இறுதிச்சுற்றில் செரீனா

373

அரையிறுதியில் நோவக் ஜோகோவிச் – ஜான் இஸ்னர் மோதல்

மியாமி ஓபன் டென்னிஸ் போட்டியின் இறுதிச்சுற்றுக்கு 10-வது முறையாக முன்னேறியுள்ளார் அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ்.

அமெரிக்காவின் மியாமி நகரில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் நேற்று நடைபெற்ற அரையிறுதியில் செரீனா கடும் போராட்டத்துக்குப் பிறகு 6-2, 4-6, 7-5 என்ற செட் கணக்கில் ருமேனியாவின் சைமோனா ஹேலப்பை தோற்கடித்தார்.

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தின் முதல் செட்டை செரீனா 6-2 என்ற கணக்கில் கைப்பற்ற, அடுத்த செட்டில் செரீனாவின் ஒரு கேமை முறியடித்த ஹேலப் அதை 6-4 என கைப்பற்றினார். இதையடுத்து வெற்றியைத் தீர்மானிக்க 3-வது செட்டுக்கு நகர்ந்தது ஆட்டம். அந்த செட்டின் ஆரம்பத்தில் அபாரமாக ஆடிய செரீனா ஒரு கட்டத்தில் 5-2 என்ற கணக்கில் முன்னிலை பெற்றார்.

இதனால் போட்டி உடனடியாக முடிந்துவிடும் என அனைவரும் எதிர்பார்த்த நிலையில், திடீரென விஸ்வரூபமெடுத்தார் ஹேலப். 8-வது கேமில் தனது சர்வீஸை தன்வசமாக்கிய அவர், அடுத்த கேமில் செரீனாவின் சர்வீஸை முறியடிக்க, ஆட்டத்தின் போக்கு மாறியது. தொடர்ந்து 11-வது கேமையும் ஹேலப் கைப்பற்ற, அந்த செட் டைபிரேக்கருக்கு செல்லலாம் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கடைசி கேமில் அபாரமாக ஆடிய செரீனா, ஹேலப்பின் சர்வீஸை முறியடித்து 7-5 என்ற கணக்கில் அந்த செட்டை கைப்பற்றி போட்டியை வெற்றியில் முடித்தார்.

வெற்றி குறித்துப் பேசிய செரீனா, “இந்த ஆட்டத்தில் போராடியே வென்றேன். நான் நிறைய தவறுகளை செய்தேன். அதனால் தடுமாற்றம் ஏற்பட்டது. எனினும் இறுதியில் வெற்றி பெற்றது மகிழ்ச்சியளிக்கிறது” என்றார்.

மியாமி ஓபனில் இதுவரை 7 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ள செரீனா, இன்று நடைபெறும் இறுதிச்சுற்றில் உலகின் 12-ம் நிலை வீராங்கனையான ஸ்பெயினின் சுவாரெஸ் நவரோவை சந்திக்கிறார். செரீனாவும், சுவாரெஸும் இதுவரை 4 முறை மோதியிருந்தாலும், அவையனைத்திலும் ஒரு செட்டைக்கூட இழக்காமல் செரீனாவே வெற்றி கண்டுள்ளார்.

சுவாரெஸ் தனது அரையிறுதியில் 6-3, 6-3 என்ற நேர் செட்களில் ஜெர்மனியின் ஆண்ட்ரியா பெட்கோவிக்கை தோற்கடித்தார். சர்வதேச தரவரிசையில் முதல் 10 இடங்களுக்குள் முன்னேறும் வாய்ப்பை நெருங்கியுள்ள சுவாரெஸ், தனது வெற்றி குறித்துப் பேசியதாவது: நல்லதொரு ஆட்டத்தை ஆடியிருக்கிறேன். இதுபோன்ற முக்கிய ஆட்டம் மிகவும் கடினமானவையாகும். எனது இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முயற்சித்தேன். அதனால் சிறப்பாக ஆடி வெற்றி பெற்றிருக்கிறேன். இறுதிச்சுற்று எனக்கு மிகவும் முக்கிய மானது.

இதுபோன்றதொரு இறுதி ஆட்டத்தில் விளையாடுவேன் என்ற நம்பிக்கையில்தான் போட்டி இல்லாத நேரங்களில் கடுமையாக பயிற்சி பெற்றேன்” என்றார். சுவாரெஸ் கடந்த ஆண்டு போர்ச்சுகல் ஓபனில் சாம்பியன் ஆனார். அதுதான் அவர் வென்ற ஒரே டபிள்யூடிஏ பட்டம் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜோகோவிச் வெற்றி

ஆடவர் ஒற்றையர் காலிறுதியில் உலகின் முதல் நிலை வீரரும், நடப்பு சாம்பியனுமான செர்பியாவின் நோவக் ஜோகோவிச் 7-5, 7-5 என்ற நேர் செட்களில் ஸ்பெயினின் டேவிட் ஃபெரரைத் தோற்கடித்தார்.

ஆரம்பத்தில் நிதானமாக ஆடிய ஜோகோவிச், பின்னர் வேகமாக ஆடி வெற்றி கண்டார். முதல் செட்டில் இரு முறை தனது சர்வீஸை இழந்த ஜோகோவிச், பின்னர் சரிவிலிருந்து மீண்டார்.

இந்த சீசனில் மட்டும் 3 சாம்பியன் பட்டங்களை வென்றுள்ள ஜோகோவிச், தொடர்ந்து 8-வது முறையாக டேவிட் ஃபெரரை தோற்கடித்துள்ளார். வெற்றி குறித்துப் பேசிய ஜோகோவிச், “சவால் அளிக்கக்கூடிய எதிராளிகளில் ஃபெரரும் ஒருவர். அவருக்கு எதிராக உடல் களைக்கும் அளவுக்கு போராட வேண்டும் என்பது எனக்கு தெரியும்.

டேவிட் ஃபெரருக்கு எதிராக பேஸ்லைனில் இருந்து மெதுவாக ஆடி, பின்னர் ஆதிக்கம் செலுத்த வேண்டும் என்பதுதான் எனது உத்தி. இந்த ஆட்டம் கடிமான ஒரு ஆட்டம்தான். அதேநேரத்தில் நான் மிகவும் ரசித்து விளையாடினேன். ஆனால் அரையிறுதி ஆட்டம் முற்றிலும் வித்தியாசமானதாக இருக்கும். ஏனெனில் அரையிறுதியில் என்னை எதிர்த்து விளையாடவுள்ள இஸ்னர், சர்வீஸ் அடிப்பதில் வல்லவர்” என்றார்.

ஜோகோவிச் தனது அரையிறுதியில் அமெரிக்காவின் ஜான் இஸ்னருடன் மோதுகிறார். இஸ்னர் தனது காலிறுதியில் 6-3, 6-3 என்ற நேர் செட்களில் சர்வதேச தரவரிசையில் 5-வது இடத்தில் இருக்கும் ஜப்பானின் நிஷிகோரியை தோற்கடித்தார்.

“ஹார்ட் கோர்ட்”டில் அபாரமாக ஆடும் திறமை பெற்றவரான இஸ்னர் மியாமி ஓபனில் இதுவரை ஒரு சர்வீஸைக்கூட எதிராளியிடம் இழக்கவில்லை.

வெற்றி குறித்துப் பேசிய இஸ்னர், “இங்குள்ள வெயில் சூழல் எனக்கு மிக ஏதுவாக அமைந்தது. அதனால் சிறப்பாக ஆட முடிந்தது. நான் தொடர்ந்து சிறப்பாக சர்வீஸ் போடுகிறேன். அதை இன்றைய ஆட்டத்திலும் செய்தேன். சர்வீஸ் அடிப்பதில் தனிக்கவனம் செலுத்துகிறேன்” என்றார்.

SHARE