இராணுவத்தினுடைய தலையீடு தொடர்வதனால் பாதிக்கப்படும் மக்கள் கோரிக்கை!

264

 

கிளிநொச்சி-அம்பாள்நகர் கிராம அலுவலக பிரிவில் அமைந்துள்ள சாந்தபுரம் கிராம மக்கள் தமது வாழ்வாதார முயற்சிகளில் இராணுவத்தினுடைய தலையீடு தொடர்வதனால் தாம் தொடர்ந்து பாதிக்கப்பட்டுவருவதாக பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரனின் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளனர்.

சாந்தபுரம் கிராமத்தில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு ஒன்றில் இவ்விடயங்கள் வெளிப்படுத்தப்பட்டன.

சாந்தபுரம் எட்டாம் குறுக்கு வீதியில் ஆறு காணிகளை ஊடறுத்து இராணுவப் பாதை ஒன்று செல்வதால் தமது விவசாய முயற்சிகள் பாதிக்கப்பட்டுள்ளது.

மேலும், அவ்வீதியில் உள்ள பத்தொன்பது குடும்பங்களை 2012 ஆம் ஆண்டு இராணுவத்தினர் கட்டாயமாக வெளியேற்றி சாந்தபுரம் மயானத்திற்கு அருகிலுள்ள வளமற்ற நிலப்பகுதியில் பலவந்தமாக குடியேற்றிமையால் தம்மால் விவசாயம் செய்யமுடியாது உள்ளதென தெரிவித்துள்ளனர்.

 

இதேவேளை, பல நூற்றுக்கணக்கான ஏக்கர் விவசாயக்காணிகளை இராணுவம் கையகப்படுத்தி விவசாயம் செய்து வருவதனால் தமது வேலைவாய்ப்புக்கள் இழக்கப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தியுள்ளனர்.

சாந்தபுரம் நன்நீர் மீனவசங்கம் இரணைமடுக் குளத்தினையே ஆதாரமாக கொண்டு வாழ்ந்துவருவதாகவும், தாங்கள் பிடிக்கின்ற மீனை தாங்கள் காலம் காலமாக பயன்படுத்தி வந்து வாடிகளில் பதப்படுத்துவதற்கு இராணுவத்தால் அனுமதி மறுக்கப்படுவதாகவும் குறிப்பட்டுள்ளனர்.

அதனை மீறி பதப்படுத்த முனைகின்றபோது கருவாடுகள் களவாடப்படுவதாகவும் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் இரணைமடுக்குள புனரமைப்புப்பணிகள் நடைபெறுவதனால் குளத்தினை நம்பிய தமது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், தமக்கு நிவாரணம் வழங்கப்படல் வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இங்கு கருத்துத்தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் இரணைமடு சாந்தபுரம் பகுதியை மையமாகக்கொண்டு நீண்டகால நோக்குடைய அபகரிப்பு வேலைத்திட்டம் ஒன்றினை நடைமுறைப்படுத்துவதாகவே எமக்குத் தெரிகிறது.

ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்களையும், ஆயிரக்கணக்கான ஏக்கர் காட்டுநிலங்களையும் இங்கே இராணுவம் பிடித்து வைத்திருக்கிறது.

உள்ளே பெரும் எடுப்பில் குடியிருப்புக்களும் பாதைகளும் அமைக்கப்படுவதாக தெரிவிக்கின்றார்கள்.

கனகாம்பிகை அம்மன் ஆலயக்காணியில் பௌத்த விகாரையை கட்டுகிறார்கள்.

 

யுத்த வெற்றி ஆயுதங்களை காட்சிப்படுத்தி வைத்திருக்கிறார்கள். ஆயிரக்கணக்கான இராணுவத்தினரை இப்பகுதியில் விசேடமாக குவித்து வைத்திருக்கிறார்கள்.

இவற்றையெல்லாம் பார்க்கின்றபோது நீங்கள் அச்சம் கொள்வதிலே நியாயம் இருக்கிறது.

உங்களுடைய பிரச்சினைகள் தொடர்பாக விசேட கவனம் செலுத்தப்பட்டு தீர்வுகாண முயற்சிப்போம்.

முடியாதுபோனால் இவ்விடயங்கள் சர்வதேச கவனத்திற்கு எடுத்துச் செல்லப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த சந்திப்பில் சாந்தபுர கிராம அபிவிருத்திச்சங்க தலைவர் யோகன், இரணைமடு நன்னீர் மீனவர் சங்கத்தலைவர் றமேஸ், கட்சியின் வட்டார அமைப்பாளர் கீதன், மத்தியசெயற்குழு உறுப்பினர் ஜெயக்குமார், கிராமிய சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள் என பலர் கலந்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

SHARE