கிளிநொச்சி கண்டாவளை பிரதான வீதி புனரமைக்கப்பட்டு மக்கள் பாவனைக்கு திறந்துவைப்பு… வடக்கு வீதி அபிவிருத்தி அமைச்சர் பா.டெனிஸ்வரன்…
கிளிநொச்சி மாவட்ட கண்டாவளை கிராமத்துக்கு செல்லும் பிரதான வீதி மிகவும் பாதிக்கப்பட்ட நிலையில் இருந்தவேளையிலே, அந்த பிரதான வீதியை புனரமைக்க வடக்கு மாகாண வீதி அபிவிருத்தி திணைக்களம் ஊடாக வடக்கு வீதி அபிவிருத்தி அமைச்சர் பா.டெனிஸ்வரன் அவர்கள் தனது கடந்த ஆண்டு அமைச்சின் செலவிற்கு ஒதுக்கப்பட்ட தொகையில் இருந்து ரூபாய் 4 மில்லியன் நிதியும் மேலதிகமாக 2 மில்லியன் நிதியும் ஒதுக்கி, திட்டத்தினை ஆரம்பித்துவைத்தார், தற்போது அப் பிரதான வீதியின் சுமார் 1080 மீட்டர் புனரமைப்புப் பணிகள் யாவும் நிறைவுற்ற நிலையில் அவ் வீதியை மக்கள் பாவனைக்காக உத்தியோகபூர்வமாக திறந்துவைக்கும் நிகழ்வு 29-01-2016 வெள்ளி மாலை 4.30 மணியளவில் இடம்பெற்றது.
நிகழ்விற்கு வீதி அபிவிருத்தி அமைச்சர் பா.டெனிஸ்வரன் அவர்களும் வடக்கு மாகாண சபையின் உறுப்பினர் அரியரத்தினம் பசுபதி அவர்களும் கண்டாவளை பிரதேச செயலாளர் திரு.முகுந்தன் அவர்களும் வீதி அபிவிருத்தி திணைக்களத்தின் முல்லைத்தீவு கிளிநொச்சி மாவட்ட பிரதம பொறியியலாளர் திரு.ஜெகானந்தன் ஆகியோர் கலந்துகொண்டு வீதியை திறந்துவைத்தனர்.
இவ் நிகழ்வில் உரையாற்றிய வடக்கு வீதி அபிவிருத்தி அமைச்சர், தனது இந்த கிராமத்து வீதியை தார்வீதியாக புனரமைப்பு செய்து இன்று மக்களது பாவனைக்கு கையளிப்பதில் மிகுந்த சந்தோசப்படுவதாகவும் அத்தோடு, கடந்த ஆண்டுகளில் வீதி அபிவிருத்தி திணைக்களம் ஊடாக இவ் வீதிக்கு ரூபாய் 5 மில்லியன் செலவில் நீர் வடிந்துசெல்லும் பெரிய மதகு கட்டப்பட்டதாகவும் இதனால் தற்போது மழைகாலங்களில் வீதியை குறுக்கறுத்து ஓடிய நீரினால் மக்கள் தமது போக்குவரத்தில் சிரமமின்றி செல்லக் கூடியதாக உள்ளதாகவும் கூறியதோடு, இதே வீதியின் மிகுதிப் புனரமைப்பிற்கு இந்த ஆண்டு 5.5 மில்லியன் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், அத்தோடு கண்டாவளை பிரதேச செயலகத்துக்கு இந்த ஆண்டு கிராம அபிவிருத்தி திணைக்களம் ஊடாக நாதன் திட்டம் மாதர் கிராம அபிவிருத்தி சங்கத்துக்கு அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய 2 இலட்சமும், உழவனூர் மாதர் கிராம அபிவிருத்தி சங்கத்துக்கு அதன் கட்டிட திருத்த வேலைக்கு 3 இலட்சமும், அதே சங்கத்துக்கு உள்ளூர் உற்பத்தியை வழப்படுத்த உணவு பதனிடும் நிலையம் அமைக்க 5 இலட்சமும் பிரமந்தனாறு மாதர் கிராம அபிவிருத்தி சங்கத்துக்கு அவர்களது கட்டிட திருத்த வேலைக்கு 2.5 இலட்சம் நிதியும் ஒதுக்கியுள்ளதாகவும் தெரிவித்தார். தாம் தமது மக்களுக்கு தேவைகளின் அடிப்படையில் முன்னுரிமை கொடுத்து வேலைத் திட்டங்களை நடைமுறைப் படுத்தி வருவதாகவும், மக்கள் ஒற்றுமையோடு ஒன்றுபட்டால் நிச்சயம் ஓர் நிலையான அபிவிருத்திக்குள் செல்லமுடியும் என்றும் அவர் அங்கு தெரிவித்தார்.