உடுவில் மகளீர் கல்லூரிமாணவிகளின் போராட்டம் முடிவுக்கு வந்தது:

261

 

உடுவில் மகளீர் கல்லூரிமாணவிகளின் போராட்டம் முடிவுக்கு வந்தது:

உடுவில் மகளீர் கல்லூரி அதிபர் மாற்றத்திற்கான போராட்டம் மல்லாகம் நீதிவான்  நீதிமன்ற நீதிவான் ஏ.யூட்சனின் தலையீட்டுடன் , முடிவுக்கு கொண்டுவரப்பட்டு உள்ளது.

உடுவில் மகளீர் கல்லூரிக்கு புதிதாக அதிபர் நியமிக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் பழைய அதிபரின் சேவைக்காலம் நீடிக்கப்பட  வேண்டும் எனவும் கோரிக்கைகளை முன்  வைத்து கடந்த 3ம் திகதி முதல் சில மாணவிகள் , பெற்றோர்கள் , பழைய மாணவர்கள் போராட்டத்தை முன்னெடுத்து வந்தனர்.

இந்நிலையில் நேற்றைய  தினம் புதன்கிழமை காலை, இதுவரை  பாடசாலையில் உப அதிபராக இருந்த திருமதி பற்ரீசியா சுனித்தாவை புதிய அதிபராக பாடசாலையின் ஆளுநர் சபை,  நியமித்தது.

அதனை தொடர்ந்து இன்று முதல் பாடசாலை மூன்றாம் தவணைக்காக ஆரம்பமானது. பாடசாலை மீள ஆரம்பிக்கப்பட்டதை அடுத்து  அதன் போது பாடசாலை மாணவிகளுடன் , புதிதாக நியமனம் பெற்ற அதிபர் தலைமையில் , அவருக்கு ஆதரவான ஆசிரியர்கள் கலந்துரையாடலை நடாத்தினர்.

குறித்த கலந்துரையாடலில் இருந்து மூன்று மாணவிகள் வெளியேறி தாம் வீடு செல்லவென  கல்லூரி வாசலை நோக்கி ஓடிவந்தனர்.

அவ்வாறு  ஓடி வந்த மாணவர்களை கல்லூரி வாசலில் நின்ற பொலிசார் தடுத்து நிறுத்தினர். அதனையும் மீறி மாணவிகள் பெற்றோரிடம் வந்து சேர்ந்தனர்.

அதனை அடுத்து அவ்வாறு வந்த மாணவிகளை அங்கு கடமையில் இருந்த பொலிசார் வீடியோ எடுத்தனர். அதனை பெற்றோர் தடுக்க தடுக்க பொலிசார் வீடியோ எடுத்தனர்.

அதனை தொடர்ந்து ஏனைய மாணவிகளையும் வீடு செல்ல அனுமதிக்க வேண்டும் என பெற்றோர் கோரிக்கை விடுத்தனர். அதற்கு பொலிசார் மறுப்பு தெரிவிக்கவே , பெற்றோர் மனித உரிமை ஆணைக்குழுவுக்கு அறிவித்தனர்.

அங்கு வந்த மனித உரிமை ஆணைக்குழுவை சேர்ந்தவர்களை பொலிசார் பாடசாலைக்குள் செல்ல விடாது தடுத்து நிறுத்தினர்.

அந்நிலையில் ஏற்கனவே வெளியேறி இருந்த மாணவிகள் மல்லாகம் நீதிவான் நீதிமன்ற நீதிவான் ஏ.யூட்சனிடம் சென்று  முறையிட்டனர். அத்துடன் தம்மை பொலிசார் துரத்தி துரத்தி வீடியோ எடுத்தமை தொடர்பிலும் நீதிவானிடம் முறையிட்டனர்.

அதனை தொடர்ந்து நீதிவான் நீங்கள் பாடசாலைக்கு செல்லுங்கள் , உங்கள் முறைப்பாடு தொடர்பில் தான் நடவடிக்கை எடுப்பதாக கூறி மாணவிகளை பாடசாலைக்கு அனுப்பி வைத்தார்.

நீதிவானின் அறிவுறுத்தலை அடுத்து மீள பாடசாலைக்கு வந்த மாணவிகளை பாடசாலைக்குள் செல்ல விடாது பொலிசார் தடுத்து நிறுத்தினர். அதனையும் மீறி பாடசாலைக்குள் செல்ல முற்பட்ட மாணவிகளை ஆண் பொலிசார் தள்ளி விட்டனர்.

அதனை கண்ணுற்ற அங்கிருந்த பெற்றோர் தம் பெண் பிள்ளைகளை எவ்வாறு ஆண் பொலிசார் தொட்டு தள்ளிவிடாலம் என கேள்வி எழுப்பினர்.

அத்துடன் பெண்கள் கல்லூரிக்குள் ஆண் பொலிசாருக்கு செல்ல வேண்டிய அவசியம் என்ன ? எங்கே பெண் பொலிசார் என கேள்வி கேட்டனர். அதனை அடுத்து அங்கு கடமையில் இருந்த பொலிசார்,  பெற்றோர் , மாணவிகளை கைத்தொலைபேசியில் படம் எடுத்தனர்.

பொலிசாரின் அத்தகைய செயற்பாட்டுக்கு  பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அதனால் பதட்டம் ஏற்பட்டது.

இதனை தொடர்ந்து மல்லாகம் நீதிவான் நீதிமன்ற நீதிவான் ஏ. யூட்சனுக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து பாடசாலைக்கு நேரில் வருகை தந்த நீதிவான் , பொலிசாரினால் தடுத்து நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த மாணவிகளை பாடசாலைக்குள் அழைத்து சென்று , கலந்துரையாடலை நடாத்தினார்.

அதில் பழைய அதிபர் , புதிய அதிபர் , ஆசிரியர்கள் , மாணவிகள் கலந்து கொண்டு இருந்தனர்.

குறித்த கலந்துரையாடல் சுமார் இரண்டு மணி நேரம் நடைபெற்றது. இறுதியில் , பழைய அதிபர் தனது பொறுப்புக்கள் அனைத்தையும் புதிய அதிபரிடம் கையளிப்பதாகவும் , எதிர்வரும் செவ்வாய்க்கிழமை முதல் , கல்வி செற்பாடுகள் சுமூக மான முறையில் நடைபெறும் எனவும் , பழைய அதிபர் பாதிக்கப்பட்டு இருப்பின் , சட்ட நடவடிக்கை எடுக்கலாம் , எனவும் முடிவு எட்டபட்டது.

அதனை தொடர்ந்து மாணவிகளின் போராட்டங்கள் முடிவுக்கு வந்துள்ளது.

புதிய அதிபரின் கீழ் எம்மால் கல்வி கற்க முடியாது.
அவர்களை எதிர்த்து போராடியதால் பழிவாங்குவார்கள். அவ்வாறான செயற்பாடு நடைபெறாமல் இருக்க தமக்கு உத்தரவாதம் தரவேண்டும் எனவும் ,
தம்மை தாக்கியவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்.என போராட்டத்தில் ஈடுபட்ட மாணவிகள் கோரியுள்ளனர்.

கல்லூரியின் பிரச்சனையை நாளை(09) யாழ் வரும் ஜனாதிபதியிடம் கவனத்திற்கு கொண்டு செல்ல உள்ளதாக பெற்றோர் தெரிவித்து உள்ளனர்.

அதேவளை இன்றைய தினம் பாடசாலை சூழலில் ஏற்பட்ட அமைதியின்மை நிலைமையை தொடர்ந்து அங்கு வந்திருந்த வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் , பெண்கள் பாடசாலைக்குள் எவ்வாறு ஆண் பொலிசார் செல்ல முடியும் ? போராட்டத்தில் ஈடுபட்ட மாணவிகளை எவ்வாறு ஆண் பொலிசார் தள்ளிவிட முடியும் ? எதற்காக பெண் பொலிசார் இங்கு கடமையில் இல்லை என சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகரிடம் கேள்வி எழுப்பினார்.

அதற்கு அவ்வாறு எதுவும் நடைபெறவில்லை. என சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் மறுப்பு தெரிவித்த போது அங்கிருந்த பெற்றோர் அதற்கு கடும் எதிர்ப்பை வெளிக்காட்டினார்கள். அதனை அடுத்து சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் அங்கிருந்து சென்று இருந்தார்.

அதேவேளை பாடசாலைக்குள் மல்லாகம் நீதிவான் நீதிமன்ற நீதிவான் ஏ,யூட்சன் அதிபர் ,  ஆசிரியர்கள் , மாணவிகளுடன் கலந்துரையாடல் நடாத்திக்கொண்டிருந்த வேளை வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் , மற்றும் முதலமைச்சரின் பிரதிநிதியாக வந்திருந்த முதலமைச்சரின் செயலாளர் ஆகியோரை பாடசாலைக்குள் செல்ல பொலிசார் அனுமதி மறுத்து இருந்தனர்.

இதனால் அவர்கள் பெற்றோருடன் பாடசாலை வாசலில் காத்திருந்தனர்.

அவ்வேளை அங்கு வந்த மற்றுமொரு வடமாகாண சபை உறுப்பினர் கேசவன் சயந்தன் பாடசாலைக்குள் செல்வதற்கு பொலிசார் அனுமதிக்க முற்பட்ட வேளை அங்கு கூடியிருந்த பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அத்துடன் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரனுக்கு எதிராக கோஷங்களையும் எழுப்பினர்.

அதனால் பொலிசார் சயந்தனுக்கு அனுமதி மறுத்ததை அடுத்து சயந்தன் அங்கிருந்து வெளியேறி சென்றார்.

SHARE