ஈழத்தமிழராகிய நாங்கள் பெரும் இன அழிப்பினை சந்தித்து விட்டு அரசியல் ரீதியான சவால்களுக்கும் முகம் கொடுத்துக் கொண்டிருக்கிறோம்- சந்திரநேரு சந்திரகாந்தன்

258

 

ஈழத்தமிழராகிய நாங்கள் பெரும் இன அழிப்பினை சந்தித்து விட்டு அரசியல் ரீதியான சவால்களுக்கும் முகம் கொடுத்துக் கொண்டிருக்கிறோம் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரநேரு சந்திரகாந்தன் தெரிவித்தார்.

Chandranehru Chandrakanthan

மே 18 முள்ளிவாய்க்கால் நினைவுகள் குறித்து கருத்துத் தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,

மே 18 என்கிற விடயம் என்பது எங்களுக்குள்ளேயே, கடந்த காலத்தில் நடைபெற்ற இன அழிப்பினுடைய நினைவுகளை மாத்திரமல்ல, அந்த அழிப்பின் ஊடாக எதிர்காலத்தில் சிறந்ததொரு தீர்வையோ திட்டத்தினையோ பெற்றுக்கொள்ள வேண்டுமாக இருந்தால் ஒரே குடையின் கீழ் ஒற்றுமையாக வேலைத்திட்டங்களை செய்ய வேண்டும். மற்றையது நாங்கள் வெறுமனே அரசியல் லாபத்துக்காக எம்மை அடையாளப்படுத்துவதற்காக மக்கள் மத்தியில் குரல் கொடுக்கிறோம் என்ற போலியைக் காட்டாமல் இதய சுத்தியுடன் நாங்கள் செயற்பட வேண்டும்.

அந்தக் கடைசி வேளையில் ஏதோ ஒரு வகையில் சம்பந்தப்பட்டவன் என்ற ரீதியில், அந்த மக்கள் அழும் பொழுது உலக நாடுகள் எங்களுடைய முக்கியமான அரசியல்வாதிகள் கண்ணை கொண்டுதான் இருந்தார்கள். ஆகையினால் இந்த விடயத்தினை மையப்படுத்தி எங்களுக்கு நடைபெற்ற கோரமான இன அழிப்பு என்ற விடயத்தினை மிகவும் அவதானமாகச் செயற்பட வேண்டும்.

எங்களுக்கு முகவராக வைத்துக் கொண்டு இலங்கை அரசாங்கம் தங்களது காய்களை நகர்த்திக் கொண்டிருக்கிறது. அரசியல் ரீதியாகவும் இராஜதந்திர ரீதியாகவும் இது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அதேபோன்று அடுத்த கட்டத்திற்கு எங்களுடைய போராட்டத்தினைக் கொண்டு போவதற்கு நாம் முயற்சி செய்தாலும் எங்கள் மத்தியில் பல பிரச்சினைகள் இருக்கின்றன. இந்தப்பிரச்சினைகளைத் தீர்க்காமல் வெறுமனே மே 18 நிகழ்வுகளை நடத்துவதால் எந்தவிதமான பிரயோசனமும் கிடைக்கப் போவதில்லை.

ஈழத்தமிழர்களுக்கு சிந்திக்கும் திறனை வளர்த்து நாங்கள் எங்கள் சொந்தக்காலில் இருந்து போராடுகிறதாக இருக்க வேண்டுமே தவிர. மற்றையவர்களின் அறிவைக் கொண்டு வந்து எங்களது போராட்டத்தினைக் கொண்டு போவதென்பது மீண்டும் ஒரு முள்ளிவாய்க்காலுக்குப் போவது போன்றே இருக்கும்.

ஈழத்தில் போராளிகள் தற்கொலை செய்து கொள்கிறார்கள். போராளிகள் அன்றாட வாழ்வுக்கே கையேந்திக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் நாங்கள் ஐரோப்பிய நாடுகளில் சீமானுக்கு கிளைகள் திறப்பதற்குப் பதிலாக தமிழீழப் போராட்டத்துக்காகக் காயப்பட்ட மக்களுக்கு, போராளிகளை பராமரிப்பதற்கு அரசியல் ரீதியாக பலப்படுத்துவதற்குமான வேலைத்திட்டங்களே தற்போதைய தேவையாகும். அதற்காக சீமான் என்ற ஒரு சிலரைப் பலப்படுத்தி எதுவும் நடைபெறப் போவதில்லை. அதற்காக சீமான் செய்வது பிழை என்று சொல்லவில்லை. ஆனால் சீமானால் நூற்றுக்கு நூறுவீதம் தமிழர்களுடைய போராட்டத்துக்காக எதனையும் செய்ய முடியாது என்பதே உண்மை.

எம்முடைய மக்கள் மே 18ல் கொத்துக்கொத்தாக இறந்து கொண்டிருக்கும் போது யாரும் வந்து உதவிகள் செய்யவில்லை. இப்போது அரசியல் ரீதியாகவும் இராஜதந்திர ரீதியாகவும் எங்களது போராட்டங்களை நடத்துவதற்கு பல்லாயிரம் பிரச்சினைகளுக்கிடையில் தத்தித் தவித்துக் கொண்டிருக்கிறோம். இலங்கை அரசாங்கம் தனது ஒவ்வொரு அடியிலும் மிகவும் நுண்ணிப்பாக ஜீ.எஸ்.பி. பிளஸ் உட்பட அவதானமாக இருக்கும் போது இந்த மே 18 அரசியல் ரீதியாக அரசியல்வாதிகள் செய்வதற்கு எந்த அருகதையும் கிடையாது.

கடைசி நிமிடத்தில் மக்களுடைய கூக்குரல் அவலக்குரல் உலகுக்குக் கேட்டு மௌனமாக இருந்தவர்கள். இப்போது விழித்துக் கொண்டு அந்த மக்களுக்கு உதவி செய்கிறோம். அஞ்சலி செலுத்துகிறோம் என்று சொல்லிக் கொண்டு அவர்களைக் கேவலப்படுத்தக்கூடாது.

இந்த நிலையில் மக்கள் மிகவும் அவதானமாக மிகவும் அரசியல் ரீதியாக பலப்படுவதற்காக சிந்தித்துச் செயற்பட வேண்டும். புலம்பெயர் சமூகத்தில் எல்லோருமே உழைப்பது குளிரிலும் வெயிலிலும் தான் அந்தப் பணத்தினை ஒரு சிலரைப் பலப்படுத்துவதற்காக வீணடிக்காது. போராட்டத்திற்கு வித்திட்ட போராளிகளது குடும்பங்கள் மிகவும் வறுமையில் இருக்கிறார்கள். அவர்களை மீட்டெடுப்பதற்கு ஒற்றுமையான செயற்பாடுகள் செய்யப்பட வேண்டும் எனத் தெரிவித்தார்.

 

SHARE