எல்லாம் தோனிக்கு தெரியும்’: ரெய்னா

325

‘‘எனது பேட்டிங் குறித்து கேப்டன் தோனிக்கு அனைத்தும் தெரியும். அவர் எந்த இடத்தில் களமிறங்குமாறு கூறினாலும் அதற்குத் தயாராக உள்ளேன்,’’ என, ரெய்னா தெரிவித்தார்.

இந்திய அணி வீரர் ரெய்னா, 27. இவரது 187 ஒருநாள் போட்டிகளில் 150 முறை 5 அல்லது அதற்கும் மேற்பட்ட பேட்டிங் வரிசையில் தான் களமிறங்கினார். இதில் இவரது ‘ஸ்டிரைக் ரேட்’ 94. சராசரி 36.18 ரன். சமீபகாலமாக 4வது இடத்தில் களமிறங்கும் ரெய்னாவின் சராசரி 19 இன்னிங்சில் 99 ஆக உள்ளது. ‘ஸ்டிரைக் ரேட்’ 45 ரன்.

தற்போது 2 மாத இடைவெளிக்குப் பின் தென் ஆப்ரிக்க அணிக்கு எதிரான ‘டுவென்டி–20’, ஒருநாள் தொடரில் பங்கேற்க உள்ளார்.

இதுகுறித்து ரெய்னா கூறியது:

பேட்டிங்கில் 5, 6 வது இடத்தில் களமிறங்குவது என்பது அவ்வளவு எளிதான விஷயமல்ல. இந்த இடத்தில் வரும் போது நீண்ட நேரம் நிலைத்து நின்று பேட்டிங் செய்ய வாய்ப்பு கிடைக்காது. 5 பந்தில் 15 ரன் அல்லது 20 பந்தில் 50 ரன் எடுக்க வேண்டிய நெருக்கடி இருக்கும். தொடர்ந்து மூன்று போட்டியில் பெரியளவில் ஸ்கோர் செய்யவில்லை எனில் பலதரப்பில் இருந்தும் நெருக்கடி அதிகரிக்கும். இருப்பினும் எதற்கும் நான் தயாராகவே உள்ளேன். துவக்கத்தை தவிர, எந்த இடத்திலும் களமிறங்குவேன்.

தோனிக்கு தெரியும்: ஏனெனில், எந்த இடத்தில் எப்படி பேட்டிங் செய்ய வேண்டும் என எனக்குத் தெரியும். எனது பேட்டிங் திறமை குறித்த அனைத்து விஷயங்களும் கேப்டன் தோனிக்கும் தெரியும்.

எனது பேட்டிங்கிற்கு சரியான இடம் எது, அணியில் எனது பங்கு என்ன என அவர் நினைக்கிறாரோ, அதை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டு விளையாட தயாராகவே உள்ளேன். ஒருவேளை 4வது இடத்தில் தான் வரவேண்டும் என தோனி விரும்பினால், அது அணியின் நலனுக்காகவே இருக்கும்.

பேட்டிங் பயிற்சி: கடந்த இரு மாதங்களாக தொடந்து வலைப்பயிற்சியில் ஈடுபட்டு வந்த போதும், போட்டியில் விளையாடிய அனுபவம் கிடைக்காமல் இருந்தது. இந்நிலையில் வங்கதேச ‘ஏ’ அணிக்கு எதிரான 3 போட்டிகள் நல்ல பயிற்சிக் களமாக அமைந்தது.

இதில் கடைசி போட்டியில் சதம் அடித்து, பேட்டிங் ‘பார்மிற்கு’ திரும்பியது பெரிய விஷயம். இந்நிலையில் தென் ஆப்ரிக்க தொடருக்கு என்னை தேர்வு செய்த இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) மற்றும் தேர்வாளர்களுக்கு நன்றி.

டிராவிட்டுக்கு பாராட்டு: ‘சீனியர்’ டிராவிட் கேப்டனாக இருந்த போது தான் ஒருநாள் போட்டியில் அறிமுகம் ஆனேன். என்னை பல ஆண்டுகளாக கவனித்து வருகிறார். தற்போது ‘ஏ’ அணியில் இவருடன் மீண்டும் இணைந்து செயல்படும் வாய்ப்பு கிடைத்தது. போட்டிக்கு மனதளவில் எப்படி தயாராவது என்பது குறித்து அதிக ஆலோசனை கொடுத்தார்.

ஒரு வீரராக எப்படி இருந்தாரோ அதே போலத்தான் தற்போது பயிற்சியாளர் ஆன பிறகும் அர்ப்பணிப்பு உணர்வுடன் உள்ளார். எந்த ஒரு மாற்றத்தையும் டிராவிட்டிடம் காண முடியவில்லை.

இவ்வாறு ரெய்னா கூறினார்.

SHARE