ஈ.பி.டி.பியும் இராணுவமும் கடத்தி சென்ற ஊடகவியலாளர். இராமச்சந்திரன் எங்கே? – ஐ.நாவில் சிங்கள ஊடகவியலாளர் கமகே கேள்வி

303

 

gamageஇராணுவத்தினரின் ஒத்தாசையுடன் ஈ.பி.டி.பி செய்த சட்டவிரோத மண் அகழ்வு தொடர்பாக கட்டுரை எழுதியதற்காக ஊடகவியலாளர் இராமச்சந்திரன் கடத்தி செல்லப்பட்டார். அவரின் கடத்தலுக்கு இராணுவமும் ஈ.பி.டி.பியும் பதில் சொல்ல வேண்டும் என சுயாதீன சிங்கள ஊடகவியலாளர் ப்ரெட்டி கமகே ஐ.நா.மனித உரிமை பேரவையில் தெரிவித்தார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் இலங்கையில் காணாமல் போன மற்றும் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி வேண்டி உப கூட்டம் ஒன்றை இமெடா சர்வதேச அமைப்பு ஏற்பாடு செய்திருந்ததுத

இந்த கூட்டத்தில் ஊடகவியலாளர் ப்ரெட்டி கமகே, திருமதி சந்தியா எக்னெலிகொட ஆகியோர் முக்கிய உரைகளை நிகழ்த்தியிருந்தனர்.

zu-polt

இலங்கையில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களில் ஏராளமானவர்கள் வடக்கு கிழக்கில் உள்ள தமிழ் ஊடகவியலாளர்களாகும். அதேபோன்று வடகிழக்கில் தமிழ் ஊடகவியலாளர்கள் கடத்தப்பட்டு காணாமல் போயிருக்கிறார்கள். ஆனால் ஐ.நா.மனித உரிமை பேரவையில் பிரதான கூட்டங்களில் அரசசார்பற்ற நிறுவனங்களின் சார்பில் இருநிமிடம் உரையாற்றும் தமிழர் தரப்பினரோ அல்லது பக்க அறைகளில் கூட்டங்களை நடத்தும் தமிழ் அமைப்புக்களோ படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் பற்றி பேசியது கிடையாது.
தமிழ் அமைப்புக்கள் கவனத்தில் எடுக்காத ஊடகவியலாளர் படுகொலை பற்றி இமெடா போன்ற முக்கிய நிறுவனங்கள் கவனம் செலுத்துவது பாராட்டுக்குரியதாகும்.

ஊடகவியலாளர் கமகே படுகொலை செய்யப்பட்ட மற்றும் காணாமல் போன ஊடகவியலாளர்கள் பற்றி அறிக்கை ஒன்றை சமர்ப்பித்து உரையாற்றினார்.

யாழ்ப்பாணத்தில் 2007ஆம் ஆண்டு காணாமல் போன சுப்பிரமணியம் இராமச்சந்திரன் பற்றிய விபரங்களை ஊடகவியலாளர் கமகே தனது உரையில் முக்கியமாக குறிப்பிட்டார்.
வடமராட்சியை சேர்ந்த சுப்பிரமணியம் இராமச்சந்திரன் காணாமல் போவதற்கு சில வாரங்களுக்கு முதல் யாழ்ப்பாணத்தில் இடம்பெறும் சட்டவிரோத மண் அகழ்வு பற்றி கட்டுரை ஒன்றை எழுதியிருந்தார்.

முக்கியமாக வடமராட்சி கிழக்கு மணல்காட்டில் ஈ.பி.டி.பியினரால் மேற்கொள்ளப்படும் மணல் அகழ்வு பற்றியும் அதற்கு இராணுவமும் வர்த்தகர்கள் சிலரும் எவ்வாறு ஒத்துழைப்பு வழங்குகின்றனர் என்றும் இதனால் ஏற்படும் சூழல் பாதிப்பு பற்றியும் விபரித்திருந்தார்.
ஈ.பி.டி.பியினரின் மண் அகழ்வு மோசடி குறித்து படங்களையும் தகவல்களையும் வெளியிட்ட மணல்காட்டை சேர்ந்த இளைஞர் ஒருவர் யுத்தம் முடிந்த பின்னர் படுகொலை செய்யப்பட்டிருந்தார்.

கடத்தப்பட்ட இராமச்சந்திரன் இராணுவ முகாமிலும் ஈ.பி.டி.பி இயக்க அலுவலகத்திலும் வைத்து விசாரிக்கப்பட்ட பின்னர் காணாமல் போயுள்ளார் என்றே அவரின் உறவினர்கள் கூறுகின்றனர். மண் அகழ்வு தொடர்பான கட்டுரையை எழுதியதற்காகவே இராமச்சந்திரன் கடத்தப்பட்டிருக்கலாம் என்றே அவரின் ஊடகத்துறை நண்பர்கள் நம்புகின்றனர் என கமகே தனது உரையில் தெரிவித்தார்.

2009ஆம் ஆண்டு யுத்தம் முடிந்து சில நாட்டிகளின் பின் பருத்தித்துறையில் உள்ள இராமச்சந்திரனின் வீட்டிற்கு இராணுவத்தினரும் பொலிஸாருமாக சுமார் 6பேர் சென்று இராமச்சந்திரனின் கல்விச்சான்றிதழ் உட்பட ஆவணங்கள் அனைத்தையும் எடுத்து சென்றதாக அவரின் பெற்றோர் தெரிவித்தனர். இது தொடர்பாக பெற்றோர் பருத்தித்துறை பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடு செய்திருந்தனர்.

யாரால் காணாமல் ஆக்கப்பட்டார்கள் என்பதற்கு இராமச்சந்திரனின் கடத்தல் சம்பவங்கள் போல பல சம்பவங்கள் இருப்பதாக ஊடகவியலாளர் கமகே சுட்டிக்காட்டினார்.
9 வருடங்கள் கடந்த நிலையிலும் கடத்தப்பட்ட ஊடகவியலாளர் இராமச்சந்திரன் என்றோ ஒருநாள் திரும்பி வருவார் என்ற நம்பிக்கையில் அவர்களின் குடும்பத்தினர் காத்திருக்கின்றனர். அவர்களை போலவே ஊடகவியலாளர் எக்னெலியகொடவின் மனைவி சந்தியாவும் தனது கணவருக்கு என்ன நடந்தது என்பதை இந்த அரசாங்கம் தெளிவு படுத்த வேண்டும் என கோரி நிற்கிறார்.

ஊடகவியலாளர் சுப்பிரமணியம் இராமச்சந்திரன் ஊடகவியலாளர் எக்னெலியகொட போன்றவர்கள் கடத்தப்பட்டது போல நாட்டில் 44 ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்கள்.

இவர்களில் தராகி சிவராம், நிமராஜன், லசந்த விக்கிரமசிங்க போன்றவர்களை படுகொலை செய்தவர்கள் யார் என்பது தெரிந்த விடயம். ஆனால் குற்றவாளிகள் தண்டிக்கப்படவில்லை. இத்தகைய படுகொலைகளுக்கு நீதி கிடைக்க சர்வதேச மனித உரிமையாளர்கள் தொடர்;ச்சியான அழுத்தங்களை கொடுக்க வேண்டும் என கமகே சுட்டிக்காட்டினார்.

கடந்த யூலை மாதத்தில் வடக்கிலிருந்து வந்த 54 ஊடகவியலாளர்கள் கொழும்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவையும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவையும் சந்தித்தனர்.

சிவராம், நிமலராசன் உட்பட வடக்கு கிழக்கில் கொல்லப்பட்ட ஊடகவியலாளர்கள் பற்றி எந்த ஓரு விசாரணையும் முறையாக நடைபெறவில்லை என சுட்டிக்காட்டியிருந்தனர்.

கடந்த யூன் மாதம் 2ஆம் திகதி நீர்கொழும்பு மாநகரசபை கூட்டம் முடிந்து திரும்பி வரும் வழியில் தான் தாக்கப்பட்டதாகவும் கமகே சுட்டிக்காட்டினார்.

நீர்கொழும்பு பிரதிமேயர் இத்தாக்குதல் சம்பவத்திற்கு நேரடி தொடர்பு என்ற போதிலும் 3மாதங்களாகியும் அவர் கைது செய்யப்படவில்லை. இதுதான் நல்லாட்சி என சொல்லும் மைத்திரிபால சிறிசேனா அரசின் போக்கு என்றும் கமகே தெரிவித்தார்.

இதேவேளை வடக்கு கிழக்கில் கொல்லப்பட்ட தமிழ் ஊடகவியலாளர்கள் பற்றி நீதி விசாரணை நடத்த வேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பு போன்ற தமிழ் தரப்பு கோரிக்கை விடுக்காது மௌனம் காப்பதற்கு இன்னொரு காரணமும் இருக்கிறது.

சிவராம் கடத்தல் மற்றும் படுகொலை சம்பவத்தில் புளொட் இயக்கம் மற்றும் சிறிலங்கா இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு நேரடி தொடர்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சிவராமின் தொலைபேசி சிம் கார்ட் சிம் கார்ட் புளொட் இயக்கத்தின் கொழும்பு பொறுப்பாளர் பீற்றர் என்பவரிடமிருந்து கைப்பற்றப்பட்டதாக முன்னர் தகவல் வெளியாகியிருந்தது.

புளொட் இயக்கம் இப்போது தமிழ் தேசியக் கூட்டமைப்பு மற்றும் தமிழ் மக்கள் பேரவை ஆகியவற்றின் முக்கிய பங்காளி கட்சி.

SHARE