கருப்பின நபரை 16 முறை துப்பாக்கியால் சுட்டு கொன்ற அமெரிக்க பொலிசார்

306
அமெரிக்காவில் கருப்பின நபர் ஒருவரை பொலிசார் 16 முறை துப்பாக்கியால் சுட்டு கொன்ற அதிர்ச்சி வீடியோ தற்போது வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.அமெரிக்காவில் உள்ள சிகாகோ நகரில் Laquan McDonald என்ற 17 வயது கருப்பின நபர் வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில், கடந்தாண்டு அக்டோபர் மாதம் 20ம் திகதி நள்ளிரவு வேளையில், கையில் சிறிய கத்தியுடன் அந்த வாலிபர் சாலையில் நடந்து சென்றுள்ளார்.

அப்போது, அவ்வழியாக வந்த Jason Van Dyke(37) என்ற பொலிசார், வாலிபரின் கையில் உள்ள கத்தியை கீழே போட்டுவிட்டு சரணடையுமாறு உத்தரவிட்டுள்ளார்.

ஆனால், பொலிசாரின் உத்தரவை மதிக்காமல் அந்த வாலிபர் பொலிசாரின் பிடியில் இருந்து விலகி சென்றதாக கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரம் அடைந்த பொலிசார், வாலிபரை நோக்கி சரமாரியாக துப்பாக்கியால் சுட்டுள்ளார். அதாவது, 13 வினாடிகளில் 16 முறை துப்பாக்கியால் சுட்டு வாலிபரை கீழே வீழ்த்தியுள்ளார்.

ரத்த வெள்ளத்தில் கீழே சாய்ந்த வாலிபரின் உடல் அருகே சென்ற பொலிசார், அவரது கையில் இருந்த கத்தியை காலால் உதைத்து அப்புறப்படுத்துகிறார்.

சிகாகோ நகரை உலுக்கிய இந்த சம்பவம் தொடர்பான வீடியோ ஒன்று நேற்று வெளியாகியுள்ளது.

எனினும், வாலிபரின் செய்கையால் தனது உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்ற அச்சத்தால் தான் வாலிபரை சுட்டதாக பொலிசார் வாக்குமூலம் அளித்துள்ளார்.

இந்த வழக்கு தொடர்பான விசாரணை நேற்று நீதிமன்றத்திற்கு வந்தபோது, பொலிசார் மீது கொலை வழக்கு பதிவு செய்து சிறையில் அடைக்குமாறு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

சிகாகோ நகர வரலாற்றில், பணியில் இருக்கும்போது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்ட முதல் பொலிசார் ஜேசன் ஆவார்.

வீடியோ வெளியானதை தொடர்ந்து, உயிரிழந்த வாலிபருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் சாலையில் ஊர்வலமாக சென்றது குறிப்பிடத்தக்கது.

 

SHARE