பிரேசிலில் நடைபெறவுள்ள ஃபிஃபா உலகக் கோப்பைக் கால்பந்து போட்டியில் பங்கேற்கும் ஸ்பெயின் அணியை அணியின் மேலாளர் விசென்டி டெல் போஸ்க்யூ செவ்வாய்க்கிழமை அறிவித்தார். 30 பேர் கொண்ட இந்த உத்தேச அணியில் டேவிட் டீ ஜீ, டேனி கர்வஜல் மற்றும் ஆண்டர் இடரஸ்ப் உள்ளிட்ட புதுமுகங்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. போட்டியில் பங்கேற்கும் அணி மே 25-ம் தேதி இறுதி செய்யப்படும். அதில் 23 பேர் இடம்பெற்றிருப்பர்.
உத்தேச அணியில் முன்கள வீரர் டீகோ கோஸ்டா, டேவிட் வில்லா, ஃபெர்னாண்டோ டோரஸ் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர். இதில் வில்லா மற்றும் கோஸ்டா இருவரும் ஸ்பானிஷ் லீக் கால்பந்து மற்றும் சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டியில் அட்லெடிகோ மாட்ரிட் அணி சார்பில் அசத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
தவிர பார்சிலோனா அணியில் ஆடி வரும் செர்ஜியோ பஸ்கட்ஸ், ஜேவி ஹெர்ணான்டஸ், கடந்த உலகக் கோப்பையில் வெற்றிக்கான கோல் அடித்த ஆண்ட்ரூஸ் இனிஸ்டா உள்ளிட்ட நட்சத்திர வீரர்களும் இடம்பெற்றுள்ளனர்.