ஓஸ்ரேலிய வெளிவிகார அமைச்சகத்தில் சுமந்திரன் வெளிவிவகார அமைச்சர் ஜூலி பிஷப் மற்றும் அரசு பிரதிநிதிகளை சந்தித்து பேச்சு

332

 

sumanthiran in australiaஒஸ்ரேலிய அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் வெளிவிவகாரங்களை கையாளும் உத்தியோகபூர்வ பிரதிநிதியுமான எம்.ஏ.சுமந்திரன் ஒஸ்ரேலிய வெளிவிவகார அமைச்சர் ஜூலி பிஷப் மற்றும் அரசு பிரதிநிதிகளை இன்று சந்தித்து பேசியுள்ளார்.

ஒஸ்ரேலியாவின் தலைநகர் கன்பராவில் அமைந்துள்ள வெளிவிவகார வர்த்தக திணைக்களத்தில் இன்று 10 ஆம் திகதி நவம்பர் 2015 பகல் முழுவதும் இந்த தொடர் சந்திப்புக்கள் இடம்பெற்றன.
ஒஸ்ரேலியாவின் புதிய பிரதமர் மல்கம் டேன்புல் பதவியேற்ற பின்னர் அரசுப்பிரதிநிதிகளுடன் தமிழர் தரப்பினர் மேற்கொண்ட முதலாவது உயர்மட்ட சந்திப்பு இதுவாகும்.

முற்பகல் 11 மணியளவில் வெளிவிவகார அமைச்சின் ஆசிய பிராந்திய விவகாரங்களுக்கான உதவி செயலரும் சிறிலங்காவுக்கான முன்னாள் தூதுவருமான கதி க்ளுமன், தொழிலாளர் கட்சியின் நிழல் அமைச்சர்களில் ஒருவரான மைக்கல் ரோலன்ட் மற்றும் அதிகாரிகளுடனான முதலாவது சந்திப்பு இடம்பெற்றது.

இந்த சந்திப்பின் ஆரம்பத்திலேயே வெளிவிவகார அமைச்சு அதிகாரிகள், நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் அவர்களிடம் சிட்னி ஹோம்புஷ் பாடசாலையில் இடம்பெற்ற கசப்பான சம்பவங்கள் குறித்து கேட்டறிந்தனர். ஒஸ்ரேலியாவில் அவர் தங்கியிருக்கும் காலப்பகுதியில் அவரின் பாதுகாப்பு குறித்து தாம் கரிசனை கொள்வதாகவும் அவர்கள் தெரிவித்திருந்தனர்.

இதுவிடயத்தில், சுமந்திரன் அவர்களுடன் பேச்சுக்களில் கலந்துகொண்ட ஒஸ்ரேலிய தமிழ் அமைப்புக்களின் பிரதிநிதிகள் அரசு அதிகாரிகளுக்கு பதிலளிக்கும்போது – சிறிலங்காவில் தமிழ் மக்களுக்கு தொடர்ச்சியாக இடம்பெற்றுவரும் அநீதிகளின் விரக்தியின் வெளிப்பாடாகவே இந்த கசப்பான சம்பவம் இடம்பெற்றது என்றும் இப்படியான சம்பவங்களை சமூக தலைவர்களின் ஊடாக பேசி தீர்த்துக்கொள்வதாகவும் இனிவரும் காலங்களில் இவ்வாறான விடயங்கள் இடம்பெறாது உறுதிகொள்வதாகவும் தெரிவித்தனர்.

இதன்பிறகு, இடம்பெற்ற பேச்சுக்களில் – சிறிலங்கா அரசு தமிழ் மக்களுக்கு மேற்கொள்வதாக உறுதியளிக்கும் விடயங்களை உரிய காலப்பகுதிக்குள் நிறைவேற்றுவதற்கு வெளிநாட்டு அழுத்தங்கள் மிகவும் அவசியமாகவுள்ளன என்றும் சிறிலங்கா அரசு தமிழர் விவகாரத்தில் பொறுப்புக்களை தட்டிக்கழிக்காமல் தனது கடமையை செய்வதற்கு ஒஸ்ரேலிய அரசாங்கம் அழுத்தம் கொடுக்கவேண்டும் என்றும் சுமந்திரன் கேட்டுக்கொண்டார்.

இது விடயத்தில், தமிழ் அரசியல் கைதிகள் விவகாரத்தை உதாரணம் காண்பித்த சுமந்திரன், தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு உறுதியளித்தபடி குறிப்பிட்ட எண்ணிக்கையான தமிழ் கைதிகளை விடுதலை செய்யாமல் சிறிலங்கா அரசு இரண்டு தடவைகள் தான் வழங்கிய உறுதிமொழிகளை மீறியுள்ளதை சுட்டிக்காண்பித்தார். தற்போது உண்ணாவிரத போராட்டத்தை மேற்கொண்டு வருகின்ற கைதிகளின் விவகாரம் நாட்டின் மிகமுக்கிய விடயமாக முன்னிலைப்படுத்தப்படாமல் சிறிலங்கா அரசாங்கத்தினால் தொடர்ச்சியாக தட்டிக்கழிக்கப்படுவதாகவும் கூறினார். சிறிலங்கா அரசின் இந்த போக்கு தமிழர் தரப்போடு நிச்சயம் நம்பிக்கையை கட்டியெழுப்பும் படிமுறையாக அமையாது என்றும் சுமந்திரன் கோடிட்டு காட்டினார்.

இதற்கு பதிலளித்த ஒஸ்ரேலிய வெளிவிவகார அமைச்சு பிரதிநிதிகள், கொழும்பிலுள்ள ஒஸ்ரேலிய தூதரகத்தின் ஊடாக தாங்கள் இது விடயத்தில் சிறிலங்கா அரசுடன் உடனடியான பேசுவதாக உறுதியளித்தனர்.

இதேபோன்று, விடுவிக்கப்படுவதாக உறுதியளித்த காணிகளை மக்களுக்கு வழங்குவதில் அரசு தரப்பில் காண்பிக்கப்படும் மெத்தனப்போக்கினையும் சுமந்திரன் எடுத்துக்கூறியிருந்தார்.
மாலை 6 மணியளவில், வெளிவிவகார அமைச்சர் ஜூலி பிஷப்புடனான உயர்மட்ட சந்திப்பு இடம்பெற்றது.

இந்த சந்திப்பின்போது, ஜெனீவா தீர்மானத்தின் பிரகாரம் சிறிலங்காவில் அமைக்கப்படவுள்ள வெளிநாட்டு உதவியுடன் கூடிய உள்ளக பொறிமுறையில் ஒஸ்ரேலியா முக்கிய பங்களிப்பை மேற்கொள்ளவேண்டும் என்று சுமந்திரன் கேட்டுக்கொண்டார்.

மேற்குலக நாடுகள் பலவற்றை சிறிங்கா அரசு ஒருவித சந்தேகத்துடனும் அச்சத்துடனும் பார்க்கின்ற போக்கு கடந்தகால வரலாறுகளாக இருந்துவரும் நிலையில், ஒஸ்ரேலியாவை தமிழர் தரப்பும் சிறிலங்கா தரப்பும் நம்பிக்கையுடன் பார்க்கிறார்கள் என்றும் பரஸ்பரம் புரிந்துணர்வுடன் முக்கிய காரியங்களை முன்னெடுப்பதற்கு அனுசரணை வழங்கவல்ல பொறுப்பான பங்காளியாக ஒஸ்ரேலியா விளங்கமுடியும் என்றும் சுமந்திரன் சுட்டிக்காட்டினார்.

ஜெனிவா தீர்மானத்தின் பிரகாரம் சிறிலங்காவில் உருவாக்கப்படவுள்ள உள்ளக பொறிமுறையில் – முக்கியமாக நீதிக்கட்டமைப்பில் – ஒஸ்ரேலிய நீதிவான்கள் மற்றும் புத்திஜீவிகளை உள்ளடக்கிய குழுவினரை பிரதான பங்காளிகளாக இணைத்துக்கொள்வதற்கு எப்படியான வழிவகைகளை கையாளலாம் என்று ஒஸ்ரேலிய அரசு ஆலோசனை வழங்கவேண்டும் என்றும் சுமந்திரன் கேட்டுக்கொண்டார்.

அதேபோல, எதிர்காலத்தில் சிறிலங்கா அரசுக்கும் தமிழர் தரப்புக்கும் இடையிலான அரசியல் பேச்சுக்களிலும் ஒஸ்ரேலியாவின் பங்களிப்பு ஏன், எவ்வளவு அவசியம் என்பது குறித்தும் சுமந்திரன் எடுத்துக்கூறினார்.

அத்துடன், தமிழர் தாயகத்தின் அபிவிருத்தி திட்டங்களுக்கு ஒஸ்ரேலிய அரசின் பங்களிப்பு, அதில் புலம்பெயர்ந்த தமிழ்மக்களின் எவ்வாறு உள்வாங்கிக்கொள்வது, நீதி – அமைதி – நல்லிணக்கம் கொண்ட சமூகத்தை கட்டியழுப்புவதில் காண்பிக்கப்படவேண்டிய கரிசனை போன்றவை குறித்தும் தமிழ்மக்களின் சுபீட்மான வாழ்க்கைக்கு எல்லா சமூகங்களுடனும் பேணவேண்டிய நல்லுறவுகள் பற்றியும் இந்த சந்திப்பில் பேசப்பட்டது. ‪

நன்றி படங்களும் தகவல்களும் ஒஸ்ரேலியாவிலிருந்து தெய்வீகன்sumanthiran in australiasumanthiran in australia 1sumanthiran in australia 2

SHARE