காஷ்மீர் பள்ளத்தாக்கில் உறைந்திருக்கும் உண்மைகள்

307

 

காஷ்மீரில் குளிர்காலம் தீவிரமாகிவிட்டது. பனியின் முதல் பொழிவு மலைகளில் படரத் தொடங்கிவிட்டது. இன்னும் சற்று நாட்களில் கடும் பனிப்பொழிவால் நாட்டின் பிற பகுதிகளிலிருந்து – பாகிஸ்தானால் ஆக்கிரமிக்கப் பட்ட காஷ்மீரப் பகுதியிலிருந்தும்கூட – பள்ளத்தாக்கு துண்டிக்கப்பட்டுவிடும். எல்லைக்கு அப்பாலிருந்து சுடும் பீரங்கிகள், துப்பாக்கிகளின் சத்தம் ஓய்ந்துவிடும். தீவிரவாதிகள் பாகிஸ்தான் எல்லைக்குள்ளேயே தங்கிவிடுவர். தரைப்படையின் ரோந்தும் குறைந்துகொண்டே வரும்.

குளிர்காலத்தில் பகல் பொழுது குறைவு என்பதால், இந்த ஆண்டு தொடக்கத்திலிருந்து இதுவரை நடந்தவற்றை நெஞ்சில் அசைபோட மக்களுக்கு நிறைய நேரம் கிடைக்கும். ஆனால், இம்முறை மக்கள் நினைத்துப் பார்த்து மகிழ்ச்சியடைய அதிகம் ஏதுமில்லை.

அதிகம் தெரியும் விரிசல்கள்

இருவேறு சித்தாந்தங்களைக் கொண்டுள்ள மக்கள் ஜனநாயகக் கட்சியும் (பி.டி.பி.), பாஜகவும் 2014 டிசம்பரில் கூட்டாக ஆட்சியமைத்தனர். சிதைந்துபோயிருக்கும் மாநிலப் பொருளாதாரத்தைத் சீரமைத்து வலுப்படுத்துவோம் என்றனர். கடந்த 10 மாதங்களில், வேலைவாய்ப்புகளை உருவாக்குவதைவிட, அடித்தளக் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதைவிட இரு கட்சிகளுக்கும் இடையிலான உறவில் ஏற்பட்ட விரிசல்கள்தான் அதிகம் கண்ணுக்குத் தெரிந்தன.

பத்திரிகையாளர்களை அபூர்வமாகச் சந்திக்கும் காஷ்மீர் முதலமைச்சர் முஃப்தி முகம்மது சய்யீத், இந்தக் கூட்டணி அரசு நீண்ட நாளைக்குத் தொடரும் என்பதை நீண்ட அறிக்கை வாயிலாகத் தெரிவித்தார். பிரதமர் நரேந்திர மோடி காஷ்மீருக்கு வரும் நாள் மாநிலத்தின் வரலாற்றில் திருப்புமுனையாக இருக்கும் என்று தெரிவித்திருந்தார். மோடி சகிப்புத்தன்மை அற்றவர் அல்ல, அனைவரையும் அரவணைத்துச் செல்பவர் என்றும் அப்போது விளக்கம் அளித்தார்.

நிஜம் என்ன?

மாநில நிதியமைச்சர் ஹசீப் த்ரபு அதை ஆமோதிப்பதைப் போல, மத்திய அரசு அளிக்கும் பெரும் நிதியைக் கொண்டு வேலையில்லாத இளைஞர்கள் 2 லட்சம் பேருக்கு வேலை தரலாம், உற்பத்திப் பொருளாதாரத்தை ஊக்குவிக்கலாம் என்றார். பொருளாதாரம் வளர்ந்தால் மக்களுடைய கோபம் தணிந்துவிடும் என்பது அவருடைய கணக்கு.

இது எந்த அளவுக்கு உண்மை – பதில் சொல்வது கடினம். யதார்த்த நிலை மாநில அரசையும் மத்திய அரசையும் சங்கடத்தில் ஆழ்த்துகிறது. அக்டோபர் 30-ல் தெற்கு காஷ்மீரில் நடந்த பாகிஸ்தான் தீவிரவாதி அபு காசிமின் உடல் அடக்க நிகழ்ச்சி ஆயிரக்கணக்கானோரை ஈர்த்தது. அவர்களில் பெரும்பாலானவர்கள் 20 வயது முதல் 30 வயது வரை உள்ளவர்கள். குல்காம் மாவட்டத்தின் பிரதான வீதியில் தொடங்கிய அந்த ஊர்வலத்தில் சுமார் 30,000 பேர் கலந்துகொண்டனர்.

ஏராளமான இளைஞர்கள் காசிமைப் புகழ்வது காஷ்மீர் முதல்வருக்குக் கவலையாக இருக்கிறது என்று பி.டி.பி. கட்சியின் இளைஞர் பிரிவைச் சேர்ந்த வஹீத் பர்ரா வருத்தப்பட்டார். “இளம் காஷ்மீரிகளுக்குத் தாங்கள் யார் என்ற குழப்பம் நீடிக்கிறது. அவர்கள் அரசுக்கு எதிரான கருத்துகளைக் கொண்டவர்களாக இருக்கின்றனர். அவர்களைப் பிரதான நீரோட்டத்துக்குக் கொண்டுவரும் வழிபற்றி நாங்கள் யோசித்துக்கொண்டிருக்கிறோம்” என்றார் பர்ரா.

புகாம் சொல்லும் புகார்கள்

நரேந்திர மோடி காஷ்மீருக்கு வருவதற்கு 4 நாட்களுக்கு முன்னதாக தெற்கு காஷ்மீரில் உள்ள குல்காம் மாவட்டத்துக்குச் சென்றேன். இளைஞர்கள் ஏன் தங்களுக்கு வரக்கூடிய ஆபத்துகளைக்கூடப் பொருட்படுத்தாமல் தீவிரவாதிகளாக நினைக்கிறார்கள் என்று அறியச் சென்றேன். புகாம் என்ற அந்த ஊருக்குச் செல்லும் வழியில் பண்டிட்டுகள் விட்டு வெளியேறிய, வெறிச்சோடிய சில வீடுகளை வழியில் பார்த்தேன். உடைந்த ஜன்னல்கள், முகப்புகள், முன்வாசல்களைக் கொண்டவை அவை. ராணுவத்தினர் தங்கியிருந்து விட்டுச் சென்ற பதுங்கு குழிகள், அகற்றப்படாத மணல் மூட்டைகள், ‘இந்தியாவே – திரும்பிச் செல்’ என்று சுவரில் எழுதப்பட்ட வாசகங்கள் கண்ணில் பட்டன.

நெல் வயல்களைக் கடந்து நீண்ட சாலை வழியாகச்சென்றால், இருபுறமும் ஆப்பிள் பழத் தோட்டங்கள். இறுதியில் இரைச்சலான சந்தை. அதுதான் கடைவீதி. பாதுகாப்புப் படையினர் எல்லா மூலைகளிலும் நிற்கின்றனர்.

ஒரு இளைஞர் மழையில் நனையாமல் இருக்க ஓரத்தில் நின்றுகொண்டிருந்தார். காசிம் எங்கே அடக்கம் செய்யப்பட்டிருக்கிறார் என்று அவரிடம் கேட்டேன். ஒரு மண் சாலையைக் காட்டி, “அங்கே போய் புகாம் போகும் வழி எது என்று யாரை வேண்டுமானாலும் கேளுங்கள், வழிகாட்டுவார்கள்” என்றார்.

பெண்களின் நிலை?

புகாம் என்பது 1,200 குடும்பங்கள் வசிக்கும் அமைதியான கிராமம். கடந்த 20 ஆண்டுகளில் புகாமைச் சேர்ந்த 9 பேர் தீவிரவாதிகளுடன் சேர்ந்துகொண்டனர். 6 பேரைப் பாதுகாப்புப் படையினர் கொன்றனர். 3 பேரைக் காணவில்லை. அவர்கள் என்ன ஆனார்கள் என்று கடவுளுக்குத்தான் தெரியும் என்கிறார் லாரி டிரைவர் முகம்மது ஷஃபி. புகாமின் முக்கிய சதுக்கத்தில் அவரைச் சந்தித்தேன். அதற்கு இப்போது முஸ்லிம் சதுக்கம் என்று பெயர். காவல் துறையினர் மீது கல் வீசியதாகக் கைது செய்யப்பட்டு 3 மாதங்கள் சிறையில் இருந்துவிட்டு வெளியே வந்திருக்கிறார். தான் கல் வீசவேயில்லை என்கிறார் ஷஃபி.

“நான் சிறுவனாக இருந்தபோது தீவிரவாதிகளைத் தேடி வருவார்கள். தீவிரவாதிகளுக்குத் தகவல் சொல்கிறவர்கள் யார் என்றும் கேட்டு மிரட்டுவார்கள். 2008-ல் அமர்நாத் யாத்திரைக்காக நிலங்களைக் கையகப்படுத்தும் முயற்சியை எதிர்த்துப் போராட்டம் நடந்தபோது நான் வாலிபனாகிவிட்டேன். அப்போதுதான் கல்லெறிச் சம்பவங்கள் அதிகரித்தன. ஊடுருவலை எதிர்ப்பவர்களுக்குப் புதிய எதிரிகளாக, கல் எறிபவர்கள் கருதப்பட்டார்கள். அவர்கள் வீட்டுக்குள் அதிரடியாக நுழைந்து, கல் எறிபவர்களைத் தேடுவார்கள்.

2009-ல் பள்ளத்தாக்கு மீண்டும் குலுங்கியது. நிலோஃபர் ஜான், ஆசியா ஜான் என்ற பெண்களின் உடல்கள் ஆப்பிள் தோட்டத்தில் கிடந்தன. மத்திய ரிசர்வ்

போலீஸ் படையினர்தான் அவர்களைப் பாலியல் வன்முறைக்கு உட்படுத்திவிட்டுக் கொன்றனர் என்று உள்ளூர்வாசிகள் குற்றம்சாட்டினர். அன்றிலிருந்து நாங்கள் எங்களுடைய பெண்களின் நிலை குறித்தும் கவலைப்பட்டோம். இங்கு எது வேண்டுமானாலும் நடக்கும்” என்கிறார் ஷஃபி.

பயங்கரவாதப் பாதை!

கசப்பான சம்பவங்கள் இத்துடன் ஓயவில்லை. 2010-ல் மீண்டும் ஒரு முறை மக்களுடைய போராட்டம் வெடித்தது. 3 பாகிஸ்தான் ஊடுருவல்காரர்களைச் சுட்டுக்கொன்றதாக ராணுவம் அறிவித்தது. அந்த 3 பேரும் நாடிஹால் கிராமத்தைச் சேர்ந்த காஷ்மீர் இளைஞர்கள். விருதுகள், பதவி உயர்வுகளுக்காக வேண்டுமென்றே கொன்றுவிட்டு, தீவிரவாதிகள் என்று முத்திரை குத்திவிட்டனர். இப்படி அடுத்தடுத்து நடந்த 3 சம்பவங்களால் பாதிக்கப்பட்ட ஷஃபி இப்போது ஆன்மிகத்தில் அமைதி தேடுகிறார்.

காசிமின் இறுதி ஊர்வலக் காட்சிகள் இன்னமும் மறக்கவில்லை என்கிறார் நேரில் பார்த்த காஷ்மீர் காவலர். பக்கத்து மாவட்டங்களில் இருந்துகூட இளைஞர்கள் கார்கள், பைக்குகள், மினி பஸ்களில் வந்தவண்ணம் இருந்தனர். காவல் நிலையத்தைச் செங்கற்களாலும் கற்களாலும் தாக்கினர். இறுதிச் சடங்குக்கு உடலைத் தங்களிடம் ஒப்படைக்குமாறு வலியுறுத்தினர். மக்கள் கூட்டம் அதிகரித்ததாலும் கல்லெறி வலுத்ததாலும் போலீஸாருக்கு வேறு வழியில்லாமல் போனது.

இளைஞர்கள் தீவிரவாதிகளாவது குல்காமின் பிரச்சினை மட்டுமல்ல; காஷ்மீரின் பிரச்சினையுமாகும் என்பது புரிகிறது. பி.டி.பி. கட்சியின் பேரவை உறுப்பினர்கள்

பிரச்சினையைச் சரியாகப் புரிந்துகொண்டிருக் கிறார்களா என்ற ஐயம் எழுகிறது. பிரதமர் மோடி மீது மட்டும் நம்பிக்கை வைப்பது சரியல்ல; காஷ்மீரின்

பிரச்சினைகளைத் தீர்க்கும் மந்திரக் கோல் எதுவும் அவரிடம் இல்லை. இளைஞர்களின் மனங்களைப் பிரிவினைப் போக்கிலிருந்து திருப்பி, வளர்ச்சியில் ஈடுபடுத்த அவரால் முடியாது. புகாமில் ஏற்பட்ட மாற்றங்களைப் பார்க்கும்போது, வெறும் வேலைவாய்ப்பு மட்டும் இளைஞர்களின் மனங்களில் ஏற்பட்டுள்ள தனிமையுணர்வைப் போக்கிவிடாது என்று தெரிகிறது.

திட்டமிட்டபடி பிரதமர் மோடி காஷ்மீருக்கு வந்து ரூ. 80,000 கோடி மதிப்புள்ள திட்டங்களை அறிவித்துவிட்டுச் சென்றிருக்கிறார். அனைவரும் எதிர்பார்த்த முக்கிய அறிவிப்புகள் எதையும் அவர் வெளியிடவில்லை. காஷ்மீர் மக்களின் மனங்களைக் கவரும் அல்லது ஆறுதல் அளிக்கும் விதத்தில்கூட எதுவும் நடைபெற்றுவிடவில்லை.

SHARE