கண்டத்திற்குள் ஒரு கடல் – சிலிர்ப்பூட்டும் சிலிகா ஏரி 

452
சிலிகா ஏரி இந்தியாவின் கிழக்கு கடற்பகுதியில் அமைந்துள்ள மிகப்பெரிய உவர் நீர் ஏரி. இப்பகுதியில் கடற்கரையை ஒட்டி ஒரு பெரிய லகூன் (Lagoon) அமைந்திருப்பதே இந்த ஏரிக்கான பிரசவ காரணம்.
ஏரியின் அமைப்பு:

ஒரிஸ்ஸா மாநிலத்தில் உள்ள பூரி, குர்தா, கன்ஜம் ஆகிய மாவட்டங்களுக்கு இடையில் 1100 சதுர கி.மீ. பரப்பளவில் பரந்து விரிந்து கண்டத்திற்குள் சிறுகடலாக கிடக்கிறது.

இந்த ஏரி பருவமழைக்காலத்தில் 1165 சதுர கி.மீ. அளவுக்கு விரிவடையவும் கோடைகாலத்தில் 906 சதுர கி.மீ. அளவுக்கு சுருங்கவும் செய்கிறது.

ஆசியாவின் மிகப்பெரிய லகூன் என்பதோடு, உலகிலேயே இரண்டாவது பெரிய லகூன் என்ற சிறப்பையும் இது பெற்றுள்ளது.

இந்த ஏரிக்கு பார்கவி, மாக்ரா, தயா, மலகுனி, லுனா உட்பட 52 ஆறுகளும் ஓடைகளும் முதல்நிலை நீர் ஆதாரமாக விளங்கி கலக்கிறது.

இந்த ஆற்றின் மிகைநீர், ஏரி கடந்து வங்காள விரிகுடாவில் கலக்கிறது. 32 கி.மீ. நீளமுடைய கால்வாய் இந்த லகூனை வங்காள விரிகுடாவுடன் இணைக்கிறது.

இயற்கை எழில் ததும்பும் நீர்நிலம்:

1981 ம் ஆண்டில் ராம்சர் மாநாட்டில் சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த இந்தியாவின் ஈரநிலமாக இது ஏற்கப்பட்டது.

இது ஒரு ஏரியாக மட்டும் இல்லை இயற்கை சமநிலையை பாதுகாக்கும் மாபெரும் சுற்றுச்சூழலை தன்னகத்தே கொண்டுள்ளது.

ஆரவார அலைகள் இல்லாத, அமைதியான ஒரு கடலே நிலப்பகுதிக்குள் அமைந்திருப்பதால், இங்கு படகுசவாரி வெகு சுவாரஸ்யமாக நீண்ட நிஜ கடல் பயணமாக கிடைக்கிறது.

அலைகள் செதுக்கிய மணற்சிற்பம்:

நீர் வற்றிய சில இடங்களில், மணற்பரப்பின் வடிவம் அலைகள் பரவும் அமைப்பிலே மடிப்புகளாக இருப்பது எங்கும் இல்லாத ஒரு அதிசயம். இப்படி ஏற்பட்டதற்கான காரணமே இயற்கையின் ரகசியம்.

ஏரியை சுற்றிலும் ஒவ்வொரு பகுதியிலும் வெவ்வேறு விதமான நில அமைப்பும் நீர் அழகும் பல வண்ணங்களும் சுற்றுலா சுகம்.

கண்காட்சியான மீன்பிடி தொழில்:

கடலோடு தொடர்புடைய ஏரி என்பதால், இதில் மீன் வளம் மிகுந்துள்ளது. இதை, இந்த ஏரியை சுற்றிலும் கடற்கரை மற்றும் தீவுகளில் உள்ள 135 கிராமத்தை சேர்ந்த 1.5 லட்சம் மீனவர்கள் நம்பி தொழில் செய்வதிலிருந்தே அறிய முடியும்.

இவர்கள் விதவிதமாக மீன்பிடிக்கும் முறையும், பிடித்து துடிதுடிக்க குவிக்கும் மீன்களின் வகையும், ஒரு அரிய கண்காட்சி. வியப்போடு விழி விரிய ரசிக்கலாம்.

சிவப்பு நண்டு, செங்கால் பறவை:

சிலிகா ஏரி அரியவகையான தாவரங்களுக்கும் அச்சுறுத்தும் விலங்குகளுக்கும் வசிப்பிடம். உலக அளவிலான அரியவகை பறவைகள் குளிர்காலத்தில் இங்கு சரணாலயமாக வந்தடையும்.

160 க்கும் மேற்பட்ட பறவையினங்களை இங்கு காணமுடிகிறது.

காஸ்பியன் கடல், பைகால் ஏரி, மங்கோலியா, மத்திய மற்றும் கிழக்கு ஆசியா, லடாக், இமாலயா பகுதிகளிலிருந்து 12 ஆயிரம் கி.மீ. வரை பறந்து சிலிகா ஏரிக்கு சரணாலயமாக பறவைகள் வருவது ஆராயப்பட்டுள்ளது.

நீண்டகால்கள் மற்றும் வெண்இறக்கை விளிம்புகளில் சிவப்பு சேர்ந்த பறவைகள், பல வண்ணங்களில் எண்ணிலடங்கா சிறிய பறவைகள் என பசுமை சூழ்ந்த நீர்வெளிகளோடு காணப்படுவது முழுச்செறிவான இயற்கையழகையே முன்நிறுத்துகிறது.

நீர்வற்றிய பகுதியில் தலைகாட்டும் தாவரங்கள், அதை ஒட்டிய மணற்கரையில் கூட்டமாக கும்மாளமிடும் சிவப்பு நண்டுகள் கொள்ளையழகு.

டால்பின் டைவ்:

இந்த ஏரியில் சுமார் 152 ஐராவதி டால்பின்கள் வாழ்கின்றன. இந்த வகை டால்பின்கள் அரிதான, அழிந்துவரும் இனமாக கருதப்படுகிறது.

பயணிகள் படகுகளில் சென்று டால்பின்களின் டைவ் மற்றும் விளையாட்டை ரசிக்கின்றனர். இதற்கென இந்த ஏரிகளில் பிரத்தியேக பகுதிகள் படகுகள் உண்டு.

விலங்குகள், ஊர்வன, பறவைகள், மீன்கள் என இவைகள் கொண்டுள்ள வாழ்க்கை தகவமைப்புகளும் அவைகளின் வேட்டை திறனும் நாம் அதன் அருகில் வாழ்ந்துகொண்டே ரசிக்க வேண்டிய அற்புதங்கள்.

உலகுக்குள் கடவுள் உருவாக்கிய ஒரு உயிரியல் பூங்கா எனலாம். ஏரி பரந்து விரிந்து கிடப்பதால் முடிந்தால் நாமும் பறந்து ரசிப்பதே முழுமை.

-மருசரவணன்.

SHARE