கிளிநொச்சி பழக்கடை வயோதிப அம்மாக்களின் கண்ணிர்…..

289

கம்பசில படிக்கிற மகனுக்கு பழங்கள் வித்துத்தான் காசு அனுப்புறன் கண்ணீர் அந்த வயோதிப தாயாரின் கண்ணில்…..

தம்பி வாங்க அண்ண வாங்க ஐயா வாங்க தங்கச்சி வாங்க அக்கா வாங்க…..தொடர்ந்து காலை தொடக்கும் மாலை வரை ஒலிக்கும் குரல்கள் இல்லை.
ஐந்து பழம் நூறுவா…..ஆறு பழம் நூறுவா அந்த சத்தங்களும் இல்லை…

சந்தைக்கு போகும் போது கேட்கும் அந்தக்குரல்கள் இல்லாதிருப்பது ஏதோ மாதிரி இருக்கின்றது. இன்னமும் எரிந்த காடாத்து முடிந்துவிட்ட சந்தையை சிலர் படம்பிடித்து கொண்டிருக்கின்றார்கள்.

ஒரு இடுகாடு போல கிளிநொச்சி சந்தையில் பழக்கடை பக்கம் சோபை இழந்து கிடக்கிறது. ஓரமாக ஒருமரத்தின் கீழ் இருந்த மாறனையும் அம்மாக்களுக்கும் அருகில் போகிறேன்.

மிஞ்சிப்போன மொட்டைக்கத்தியால் சிறிய பப்பாப்பழம் ஒன்றை வெட்டிக்கொண்டிருந்த மாறன் எனக்கும் ஒரு துண்டு தந்தான் சாப்பிட்டேன்.பிளேன்ரி ஒன்றும் தந்தார்கள் குடித்தேன்.

மாற்றுவலுவுள்ள மாறனிடம் கதை தொடக்குகிறேன்.இப்ப என்ன நிலைமை. அம்மாக்களை மாறன் கட்டுகிறார். ஏழ்மையின் உருவமாய் இருக்கும் அவர்களின் தேவ கனியை பறித்துச்சென்றிருக்கிறது நெருப்பு.

என்னுடைய மகனுக்கு பழங்கள் வித்து வாற காசிலதான் தம்பி பணம் அனுப்புறனான்.எங்கே மகன் படிக்கிறார் என்று கேட்டேன்.பேராதனை பல்கலைக்கழகம்.ஒரு கிளிநொச்சி மகன் ஏழ்மையிலும் படிக்கிறானே என்ற சிலிர்ப்பு எனக்குள்.அவனை படிப்பித்திருக்கிறாள் இந்த அம்மா எனும் போது வாழ்வின் நம்பிக்கை இந்த தாயிடம் இருந்தும் மகனிடம் இருந்தும் பலருக்கு விதைக்க வேண்டும்போல இருந்தது.

இன்னொரு பழக்கடைகார சகோதரியின் கணவர் அண்மையில்தான் இறந்துபோனோர்.முன்பு கணவர் பழக்கடையை நடத்திவந்தார்.இப்பொழுது இவள்.இவளின் கனவுகளை தீ தின்றிருந்தது.

இன்னொரு சகோதரி நோயானால் பீடிக்கப்பட்டவள் அவளும் ஒரு பழ வியாபாரி. இவ்வாறு விரியும் ஒவ்வொரு பழக்கடை அம்மாக்கள் அப்பாக்கள் சகோதர சகோதரிகளின் கதை மிகவும் சோகமானது. புழவியாபாரத்தில் கிடைக்கும் அற்பசொற்ப வருமானத்தை கொண்டுதான் அவர்களின் அன்றாட சீவியம்.

தம்பி..நாங்கள் பெரும்பாலும் எங்கட கிராமங்களில வீடுகளில விளையுற கொய்யாப்பழம் பப்பாப்பழம் பலாப்பழம் வாழைப்பழம் மாம்பழம்…இப்படியே உள்ளுர் பழங்களையும் அதிகம் விக்கிறோம்.அதில வாற வருமானத்தில் கோயில் திருப்பணி என்று என்ற வாறவர்களுக்கும்…வெள்ளிக்கிழமைகளில் ஏன் வேறு நாட்களிலும் பிச்சை என்று வருகின்றவர்களுக்கும் கொடுத்து மிஞ்சுகிறதுதான் எங்கள் வருமானம்.

இந்த ஏழை பழ வியாபாரிகளிடம் பழங்கள் கடனுக்கு வாங்கி தங்கள் தூரத்தில் உள்ள கிராமங்களின் சந்திகளில் அல்லது கோயில் உற்சவங்களில் கச்சான் கடலையோடு சர்பத்தோடு சேர்த்து விற்கும் ஏழைகளும் தங்கள் சிறிய தொழிலை இழந்தார்கள்.

அங்கு நின்ற கிழவி அவவுக்கு இரண்டு மாவீரர் எனக்குத் தெரியும் அவவை என்ன இங்க நிக்கிறியள் என்றேன் தாயில்லாத ஒரு பேரக்குழந்தையையும் இடுப்பில் வைத்தபடி நானடி இவவட்டதான் கடனுக்கு பழங்கள் வாங்கிக் கொண்டு அங்க விக்கிறனான் என்றாள் அவள்… ஓ! இவர்களின் பழங்களின் இனிப்பதன் பின்னால் உள்ள கதைகள் பெரிது….

கடன்கள் எடுத்திருக்கிறோம்.இனி எப்படி கட்டுவது.எல்லாம் எரிந்துவிட்டது வாங்கோ வாங்கோ என்று கத்தும் வாய்களை தவிர எல்லாம் எரிந்துவிட்டது.
கணக்கு எழுதி வைத்த கொப்பிகள் வங்கிப்புத்தகங்கள் தமக்கு பணம் தரவேண்டியவர்களின் விபரம் தராசு படிகள் கத்திகள் தளபாடங்கள் எதுவும் இல்லை.பணமும் அங்கு எரிந்து சாம்பரானது.

மொத்தம் நாங்கள் 22 பழக்கடைக்காரர்கள் தம்பி. எல்லாரும் கஸ்டப்பட்டு உழைப்பவர்கள்.வறுமை பின்னணி கொண்டவர்கள்.

பழக்கடை வியாபாரத்தை தொடங்க குறைந்து ஒரு இலட்சம்(100,000) ஒருவருக்கு வேண்டும்.பழங்கள் கொள்வனவு செய்ய அவற்றை நிறுக்கு தராசுகள் போட்டு கொடுக்க பைகள் வெட்டிக்கொடுக்க கத்திகள் கணக்கு எழுதி வைக்க கொப்பிகள் பில் புத்தகங்கள். போட்டு வைக்க பாத்திரங்கள் அடுக்கணைகள் இப்படி தேவைகள்……

இப்பொழுது தங்களை சந்திக்கிற எல்லோரையும் இந்தப் பழக்கடை அம்மாக்களும் சகோதர சகோதரிகளும்…தங்களுக்கு கைகொடுப்பார்கள் என நம்புகிறார்கள்..என்னையும் நம்புகிறார்கள் நான் இதை பார்க்கும் உங்கள் அனைவரையும் நம்புகிறேன்.kele

SHARE