கங்குலியின் சாதனையை முறியடித்த டிவில்லியர்ஸ்

324
நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை தென் ஆப்பிரிக்கா 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியுள்ளது.தென்ஆப்பிரிக்கா – நியூசிலாந்து அணிகள் இடையிலான 3வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி டர்பனில் நேற்று நடந்தது.இதில் நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய தென்ஆப்பிரிக்க அணி 7 விக்கெட் இழப்புக்கு 283 ஓட்டங்கள் சேர்த்தது.

அணித்தலைவர் டிவில்லியர்ஸ் 64 ஓட்டங்கள் (48 பந்து, 8 பவுண்டரி, ஒரு சிக்சர்) விளாசினார்.

மொர்னே வேன் வாக் 58 ஓட்டங்கள் (4 பவுண்டரி, 2 சிக்சர்), அம்லா 44 ஓட்டங்கள், பிஹெகர்டின் 40 ஓட்டங்கள் எடுத்தனர்.

நியூசிலாந்து தரப்பில், வீலர் 3, எலியாட் 2, மில்னே, பிரேஸ்வெல் தலா 1 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

284 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய நியூசிலாந்து அணி, தென்ஆப்பிரிக்காவின் அபார பந்துவீச்சில் 49.2 ஓவர்களில் 221 ஓட்டங்களுக்கு சுருண்டது.

லதம் அரைசதம் (54) எடுத்தார். அணித்தலைவர் வில்லியம்சன் (39), முன்ரோ (35) ஓரளவு ஓட்டங்கள் குவித்தனர். மற்ற வீரர்கள் சொபிக்கவில்லை.

தென்ஆப்பிரிக்கா சார்பில் விசே 3, ரபடா 2, ஸ்டெய்ன், அப்போட் தலா 1 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

இதனால் தென் ஆப்பிரிக்கா 62 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றி மூலம் தென் ஆப்பிரிக்கா 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது.

டிவில்லியர்ஸ் ஆட்டநாயகனாகவும், அம்லா தொடர் ஆட்டநாயகனாகவும் தெரிவு செய்யப்பட்டார்.

டிவில்லியர்ஸ் புதிய சாதனை:-

நேற்றைய போட்டியில் விளையாடிய தெனஆப்பிரிக்க அணித்தலைவர் டிவில்லியர்ஸ் 8 ஆயிரம் ஓட்டங்கள் என்ற மைல்கல்லை எட்டினார்.

இதுவரை 190 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்று 182 இன்னிங்சில் களம் இறங்கியிருக்கும் டிவில்லியர்ஸ் 8,045 ஓட்டங்கள் குவித்துள்ளார்.

இதன் மூலம் ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் அதிவேகமாக 8 ஆயிரம் ஓட்டங்களை கடந்த வீரர் என்ற பெருமையை பெற்றார்.

இதற்கு முன்பு இந்திய அணித்தலைவர் சவுரவ் கங்குலி தனது 200வது இன்னிங்சில் இந்த இலக்கை கடந்ததே சாதனையை இருந்தது. அதனை டிவில்லியர்ஸ் முறியடித்தார்.

SHARE