இலங்கை தமிழரசு கட்சியின் 15 ஆவது மாநாட்டில் 15 தீர்மானம் எடுக்கப்பட்டது. இத்தீர்மானத்தை இலங்கை தமிழரசுக் கட்சி தனித்து நின்று அமுல்படுத்தப் போகின்றதா?- சிறீ ரெலோக் கட்சியின் செயலாளர் நாயகமான திரு. ப. உதயராசா

466

கூட்டமைப்பினர் மோடியை சந்தித்தமையும் அதன் பின்னர் அவர்கள் வெளியிட்ட குழப்பமான அறிக்கைகளையும் காட்டமாக விமர்சித்துள்ளார் சிறீ ரெலோக் கட்சியின் செயலாளர் நாயகமான திரு. ப. உதயராசா. இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கை அப்படியே வருமாறு, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை அண்மையில் சந்தித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் இலங்கைக்கு திரும்பி வந்து பல்வேறு ஊடகங்களுக்கு கொடுத்துள்ள பேட்டிகளும், அறிக்கைகளும் தமிழ் மக்களை ஆழ்ந்த குழப்பத்தில் ஆழ்த்தி உள்ளது.

இதனை எங்கள் மக்களுக்கு தெளிவாக தெரியப்படுத்த வேண்டிய தேவை எனக்கு இருக்கின்றது.

தமிழ் மக்களின் படலைகளைத் தட்டி வாக்குக் கேட்டுவிட்டு, என்ன மோடியிடம் பேசி விட்டு வந்தீர்கள் என்று மக்கள் கேட்கும் போது, இந்தியாவுடன் என்ன கதைத்தோம் என்பதை, முழுமையாக இந்தியாவும் வெளியிட மாட்டாது. நாமும் வெளியிட முடியாது. என்கிறார் தமிழரசுக் கட்சிக்கு தற்போது தலைமை ஏற்றுள்ள மாவை சேனாதிராசா. இந்தக் கூற்றில் இருந்து தமிழரசுக் கட்சியின் வெளிப்படைத் தன்மை காற்றில் பறக்க விடப்படுகின்றது.

ஒன்றுபட்ட இலங்கையில் போதிய அதிகாரங்களுடன் தமிழர்கள் வாழ வேண்டும் என்பதே இந்தியாவின் விருப்பமாக உள்ள நிலையில், நாட்டை பிரித்து தீர்வு ஏற்படுத்த வேண்டும் என்று நாங்கள் கோர முடியாது. என்று அறிக்கை விட்டுள்ளார் இரா. சம்பந்தன் அவர்கள். அப்படியாயின் எதற்கு இவர்கள் இந்தியாவில் போய் பேசுகின்றார்கள். இலங்கை அரசாங்கத்துடன் அல்லவா பேச்சு நடாத்தி இருக்க வேண்டும்.

நாட்டை துண்டாடும் நிகழ்ச்சி நிரல் கூட்டமைப்பிடம் இல்லை. என்று அடித்துச் சொல்கிறார் சுமந்திரன்.

இலங்கையில் இருக்கக்கூடிய இந்தியத்தூதுவருக்கு விசேட அதிகாரங்கள் அளிக்கப்பட்டு, கவனம் செலுத்தப்படும் என்று மோடி கூறியதாக தன் பங்குக்கு அறிக்கை விடுகின்றார் செல்வம் அடைக்கலநாதன். இது கடைசியில் பழைய குருடி கதவைத் திறவடி என்ற கதையாகத் தான் இருக்கப் போகின்றது.

சம்பந்தனை இலங்கையின் கௌரவமான ஒரு தலைவர் என மோடி பாராட்டியது எமக்கு மிகுந்த பெருமையாக இருந்தது. என்று புளாங்கிதமடைகின்றார் பொன்.செல்வராசா.

இலங்கை அரசுடன் பேச்சு நடத்துவதாயின் இந்தியா பார்வையாளராகவேனும் இருக்க வேண்டும், என்று நாம் வலியுறுத்தியதாக சொல்கிறார் சுரேஷ் பிரேமச்சந்திரன்.

இப்படி கருத்தை மாற்றி ஆளாளுக்கு அறிக்கை விடுகின்றனர் கூட்டமைப்பினர். குழம்பிய குட்டையில் மீன் பிடிக்க முயல்வதாகவே தோன்றுகின்றது.

ஆனால், அங்கே காங்கிரஸ் சோனியா அரசில் இருந்து பா.ஜ.க மோடி தலைமையில் ஆட்சி மாறியதே ஒழிய. காட்சிகள் எதுவும் மாறவில்லை. அவர்களின் வெளிவிவகாரக் கொள்கைகள் அப்படியே தான் இருக்கின்றன. இதனை இன்னமும் கூட்டமைப்பு அறியாததது தான் மிகுந்த மனவருத்தம் தருகின்றது.

பெருத்த எதிர்பார்ப்போடு இந்தியாவுக்குச் சென்ற அவர்களின் பேச்சுகளில் ஜீரணிக்க முடியாத அதிர்ச்சியையும் அவதானிக்க முடிகின்றது.

இதனால் தான் ஒருவருக்கு ஒருவர் முரண் பேச்சுப்பேசி மக்களை குழப்பமடைய செய்திருக்கிறார்கள் என்பதே உண்மை.

இப்படி ஒரு முக்கியமான சந்திப்பில் பங்கேற்ற கூட்டமைப்பினர் தங்கள் ஒவ்வொருவரினதும் தனிப்பட்ட கருத்துக்களையே மோடியுடன் பகிர்ந்து விட்டு வந்துள்ளனர். அவை தமிழ் மக்களுடைய இன்றைய உண்மையான வாழ்வியல் பிரச்சினைகளை அடிப்படையாக கொண்டது அல்ல.

இங்கே இன்று நிலைமையே வேறு. ஊருக்கே அரிசி வழங்கிய வன்னி மக்கள் வறட்சியினாலும், வறுமையினாலும் வெங்காயமும் சோறும் சாப்பிடக் கூடிய நிலையில் கூட அவர்கள் இல்லை. ஒவ்வொரு குடும்பமும் அப்படி சரியாகக் கஷ்டப்படுகின்றார்கள்.

ஆனால், கூட்டமைப்பினரோ களத்தில் நின்று மக்கள் பணியாற்றுவதனை விட்டு விட்டு தனிப்பட்ட குடும்ப விடயங்களுக்காக விமானத்திலேறி பறக்கின்றார்கள். ஏனென்றால் முக்கால்வாசி கூட்டமைப்பினரின் குடும்பங்கள் வெளிநாடுகளில் தான் செட்டில் ஆகி உள்ளனர்.

இறுதியாக அண்மையில் நடந்த தமிழரசுக் கட்சி மாநாட்டைப் பற்றியும் சிறிது பேச வேண்டி உள்ளது.

மாநாட்டின் இறுதிநாளன்று சகல தமிழ் கட்சிகளுக்கும் அழைப்பு விடுவதாக அறிக்கப்பட்டிருந்தும் இலங்கை தமிழரசுக் கட்சியானது அழைப்பு விடுத்தலில் பாரபட்சம் காட்டியிருந்ததை அவதானிக்ககூடியதாக இருந்தது.

தமிழ் மக்கள் தமிழ் தேசிய கூட்டமைபை ஆதரிப்பதன் நோக்கம் தமிழ் கட்சிகள் அனைத்தும் கைகோர்த்து ஒன்று சேர்ந்து நிற்கின்றன. எமது தீர்வு விடயத்தில் ஒன்று சேர்ந்து சரியான முடிவெடுப்பார்கள் என்ற நப்பாசையில் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு மக்கள் தமது ஆணையை வழங்குகின்றனர்.

மக்கள் எதை எண்ணி ஆணையை வழங்கினார்களோ. அதற்காக கூட்டாக சேர்ந்து செயற்பட வேண்டிய தேவைப்பாடு பிரதிநிதிகளுக்கும் தமிழனின் தலைவிதியை நாம் கையில் எடுத்துவிட்டோம் என்று எண்ணும் தலைவர்களும் கவனத்தில் கொண்டு செயற்பட வேண்டிய தேவைப்பாடு உள்ளது.

தற்போது தமிழ்த் தேசிய கூட்டமைபில் சுமார் ஐந்து கட்சிகள் அங்கம் வகிக்கின்றன. ஓவ்வொரு கட்சிகளுக்கும் ஒரு தனித்துவமும் தமக்கொன்று ஒரு கொள்கையும் உள்ளது தாம் பொதுக்கூட்டமும் மாநாடும் தமது கொள்கை பரப்புவதும் என்ற பல தேவைபாடுகளும் இருக்கத் தான் செய்கின்றன.

இருந்த போதும் மக்கள் தமிழ் கட்சிகள் அனைத்தும் ஒன்று சேர்வதையே விரும்புகின்றனர்.

இலங்கை தமிழரசு கட்சியின் 15 ஆவது மாநாட்டில் 15 தீர்மானம் எடுக்கப்பட்டது. இத்தீர்மானத்தை இலங்கை தமிழரசுக் கட்சி தனித்து நின்று அமுல்படுத்தப் போகின்றதா? அல்லது கூட்டமைப்பு என்கின்ற குடையின் கீழ் நின்று அமுல்படுத்த எண்ணியுள்ளதா? அல்லது இத் தீர்மானங்களை அப்படியே கைவிடப் போகின்றதா? என்ற கேள்விகள் எழும் நிலையில் பல சங்கடங்களையும் தமிழரசு கட்சி மீது நம்பிக்கையீனம் ஒன்று மக்கள் மத்தியில் எழுகின்றது.

இவ்வாறாக ஒவ்வொரு கட்சியும் தனித் தனியாக மாநாடு நடாத்தி தீர்மானங்களை எடுத்தால் 75 தீர்மானங்கள் வந்துவிடும். அவை ஒன்றுக் கொன்று முரண்பாடாக அமையவும் வாய்ப்புக்களும் இருக்கும். இவ்வாறு சென்றால் கூட்டமைப்பாக சேர்ந்து என்ன முடிவெடுக்கப்படும். என்ற கேள்விகள் மக்கள் மத்தியில் எழுந்துள்ளன. இவை எல்லாவற்றுக்கும் ஆன பதிலினை கூட்டமைப்பை அரியணையில் ஏற்றிய மக்கள் தான் வழங்க வேண்டும்.

TPN NEWS

SHARE