எக்னெலிகொட கடத்தலுடன் தொடர்புடைய இன்னுமொரு இராணுவப் புலனாய்வாளர் கைது

315
பிரபல சிங்கள ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கடத்தல் வழக்கில் தொடர்புடைய இன்னுமொரு இராணுவப் புலனாய்வாளர் கைது செய்யப்பட்டுள்ளார். இரண்டொரு நாட்களுக்கு முன்னர் குறித்த இராணுவப் புலனாய்வாளர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் திணைக்கள தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அபேரத்ன எனப்படும் குறித்த இராணுவப் புலனாய்வாளர் பிரகீத் கடத்தல் சம்பவம் நடைபெற்றிருந்த காலகட்டத்தில் சாதாரண சார்ஜண்ட் தர அதிகாரியாக இருந்துள்ளார். எனினும் அதன் பின்னர் சில வருடங்களுக்குள்ளாக அவருக்கு லெப்டினன்ட் பதவி வரை பதவி உயர்வுகள் சீக்கிரமாக வழங்கப்பட்டுள்ளது.

மேலும் குறித்த சந்தேக நபர் இதற்கு முன் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருந்த போது பிரகீத் எக்னெலிகொட கடத்தப்பட்ட நாட்களுக்கு அண்மைய நாட்களில் அவரிடம் வாக்குமூலம் ஒன்றைப் பெற்றுக் கொண்டிருந்ததாக ஒத்துக் கொண்டிருந்தார். இதனையடுத்து இவர் வாக்குமூலம் ஒன்றைப் பெற்றுக் கொண்டபின் விடுவிக்கப்பட்டிருந்தார். எனினும் குற்றப் புலனாய்வுப் பிரிவினரின் விசாரணைகளில் சந்தேகநபர் பிரகீத் கடத்தப்பட்ட தினம் கிரிதலே முகாமில் லீவு பெற்றுக் கொண்டு கொழும்பு வந்திருப்பதும், பிரகீத்தை கடத்திய கும்பலில் நேரடியாக தொடர்புபட்டிருந்ததும் தெரிய வந்துள்ளது. இதனையடுத்து இரண்டொரு நாட்களுக்கு முன்னர் அவர் தற்போது கைது செய்யப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளார்.

prageeth-eknaligoda-380-seithy

SHARE