2000 ஆம் ஆண்டில் நடைபெற்ற சர்ச்சைக்குரிய கிரிக்கெட் சூதாட்ட விவகார காட்சிகள் இடம்பெற்று உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த படம் அசாருதீனின் வாழ்க்கையில் கடவுள் , 2 திருமணங்கள், மற்றும் கிரிக்கெட் சூதாட்டம் ஆகிய மூன்று முக்கிய அம்சங்களை நினைவுபடுத்துகிறது.

இது தொடர்பாக படத்தினுடைய டீசர் வெளியீட்டு விழாவுக்கு வந்திருந்த அசாருதீன் கூறுகையில், இந்த 3 விடயங்களும் மிகவும் நேர்த்தியானவை என்றும் அவைகள் என் வாழ்க்கை பகுதியுடன் இணைந்தவை எனவும் கூறியுள்ளார்.

SHARE