“உன் மகளுக்கு படிப்பும் வரல, காதும் கேட்கல. இனி அவளை பள்ளிக்கு அனுப்பாதே…!” என்று டி.சி. கொடுத்துள்ளார் ஒரு தலைமை ஆசிரியை.

332

இந்தியாவில் ராமநாதபுரம் மாவட்டத்திற்கு அருகே உள்ளது பேராவூர். இந்த ஊர் பஞ்சாயத்து அலுவலகத்தில் துப்புரவு பணியாளராக பணியாற்றி வருபவர் காளி.

இவரது மனைவி கமலா, பேசும் மற்றும் கேட்கும் திறனை இழந்த மாற்று திறனாளி. இந்த தம்பதியருக்கு 3 பிள்ளைகள். இவர்களின் கடைசி மகள் முத்துலட்சுமி. கடந்த ஆண்டு முத்துலட்சுமி பேராவூர் அரசு உயர் நிலைப்பள்ளியில் 10 ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார்.

முத்துலட்சுமியின் வகுப்பு ஆசிரியர் ஒருவர், முத்துலட்சுமியை இனி பள்ளிக்கு வர வேண்டாம் என சொல்லி அனுப்பியுள்ளார். தங்களது மகளை திடீரென பள்ளிக்கு வர வேண்டாம் என ஏன் சொன்னார்கள் என அறிய காளியும், அவரது மாற்று திறனாளி மனைவி கமலாவும் பள்ளிக்கு பதட்டத்துடன் சென்றுள்ளனர்.

அங்கு வகுப்பு ஆசிரியர் மற்றும் தலைமை ஆசிரியரிடம், “எங்கள் மகளை ஏன் படிக்க வரக்கூடாது? என சொன்னீர்கள்!” என கேட்டுள்ளனர்.

அதற்கு பதிலளித்த தலைமை ஆசிரியரும், ஆசிரியரும், ”முத்துலட்சுமிக்கு நாங்கள் சொல்லி கொடுக்கும் பாடங்கள் எதுவும் புரியவில்லை. அவருக்கு காது வேறு கேட்கவில்லை. எனவே படிக்க வரவேண்டாம் எனக் கூறினோம்” என்று தெரிவித்து உள்ளனர்.

இதை கேட்ட பெற்றோர், ”எங்கள் பிள்ளை 10வது வரையாவது படித்து முடிக்க உதவுங்கள். வேண்டுமானால் இன்னும் ஒரு வருடம் 9 ஆம் வகுப்பிலேயே படிக்க வையுங்கள்” என கெஞ்சியுள்ளனர்.

ஆனால், இதனை ஏற்க மறுத்த அந்த ஆசிரியரும், தலைமை ஆசிரியரும், ”இனி உங்கள் மகள் இங்கு படிக்க முடியாது. வேண்டுமானால் டி.சி.யை வாங்கிட்டு போங்க” என சொல்லி அப்போதே முத்துலட்சுமியை பள்ளியில் இருந்து நீக்கி டி.சி. கொடுத்துள்ளனர்.

இதனால், மனம் நொந்த நிலையில் இருந்த முத்துலட்சுமியை அப்பகுதியில் இருந்த மகளிர் அமைப்பின் மூலம் நடத்தப்பட்டு வரும் தையல் பயிற்சிக்கு அனுப்பியுள்ளனர். தையல் பயிற்சி முடித்த நிலையில், இலவச தையல் இயந்திர கேட்டு மனு கொடுக்க ராமநாதபுரம் ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்திருக்கிறார். அங்கிருந்த அலுவலர்கள், முத்துலட்சுமிக்கு இன்னும் 18 வயதாகவில்லை. எனவே தையல் இயந்திரம் இப்போது கொடுக்க இயலாது என சொல்லி அனுப்பி இருக்கின்றனர்.

இந்நிலையில், செய்தியாளர்களிடம் காளி கூறும்போது, ”துப்புரவு தொழிலாளியான எனக்கு போதுமான வருமான இல்லாததால் என் மகள் முத்துலட்சுமியை முதல் வகுப்பில் இருந்தே பேராவூரில் உள்ள அரசு பள்ளியில்தான் படிக்க வைத்தேன்.

இரு வருடங்களுக்கு முன் அவளுக்கு கேட்கும் திறனில் குறை ஏற்பட்டது. படிக்கும் பிள்ளை என்பதால் காது கேட்கும் கருவி வாங்கி கொடுத்து பள்ளிக்கு அனுப்பி வந்தேன். ஒரு நாள் குளிக்கும்போது அந்த கருவி தண்ணீர் பட்டு பழுதாகிவிட்டது. இதனால் அந்த கருவி இல்லாமலே பள்ளிக்கு சென்று வந்தாள்.

இந்நிலையில், திடீரென பள்ளிக்கூடத்துக்கு வர வேணாம்னு டீச்சர் சொன்னதா என் மக சொல்லுச்சு. என்ன காரணம்னு டீச்சர்கிட்ட கேட்டேன். அதற்கு அவர், உங்க மகளுக்கு எவ்வளவு சொல்லி கொடுத்தாலும் மண்டையில ஏற மாட்டேங்குது. புரியாமலே உக்காந்துகிட்டு இருக்கு. எனவே இனி பள்ளிக்கு அனுப்ப வேணாம்’னு சொன்னாங்க. நானும் அவங்ககிட்ட எவ்வளவோ கெஞ்சி பாத்தும் பள்ளிகூடத்துல படிக்க வைக்காம டி.சி.யை கொடுத்துட்டாங்க” என்றார் மன வருத்தத்துடன்.

தாழ்த்தப்பட்டவர்களை, பெண்களை, வறிய நிலையில் உள்ளவர்களை கல்வி ஒன்றே கை தூக்கிவிடும் என்பதால் தான் அனைவருக்கும் கல்வி அவசியம் என அரசும், சமூகமும் சொல்லி வருகிறது. இந்நிலையில், படிப்பு வரவில்லை என்பதற்காக ஒரு மாற்று திறனாளி மாணவியை பள்ளியில் இருந்து பாதியிலேயே வெளியேற்றுவது என்பது கண்டிக்கதக்கது.

தெரியாததையும், புரியாததையும் விளக்கமாக சொல்லி கொடுத்து, மாணவர்களின் நிலையை உயர வைப்பதால் தான் ஆசிரியர்களை ஆணடவனுக்கு மேலான இடத்தில் முன்னோர்கள் வைத்துள்ளனர். அப்படிபட்டவர்கள் தங்களின் கடமையை மறந்துவிடுவதால், முத்துலட்சுமி போன்றவர்களுக்கு கிடைக்க வேண்டிய கல்வி கிடைக்காமலே போக காரணமாகிவிடுகின்றனர்.

உயர் அதிகாரிகள், இது போன்ற ஆசிரியர்களுக்கு உரிய பாடம் நடத்துவதுடன், முத்துலட்சுமி பாதியில் நிறுத்திய படிப்பை தொடரவும் ஆவண செய்ய வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

– See more at: http://www.manithan.com/news/20150623115653#sthash.fW7JkIRl.dpuf

SHARE