கிழக்கில் இரத்த ஆறாக மாறிய புட்டும் தேங்காப்பூவும் – இரா.துரைரத்தினம்

419

 

veeramunai_tamil_people_murderஇன்றைக்கு 26ஆண்டுகளுக்கு முன்னர் 1990ஆம் ஆண்டு ஒகஸ்ட் செப்டம்பர் ஒக்டோபர் மாதங்கள் என்பது கிழக்கில் இரத்த ஆறு ஓடிய காலப்பகுதியாகும்.
இந்த படுகொலைகளை செய்தவர்கள் சிறிலங்கா இராணுவத்தினரும், விடேச அதிரடிப்படையினரும் முஸ்லீம் ஊர்காவல் படையினரும், இராணுவ புலனாய்வு பிரிவினர் மற்றும் விசேட அதிரடிப்படையினருடன் சேர்ந்தியங்கிய புளொட் போன்ற தமிழ் குழுக்களும் தான்.

சில தமிழ் கிராமங்களின் மீது ஆயுதம் தரித்த முஸ்லீம்களும் இத்தாக்குதல்களில் ஈடுபட்டனர். காத்தான்குடி, ஏறாவூர் பள்ளிவாசல்களில் விடுதலைப்புலிகள் தாக்குதல் நடத்தி தொழுகையில் இருந்த முஸ்லீம்களை படுகொலை செய்த சமகாலத்தில் தமிழ் கிராமங்களின் மீதும் ஆயுதம் தரித்த முஸ்லீம்கள் தாக்குதல் நடத்தினர்.

இதன் உச்சகட்டமாக ஆலயங்களில் தஞ்சமடைந்திருந்த அப்பாவி பொதுமக்கள் விசேட அதிரடிப்படையினராலும் முஸ்லீம்களாலும் வெட்டிக்கொல்லப்பட்டனர். இதில் ஒன்றுதான் அம்பாறை வீரமுனை சித்தாயாத்திரை பிள்ளையார் ஆலயத்தில் தஞ்சமடைந்திருந்த அப்பாவி பொதுமக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலாகும்.

1990ஆம் ஆண்டு ஒகஸ்ட் மாதம் 12ஆம் திகதி ஆலயத்தில் தஞ்சமடைந்திருந்த மக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களில் 14 தமிழ் மக்கள் கொல்லப்பட்டனர். இதன் 26ஆவது ஆண்டு நினைவு நினைவு தினம் கடந்த வெள்ளிக்கிழமை அனுஷ்டிக்கப்பட்டது. இக்காலப்பகுதியில் வீரமுனை பகுதியில் மொத்தம் 232 பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.

1990ஆண்டு ஏற்பட்ட விடுதலைப்புலிகளுக்கும் இராணுவத்தினருக்கும் ஏற்பட்ட யுத்த சூழ்நிலையின்போது வீரமுனை கிராமத்தினை சூழவுள்ள வளத்தாப்பிட்டி, மல்வத்தை, மல்லிகைதீவு, வீரச்சோலை, அம்பாறை ஆகிய பகுதிகளில் இடம்பெயர்ந்த மக்கள் வீரமுனை இராம கிருஸ்ண மிசன் வித்தியாலயம், வீரமுனை சிந்தாயாத்திரைபிள்ளையார் ஆலயம் மற்றும் கண்ணகியம்மன் ஆலயம் என்பனவற்றில் தஞ்சமடைந்திருந்தனர்.

வீரமுனை தமிழ் கிராமத்தில் தமிழர்கள் மீது 1990ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட ஒரு சில படுகொலைகளை திகதி வாரியாக இங்கே தருகிறேன்.

20.06.1990 வீரமுனை பிள்ளையார் கோவில் படுகொலை அதிரடிப்படை மற்றும் முஸ்லீம்களால் 69 தமிழர்கள் படுகொலை
05.07.1990 வீரமுனையில் 13 தமிழர்கள் படுகொலை
10.07.1990 வீரமுனையில் 15 தமிழர்கள் படுகொலை .
16.07.1990 மல்வத்தை இராணுவத்தினரும் முஸ்லீம் ஊர்காவல்படையினருமாக சுமார் 30 பேர் சேர்ந்து 8 பெண்களை பாலியல் பலாத்காரம் செய்து படுகொலை செய்தனர்.
26.07.1990 வீரமுனையில் 23 சிறுவர்கள் உட்பட 32 இளைஞர்கள் முஸ்லீம் ஊர்காவல்படையினராலும் விசேட அதிரடிப்படையினராலும் கைது செய்யப்பட்டு காணாமல் போயினர்.
29.07.1990 8 ஆசிரியர்கள் குடும்பத்துடன் பஸ் ஒன்றில் வீரமுனையை விட்டு வெளியேறிக்கொண்டிருந்த போது அவர்கள் அனைவரும் கடத்தி செல்லப்பட்டு படுகொலை செய்யப்பட்டனர்.
01.08.1990 சவளக்கடையில் 18பேர் கைது செய்யப்பட்டு காணாமல் போயினர்.

12.08.1990 வீரமுனை அகதி முகாமில் புகுந்த முஸ்லீம் குழு வாள்களால் வெட்டி தாக்குதல் நடத்தியது. இதில் ஆலய பரிபாலனசபை தலைவர் தம்பிமுத்து சின்னத்துரை உட்பட 14பேர் கொல்லப்பட்டனர். பலர் காயமடைந்தனர். வீரமுனையில் 600வீடுகளும், சம்மாந்துறை, மல்லிகைத்தீவு, வளத்தாப்பிட்டி கணபதிபுரம், மல்வத்தை ஆகிய கிராமங்களில் இருந்த 1352 தமிழர்களின் வீடுகள் முஸ்லீம்களால் முற்றாக தீக்கிரையாக்கப்பட்டது.

20.06.1990க்கும் 15.08.1990க்கும் இடைப்பட்ட காலத்தில் வீரமுனையில் மட்டும் 232 பொதுமக்கள் கொல்லப்பட்டதுடன் 1600க்கு மேற்பட்ட வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டது.
வீரமுனை ஆலயத்தில் தாக்குதல் நடத்தப்பட்ட 1990 ஓகஸ்ட் 12ஆம் திகதி அம்பாறை மட்டக்களப்பு எல்லைக்கிராமமான துறைநீலாவணையிலும் தமிழ் மக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் குழந்தைகள் பெண்கள் உட்பட 60பேர் கொல்லப்பட்டனர்.

12.08.1990 அன்று காலை நீலாவணை கல்லாறு இராணுவ முகாமிலிருந்த இராணுவத்தினரும் அவர்களுடன் இணைந்திருந்த முஸ்லீம் ஊர்காவல் படையினரும் துறைநீலாவணை கிராமத்தை சுற்றி வளைத்து துப்பாக்கி பிரயோகம் செய்தனர். இத்துப்பாக்கி பிரயோகத்தில் வயது வேறுபாடு இன்றி வீடுகளில் இருந்தவர்களும் வீதிகளில் சென்றவர்களும் சுட்டுக்கொல்லப்பட்டனர். இதில் 60க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டனர். பலர் காயமடைந்தனர். இவர்களில் 47பேரின் பெயர் விபரங்கள் மட்டக்களப்பு சமாதான குழுவில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
கொல்லப்பட்டவர்களில் 12பேர் பெண்களும் 6 சிறுவர்களும் அடங்குவர். அக்காலத்தில் இருந்த பதற்ற சூழலாம் இவர்களுக்கு உரிய இறுதி சடங்குகள் கூட செய்யப்படவில்லை. அனைவரும் ஒரே குழியில் போட்டு புதைக்கப்பட்டனர்.

வீரமுனை துறைநீலாவணை கிராமங்களில் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்ட அதேதினமான 1990ஆம் ஆண்டு ஒகஸ்ட் 12ஆம் திகதி மட்டக்களப்பு ஏறாவூர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.

1990ஆம் ஆண்டு ஒகஸ்ட் 11ஆம் திகதி அன்று இராணுவத்தினரும் முஸ்லீம் ஆயுதக்குழுவும் இணைந்து செங்கலடி கிரான் போன்ற கிராமங்களை சுற்றிவளைத்து தமிழ் மக்கள் மீது துப்பாக்கி பிரயோகம் செய்தனர். இதில் சுமார் 15பேர் கொல்லப்பட்டனர். இத்துப்பாக்கி பிரயோகத்தில் 12பேர் காயமடைந்து ஏறாவூர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.

மறுநாள் 12.08.1990 அன்று இரவு 11மணிக்கும் 12மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில் இராணுவத்தினரும் முஸ்லீம்களும் இணைந்து ஏறாவூர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த தமிழ் பொதுமக்கள் 12பேரையும் வைத்தியசாலைக்குள் வைத்தே வெட்டிக்கொன்றனர். இராணுவத்தினருடன் சென்ற முஸ்லீம்களே அப்பொதுமக்களை வெட்டி கொன்றனர் என இப்படுகொலையிலிருந்து தப்பி வந்த பொதுமக்கள் தெரிவித்திருந்தனர்.

இச்சம்பவம் நடந்து இரண்டு நாள் கழித்து 1990 ஒகஸ்ட் 14ஆம் திகதி மட்டக்களப்பு கோரவெளி, ஈச்சையடித்தீவு கிராமங்களில் இராணுவத்தினருடன் புகுந்த முஸ்லீம் ஆயுதக்குழுக்கள் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தினர். இத்துப்பாக்கி பிரயோகங்களில் வீடுகளில் இருந்தவர்கள் வீதிகளில் சென்றவர்கள், வயல்களில் வேலை செய்து கொண்டிருந்தவர்கள் என 18பேர் கொல்லப்பட்டனர். 25க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர்.

கல்லடி செங்கலடி ஆகிய இராணுவ முகாம்களிலிருந்து சென்ற இராணுவத்தினரும் ஏறாவூரில் இருந்த முஸ்லீம் ஆயுதக்குழுவுமே இத்தாக்குதலை நடத்தினர்.

இதேபோன்று 1990 ஓகஸ்ட் 11ஆம் திகதி கல்முனையில் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர். தமிழ் பெண்கள் மீது பாலியல் பலாத்காரம் புரியப்பட்டது. பாண்டிருப்பு கல்முனை, சேனைக்குடியிருப்பு ஆகிய கிராமங்களை இராணுவத்தினரும் முஸ்லீம் ஊர்காவல்படையினரும் சுற்றிவளைத்தனர். இராணுவத்தினர் வீடுகள் மீது துப்பாக்கி பிரயோகம் செய்து மக்களை வீடுகளை விட்டு வெளியில் வருமாறு எச்சரித்தனர். ஆண்கள் தமது தேசிய அடையாள அட்டையுடன் கையை உயர்த்திவாறு வெளியில் வந்தனர். பெண்கள் தமது குழந்தைகளை இறுகப்பற்றிய படி வெளியில் வந்தனர். 25ஆண்களை இராணுவத்தினர் காரைதீவு முகாமுக்கு கொண்டு சென்றனர். தமது பிள்ளைகள் மற்றும் கணவன்மாரை விடுமாறு பின்னால் சென்ற பெண்கள் தாக்கப்பட்டனர்.

அடுத்த நாள் இராணுவம் கொண்டு சென்ற பொதுமக்களின் உறவினர்கள் கல்முனை நகரிலிருந்து காரைதீவு இராணுவ முகாமுக்கு செல்ல முற்பட்ட போது அங்கு வந்த இராணுவத்தினர் அவர்களை தடுத்து நிறுத்தினர். அங்கு பெண்கள் வயோதிபர்கள் சிறுவர்கள் என பெருந்தொகையானோர் கூடியிருந்தனர். அங்கிருந்த இளம் பெண்களை தெரிவு செய்து அருகில் இருந்த கட்டிடத்திற்குள் கொண்டு சென்று பாலியல் பலாத்காரம் செய்தனர். ஆண்களை இராணுவத்தினர் சித்திரவதை செய்தனர். பின்னர் அவர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.

அங்கு இரு மணித்தியாலங்களிலவ் 37பொதுமக்கள் கொல்லப்பட்டனர். முதல் நாள் காரைதீவு முகாமுக்கு கொண்டு செல்லப்பட்ட 25 பொதுமக்களும் கொல்லப்பட்டனர். அவர்களின் சடலங்களை கூட கொடுக்காது எரித்து விட்டனர். 11ஆம் திகதி 12ஆம் திகதி ஆகிய இரு தினங்களில் மட்டும் கல்முனையில் 62 பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.

இதேபோன்று கிழக்கில் ஒவ்வொரு தமிழ் கிராமங்களிலும் வகை தொகையின்றி பொதுமக்கள் கொல்லப்பட்டனர். செப்டம்பர் மாதத்தில் நடந்த சத்துருக்கொண்டான் படுகொலை, கிழக்கு பல்கலைக்கழக படுகொலை சித்தாண்டிப்படுகொலை என கூட்டுப்படுகொலைகள் ஏராளம்.
இது போன்ற நெஞ்சை நெகி;ழ வைக்கும் செப்டம்பர் படுகொலைகள் பற்றி தனியாக பார்க்க வேண்டும்.

தமிழர்கள் மீது வன்னியிலும் முள்ளிவாய்க்காலிலும் நடத்தப்பட்ட படுகொலைகளே வெளி உலகிற்கு பெரிதும் தெரியவந்தன. கிழக்கில் நடத்தப்பட்ட படுகொலைகள் எவையும் பெரிய அளவில் வெளிவரவில்லை.

தமிழர்கள் என்ற ஒரே காரணத்தால் கிழக்கில் நடத்தப்பட்ட கூட்டுப்படுகொலைகள் இனப்படுகொலைகளாகும். இந்த படுகொலைகள் பற்றியும் தமிழ் அரசியல் தலைமைகள் பேச வேண்டும்.

கிழக்கில் நடந்த இத்தகைய படுகொலைகள் பற்றி 1995ஆம் ஆண்டு ஓய்வு பெற்ற நீதியரசர் கி.பாலகிட்ணர் தலைமையிலான ஜனாதிபதி ஆணைக்குழுவில் இந்த படுகொலைகளை நேரில் கண்டவர்கள் சாட்சியமளித்திருந்தனர்.

முக்கியமாக கிழக்கு பல்கலைக்கழக அகதி முகாமில் இராணுவத்தினராலும் முஸ்லீம் ஊர்காவல் படையினராலும் 145க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கடத்தி செல்லப்பட்டதை நேரில் கண்ட சாட்சிகளில் ஒருவர் தற்போது கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தராக இருக்கும் கலாநிதி ஜெயசிங்கம். அவர் உட்பட பேராசிரியை மனோ சபாரத்தினம், கலாநிதி சிவலிங்கம் ஆகியோரும் நேரில் கண்ட சாட்சிகளாக ஜனாதிபதி ஆணைக்குழுவில் சாட்சியமளித்திருந்தனர்.
அதேபோன்று சத்துருக்கொண்டான் படுகொலையில் காயங்களுடன் தப்பி வந்த சிவகுமார், மற்றும் சம்பவத்தை கண்ட ஆசிரியர் சிவக்கொழுந்து உட்பட பலர் அப்படுகொலை தொடர்பாக சாட்சியமளித்திருந்தனர்.

ஓய்வு பெற்ற நீதியரசர் பாலகிட்ணர் தலைமையிலான ஆணைக்குழு வெளியிட்ட அறிக்கையிலும் இந்த படுகொலைகளை யார் செய்தார்கள் என தெளிவாக குறிப்பிடப்பட்டிருந்தது.

ஆனால் கொலையாளிகளான இராணுவத்தினரும் முஸ்லீம் ஊர்காவல் படை போன்ற ஆயுதக்குழுக்களில் இருந்தவர்களும் தண்டிக்கப்படவில்லை. 26ஆண்டுகள் கடந்தும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்கவில்லை.

veeramunai_tamil_people_murder-1 veeramunai-massacre-1990

SHARE