உலக பேட்மிண்டன் போட்டிக்கு முன்பாக உடல்தகுதி பெற்று விடுவேன்: சாய்னா

347
உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி இந்தோனேஷியாவின் ஜகர்த்தா நகரில் வருகிற 10-ந்தேதி தொடங்குகிறது. இந்த போட்டிக்கு தயாராகும் வகையில் இந்திய நட்சத்திர வீராங்கனை சாய்னா நேவால் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். ஆனால் சாய்னாவுக்கு தோள்பட்டையில் பிரச்சினை இருப்பதால் அவர் முழு உடல்தகுதியுடன் இருப்பாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

இது தொடர்பாக உலக தரவரிசையில் 2-வது இடம் வகிக்கும் சாய்னா கூறும் போது, ‘தோள்பட்டையில் கொஞ்சம் வலி உள்ளது. ஆனால் உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டிக்கு முன்பாக முழு உடல்தகுதியை பெற்றுவிடுவேன் என்று நம்புகிறேன். இந்த போட்டியில் நான் நேரடியாக 2-வது சுற்றில் விளையாட இருக்கிறேன். 2-வது சுற்றில் செங் நகன் யி (ஹாங்காங்) அல்லது காதி தோல்மோப் (எஸ்தோனியா) ஆகியோரில் ஒருவரை சந்திக்க வேண்டி இருக்கும்.

போட்டி அட்டவணை உண்மையிலேயே எனக்கு கடினமாக அமைந்துள்ளது. எனது பிரிவில் தான் முன்னணி வீராங்கனைகள் சயகா தகஹாஷி (ஜப்பான்) மற்றும் வாங் யுஹான் (சீனா) இருக்கிறார்கள். இருவரும் மிகவும் பலம் வாய்ந்தவர்கள். எனவே இந்த தொடர் எனக்கு எப்படி இருக்கப்போகிறது என்பதை பார்க்கலாம். இந்த முறை நன்றாக செயல்படுவேன் என்ற நம்பிக்கை இருக்கிறது’ என்றார்.

SHARE