கிழக்கில் மற்றுமொரு கருணா………?

307

 

தமிழர்களின் போராட்டத்தை உடைப்பதற்கும் சிதைப்பதற்கும் கிழக்கு மாகாணத்தில் இருந்து கருணா என்கின்ற விநாயகமூர்த்தி முரளிதரன் எவ்வாறு பயன்படுத்தப்பட்டாரோ அவ்வாறு தமிழ் தேசியத்தையும் தமிழர்களின் போராடும் திறனையும் இல்லாது ஒழித்து தமிழ் தேசியக் கூட்டமைப்பை சிதைப்பதற்கும் வடகிழக்கு தமிழ் கட்சிகள் மத்தியிலும் தமிழர்கள் மத்தியிலும் விரிசலை ஏற்படுத்துவதற்கும் தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளரும் கிழக்குமாகாண விவசாய அமைச்சருமான துரைராஜசிங்கம் அவர்கள் செயற்படுகின்றாரா என்ற சந்தேகம் மேலேழத்தொடங்கியுள்ளது.

தமிழர்களின் விடுதலைப்போராட்டம் படுபாதாளத்திற்குள் தள்ளப்பட்டுள்ள நிலையில் அனைத்து தமிழர்களும் கட்சிபேதமின்றி அமைப்பு வித்தியாசமின்றி பிரதேச வேறுபாடுகளை மறந்து ஒன்றுபட்டு செயற்பட வேண்டிய தருணத்தில் வடக்கின் இன்றைய தலைமையாக இருக்கின்ற வடக்கு மக்களினால் முழுமையாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள தலைமையாகிய முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அவர்களை எதிர்த்து அவர்களுக்கு எதிராக செயற்படுகின்ற தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளரும் கிழக்குமாகாண விவசாய அமைச்சருமான துரைராஜசிங்கம் அவர்களின் செயற்பாடானது அவரை கிழக்கின் மற்றுமொறு கருணாவாக இனங்காட்டியுள்ளது.

அன்று எவ்வாறு கருணா வடக்கின் தலைமைக்கு எதிராக செயற்பட்டு தமிழர்களின் போராட்டத்தை சிதைத்து பூச்சியத்திற்கு கொண்டு சென்றாறோ அதேபோன்று இன்று கிழக்குமாகாண விவசாய அமைச்சர் துரைராஜசிங்கம் என்பவர் இன்று வடக்கின் தலைமையாக செயற்பட்டுக்கொண்டிருக்கும் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு எதிராக செயற்பட்டுவருவதை கண்ணூடாகக் காணக்கூடியதாகவுள்ளது.

ஏற்கனவே வடக்குமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரணை ஊடுருவி என நேரடியாக ஊடகங்களில் விமர்சித்த கிழக்குமாகாண விவசாய அமைச்சர் துரைராஜசிங்கம் அவர்கள் வடக்குமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அவர்களின் கிழக்கு விஜயத்தை புறக்கணித்ததுடன் அதனை புறக்கணிக்குமாறு அரசாங்க அதிகாரிகள் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களுக்கு அழுத்தம் கொடுத்துள்ளதாக தற்போது தெரியவந்துள்ளது.

கிழக்கில் தமிழ் மக்கள் பேரவையினால் நடாத்தப்பட்ட முத்தமிழ் விழா நிகழ்வுக்கு தங்களது முழுமையான எதிர்ப்பை கிழக்கில் உள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் பதிவு செய்துள்ளதுடன் அதனை ஆரம்பிப்பதற்காக வருகைதந்த வடக்கின் முதலமைச்சரை கிழக்கில் உள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் முற்றாக புறக்கணித்துள்ளனர். இதற்கான காரணம் கிழக்குமாகாண விவசாய அமைச்சர் துரைராஜசிங்கம் அவர்களின் கடுமையான உத்தரவுதான் என தெரியவந்துள்ளது.

கிழக்கில் உள்ள தமிழர்களின் இருப்பு படுமோசமாக கேள்விக்குறியாகியுள்ள நிலையில் தமிழர்களின் இனவிகிதாசாரம் திட்டமிட்டு அழிக்கப்பட்டு நிலங்கள் அபகரிக்கப்பட்டு தமிழர்கள் இரண்டாம்தரப் பிரஜைகளாக நடத்தப்படுக்கின்ற நிலையில்.

கிழக்கில் தமிழ் மக்களுக்காக போராடுகின்ற தலைமைத்துவங்கள் மௌனித்துபோன நிலையில் கிழக்கு தமிழர்கள் தாழ்வு மனப்பாங்கில் இருக்கின்ற இக்காலகட்டத்தில் கிழக்கு தமிழர்களுக்கு இருக்கின்ற ஒரே நம்பிக்கை வடக்கில் உள்ள தமிழர்களும் அவர்களது நிர்வாகத்துடன் இணைந்துபோவதுமே கிழக்கு தமிழர்களின் பாதுகாப்புக்கு உகந்ததாக இருக்கும்.

இன்நிலையில் இலங்கையில் வடகிழக்கு இணைப்பை தமிழ் தேசியக் கூட்டமைப்பு கோரிநிற்கும் அதேநேரம் வடக்கு முதலமைச்சரை நாங்கள் ஏற்கமாட்டோம் என கிழக்கில் உள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் கூறுவது எந்தவகையில் நியாயமானது.

கிழக்கில் உள்ள முஸ்லீம்கள் என்னதான் தமிழர்களின் அதிகாரங்களை பறித்தெடுத்தாலும் தமிழ் மக்களின் நலனுக்காக கிழக்கு முதலமைச்சருடன் தான் நாங்கள் இணைந்து செயற்படுவோம் என வேதாந்தம் பேசும் நீங்கள் அதே தமிழர்களின் நலணுக்கா வடக்கு முதலமைச்சருடன் சேர்ந்து செயற்படுவதற்கு உங்களுக்கு என்ன கேடு நிகழ்ந்துள்ளது.

முஸ்லீம் தலைமைத்துவங்களை விட உங்களுக்கு அல்லது தமிழர்களுக்கு வடக்கு முதலமைச்சர் செய்த துரோகம் என்ன? வடக்கு முதலமைச்சரால் கிழக்கில் உள்ள உங்களுக்கு அல்லது தமிழர்களுக்கு மட்டும் என்ன கேடு நிகழ்ந்துள்ளது என உங்களால் கோடிட்டு காட்டமுடியுமா? என்பதே இன்று பலரது கேள்வியாகவுள்ளது.

வேறுமனே கட்சி நலனுக்காக செயற்படுகின்ற நிலைக்கு இன்று கிழக்கில் உள்ள தமிழரசுக்கட்சி தள்ளப்பட்டுள்ளது. வாக்களித்த மக்களுக்கு விஸ்வாசமாக செயற்படுவதை விடுத்து சீட் வழங்கிய கட்சித்தலமையை திருப்திப்படுத்துவதற்காக செயற்படுகின் நிலையிலேயே கிழக்கில் உள்ள தமிழரசுக்கட்சி உள்ளது.

கருணா தலைவரை எதிர்த்தபோதும் தனது பிரிவுக்கு நியாயம் கட்பித்தபோதும் வாய்கிழிய கத்திய தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் இன்று அதேபோன்று கிழக்குமாகாண விவசாய அமைச்சர் துரைராஜசிங்கம் அவர்கள் வடக்கின் தலமையை நேரடியாக எதிர்த்து நிற்கின்றபோது அதனை மறுத்துபேசமுடியாது வாய்மூடி நிற்பது வேடிக்கையாகவுள்ளது.

கிழக்கில் உள்ள அனைத்து தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்களுக்கு இன்று இருக்கின்ற ஒரே இழக்கு கிழக்குமாகாண விவசாய அமைச்சர் துரைராஜசிங்கம் அவர்களிடம் நல்லபிள்ளை என்று பெயர் எடுத்து எதிர்வரும் தேர்தல்களில் சீட் வாங்கியாகவேண்டும் என்பதே. அதற்காக துரைராஜசிங்கம் அவர்கள் என்ன சொன்னாலும் கேட்டுக்கொண்டு அதற்கு எதிரான கருத்துக்களை முன்வைக்க பயப்படுகின்றனர். இதில பாராளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரன் மட்டும் விதிவிலக்காக செயற்படுகின்றார்.

கிழக்கில் உள்ள தலைமைகள் ஒன்று தங்களது உட்கட்சி விரோதங்களை ஊடகங்களில் முதன்மைப் படுத்தி தமிழ் மக்களை பிளவுபடுத்த செயற்படுகின்றனரே தவிர தமிழர்களின் நிலங்கள் பறிபோவதையோ தமிழர்கள் திட்டமிட்டு கிழக்கில் இரண்டாம்தர வாழ்க்கை வாழ நிர்ப்பந்திக்கப்பட்டு அதிகாரமற்றவர்களாக மாற்றப்பட்டுள்ளார்கள் என்பதை உலகிற்கு எடுத்துக்காட்டி அதற்காக போராடுவதோ அதற்கு நடவடிக்கை எடுப்பதற்கோ முற்பட்டதாக தெரியவில்லை.

வடக்கு முதலமைச்சரை புறக்கணிப்பதற்கு கிழக்கில் உள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் ஆயிரம் நியாயங்களை கூறினாலும் அதனை தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் ஏனெனில் வடக்கு முதலமைச்சர் தங்களது மக்கள் தொடர்பாக அவர் சிறப்பாக செயற்படுகின்றபோது கிழக்கில் உள்ள இவர்கள் மட்டும் ஏன் அவரை எதிர்க்கவேண்டும் இவர்கள் அவர்களது தலைமையை திருப்திப்படுத்தவே இவ்வாறு செயற்படுகின்றார்கள் அதாவது சம்பந்தன் சுமந்திரன் ஆகியோரை திருப்திப்படுத்துவதே இவர்களது நோக்கமே தவிர தமிழர்களின் நலன் குறித்தோ அல்லது வடகிழக்கு இணைப்புக் குறித்து இவர்கள் அக்கறைப்பட்டதாக தெரியவில்லை.
அரசாங்க அதிபர் உள்ளுராட்சி ஆணையாளர் உதயகுமார் பேராசிரியர் மௌனகுரு இவர்களையெல்லாம் தொலைபேசியில் அழைத்து நேரடியாக விக்னேஸ்வரன் கலந்துகொள்ளும் நிகழ்வுக்கு போகாதீர்கள் என்று கூறுவதுதான் நீங்கள் தமிழ் மக்கள் மீதும் தமிழர்களின் பாரம்பரியங்கள் மீதும் கொண்டுள்ள அக்கறை?

சாதாரண அரசியல் பதவிகளுக்காகவும் சலுகைகளுக்காகவும் தமிழர்களின் தேசியத்தை மறந்து தமிழர்களின் ஒற்றுமையை சிதைக்கும் அளவுக்கு தாழ்ந்துபோவதுதான் உங்களது அரசியல் சித்தாந்தம்? ஒரு நிகழ்வை குழப்பும் அளவுக்கு எடுக்கின்ற அக்கறையை கிழக்கில் தமிழ் மக்களுக்கு உள்ள பிரச்சினைகளில் காட்ட முடியாது போனது ஏன்?
எழுகதமிழ்……….?

வடக்கில் உள்ள தமிழர்களின் பிரச்சினைகளுக்கா அங்குள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் பல்வேறு போராட்டங்களை நடத்திவருகின்றனர். அங்கு தமிழர்கள் தங்களது நிலங்களை போராடி பெருவதை காணக்கூடியதாக உள்ளது. ஆனால் கிழக்கில் உங்களால் இன்றுவரை ஒரு போராட்டத்தை கூட நடத்தமுடியவில்லை.

எல்லையில் பறிபோகும் தமிழர்களின் நிலங்களை மீட்கமுடியவில்லை புதிது புதிதாக முளைக்கும் புத்தவிகாரைகளை தடுத்துநிறுத்தமுடியவில்லை சிங்களமயமாகும் கிழக்குப்பல்கலைகழகத்திற்குள் மாற்றத்தை கொண்டுவரமுடியவில்லை வாழைச்சேனை கடதாசி ஆலையை மீள இயங்கவைக்க முடியவில்லை பண்ணையாளர்களின் பிரச்சினைக்கு தீர்வை பெற்றுக்கொடுக்க முடியவில்லை உங்களால் திறக்கப்பட்ட சித்தாண்டி மேஸ் பக்டரி மூடுவிழா கண்டுள்ளது. அரசாங்க அதிபரை உங்களால் மாற்றமுடியவில்லை இவ்வாறு இன்னும் பல விடயங்களை அடுக்கிக்கொண்டே போகுமளவுக்கு உங்களது இயலாமைகள் கிழக்கில் உருவெடுத்து நிற்கின்றபோது அதற்காக ஒரு போராட்டத்தை கூட உங்களால் நடத்த முடியவில்லை அந்த அளவுக்கு கிழக்கு மாகாணம் அடிமைப்பட்டுக்கிடக்கையில்
தமிழர்களுக்கா போராடுகின்ற ஒரு சக்தியை முடக்குவதற்கு நீங்கள் ஏன் முயட்சி செய்கின்றீர்கள்? 

கிழக்கில் உள்ளவர்கள் அனைவரும் உண்மையாக தமிழர்களின் போராட்டத்தை நேசிப்பவர்களாக இருந்தால் எழுக தமிழ் நிகழ்வில் பங்கெடுத்து தங்களது மாகாணத்தின் தமிழ் உணர்வை எடுத்துக்காட்டவேண்டும் வடகிழக்கு இணைப்பை வலியுறுத்த வேண்டுமெ தவிர அதை புறக்கணிக்க சொல்வதென்பது போராட்டமாக இருந்தாலும் சரி சமாதானமாக இருந்தாலும் அது நாங்கள் செய்தாத்தான் சரி வேறுயாரும் செய்யக்கூடாது என்ற மனநிலையில் தமிழர்களின் போராடும் சக்தியை முடக்கவேண்டாம். பாதிக்கப்பட்ட சமூகம் தனக்கான விடுதலை கிடைக்கும்வரை போராடுமெ தவிர அதனை உங்களைப் போன்றவர்களினால் தடுக்கமுடியாது. 

கிரைக்கடைக்கு எதிர்க்கடை இருக்ககூடாது என நினைப்பவர்கள் எப்படி இணக்க அரசியல் செய்யமுடியும் .
உங்களது உட்கட்சி மோதல்களை விடுத்து கருணா போன்றவர்களின் கருத்துக்களுக்கு நியாயம் சேர்க்காமல் இன்று உள்ள சூழ்நிலையில் வடக்கின் முக்கியத்துவத்தை உணர்ந்து கிழக்கில் உள்ள தலைமைகள் வடக்கு தலைமைகளுடன் ஒன்றிணைந்து செயற்படுவதன் ஊடாகவே கிழக்கின் இருப்பை பாதுகாத்து தக்கவைத்துக்கொள்ள முடியும் என்பதே நிதர்சனமாகும்.

SHARE