எதிர்பார்க்காத வகையில் மைத்திரியை ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்துவதென்று எதிர்க்கட்சிகள் அறிவித்திருப்பதானது, அரசியலில் ஆர்வம் குன்றிக் கிடந்த சாதாரண மக்களையும் துள்ளி எழும்ப வைத்துள்ளது.

430
எதிர்வரும் பொதுத்தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக, மகிந்த அரசாங்கத்தில் சுகாதார அமைச்சராக இருந்த மைத்திரிபால சிறிசேன அறிவிக்கப்பட்டுள்ளார்.

எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் ஐக்கிய தேசியக் கட்சியை சேர்ந்தவராக இருப்பார் என்று நாமும் நாட்டின் ஜனாதிபதியும் நினைத்திருந்த போது, ஜனாதிபதி மகிந்தவின் அரசில் சுகாதார அமைச்சராக இருந்த மைத்திரிபால சிறிசேனவை பொதுவேட்பாளராக எதிர்க்கட்சிகள் அறிவித்திருப்பது இந்த ஆண்டு நம் நாட்டு அரசியலில் நடந்த மிக உன்னதமான அதிர்ச்சிச் செய்தி எனலாம்.

எவருமே எதிர்பார்க்காத வகையில் மைத்திரியை ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்துவதென்று எதிர்க்கட்சிகள் அறிவித்திருப்பதானது, அரசியலில் ஆர்வம் குன்றிக் கிடந்த சாதாரண மக்களையும் துள்ளி எழும்ப வைத்துள்ளது.

அந்த வகையில் நடக்கப் போகும் ஜனாதிபதித் தேர்தல் சூடு கிளப்பும் என்பது நிறுத்திட்டமான உண்மை.

அதேநேரம் தேர்தல் வெற்றிக்காக எதுவும் நடக்கும் என்று எதிர்வு கூறுவதிலும் தயக்கம் தேவையில்லை.

எதுவாயினும் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் யார் என்பதில் ஏற்பட்டிருந்த குழப்பங்கள், எதிர்பார்ப்புகள் கடந்து, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குள் இருந்து ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச­வை எதிர்த்து போட்டியிடக் கூடிய வேட்பாளரை தெரிவு செய்தமை எதிர்க்கட்சிகளிடையே இருக்கக் கூடிய வலுவான ஒற்றுமையைக் காட்டுகிறது.

ரணில் விக்கிரமசிங்க, முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க, அவரது சகோதரி சுனேத்திரா, சஜித் பிரேமதாச, கருஜெயசூரிய போன்றவர்களில் ஒருவரே பொது வேட்பாளராக வரக்கூடிய வாய்ப்பு உண்டு என்று எதிர்பார்க்கப்பட்டிருந்தது.

ஒரு சந்தர்ப்பத்தில் ரணில் விக்கிரமசிங்கவே எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் என்று அறிவிக்கப்பட்டு அந்தச் செய்தி ஊடகங்களிலும் இடம்பிடித்துக் கொண்டது.

இவை எல்லாம் நடந்து கொண்டிருக்கும் போது மைத்திரிபால சிறிசேனவை பொது வேட்பாளராக நியமிப்பது என்ற தீர்மானத்தை எதிர்க்கட்சிகள் எடுத்திருந்தன.

எனினும் பரம இரகசியமாக அச்செய்தி பாதுகாக்கப்பட்டதுடன் ஜனாதிபதி மகிந்த ராஜபக்­சவையும் அவரது குழுமத்தையும் திசை திருப்பும் வகையில், பொது வேட்பாளர் குறித்து வெவ்வேறு பெயர்கள் முன்மொழியப்பட்டு அவை பற்றிய தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டுக் கொண்டிருந்தன.

இதன் காரணமாக மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதி வேட்பாளராக வருவார் என்று ஆளும் தரப்பு கனவும் கண்டில.

நிலைமை இவ்வாறு இருக்க, எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் ஆளும் கட்சிக்குள் இருந்தமை மகா அதிசயமே.

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச­, சபாநாயகராக அவரது சகோதரர் சமல் ராஜபக்­ச. அடுத்த சகோதரர் பசில் ராஜபக்ச­  பொருளாதார அமைச்சர்.

தம்பி கோத்தபாய ராஜபக்ச பாதுகாப்புச் செயலாளர். மகன் நாமல் ராஜபக்ச பாராளுமன்ற உறுப்பினர் என ஒரு பெரும் குடும்ப அங்கத்தவர்களைக் கொண்ட மகிந்தவின் ஆட்சியில் ஒரு விபீஷணன் இருந்தமை அதிசயத்திலும் அதிசயம்.

வேட்பாளர் தெரிவில் வெற்றி பெற்ற எதிர்க்கட்சிகள் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெறுமா? தோல்வி காணுமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

SHARE