கிழக்கு மாகாண நுண்கலைப் பட்டதாரி ஆசிரியர் நியமனங்களுக்காக கோரப்பட்ட விண்ணப்பத்தில் தமிழ்மொழிமூல பட்டதாரி மாணவர்கள் புறக்கணிப்பு

292

 

கிழக்கு மாகாண கஷ்ட பிரதேச பாடசாலை ஆசிரியர்கள் வெற்றிடத்தைப் பூரணப்படுத்தும் நோக்குடன் கிழக்கு மாகாண சபையினால்  வெளியிடப்பட்ட நுண்கலை பட்டதாரிகளுக்கான ஆசிரியர் நியமண விண்ணப்ப சுற்று நிருபத்தில் நடனம், நாடகம், சங்கீதம், சித்திரம் ஆகிய பாடங்களுக்காக சிங்கள மொழிமூலம் மாத்திரம் பட்டதாரி ஆசிரியர் விண்ணப்பம் கோரப்பட்டமையானது தமிழ்மொழி மூலம் 2012 தொடக்கம் 2015 வரையான காலப்பகுதியில் நுண்கலைப் பட்டதாரிகளாகப் பட்டம் பெற்ற 282 தமிழ் நுண்கலைப் பட்டதாரிகளையும் புறக்கணிக்கும்  செயற்பாடாகும் என 14.08.2016 அன்று  நுண்கலைப் பட்டதாரி மாணவர்களை தனது அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடிய போது  பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ. சதாசிவம் வியாழேந்திரன் அவர்கள் கூறினார்.
Capture

அவர் தொடர்ந்து கூறுகையில், பல்வேறு இன்னல்களுக்கு மத்தியிலும் வறுமைக்கு மத்தியிலும் தமது பிள்ளைகளை பட்டதாரிகளாக உருவாக்கிய பெற்றோர்கள் தற்போது தமது பிள்ளைகளை கூலித்தொழிலுக்கு அனுப்பும் துர்ப்பாக்கிய நிலையே எமது தமிழ் பேசும் சமுதாயத்திற்கு ஏற்பட்டுள்ளது. பாராபட்சமான முறையில் ஆசிரியர் வெற்றிடங்களுக்கான நியமணங்கள் கோரப்படுவதும், அதிகாரங்களை பாவித்து நியமனங்களை வழங்குவதுமாக தொடர்ச்சியான எத்தனையோ அநீதிகள் எமது தமிழ் பேசும் மக்களுக்கு இழைக்கப்படுகின்றது. அதில் ஒரு வடிவமே தற்போது அரங்கேறியுள்ள கிழக்கு மாகாண நுண்கலைப்பட்டதாரி நியமனம்  வழங்கலாகும்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் நாடக அரங்கியல் பாடத்தில் பட்டம் பெற்ற 58 தமிழ் மாணவர்களும் அதேபோன்று சித்திரப் பாடத்தில் பட்டம் பெற்ற 30 தமிழ் பேசும்  மாணவர்களும், நடனப் பாடத்தில் பட்டம் பெற்ற 39 தமிழ் மாணவர்களும், சங்கீதப் பாடத்தில் பட்டம் பெற்ற 19 தமிழ் மாணவர்களுமாக 146 தமிழ் மாணவர்கள் வேலையற்ற நுண்கலைப் பட்டதாரிகளாக உள்ளதோடு அம்பாறை மாவட்டத்தில் நாடக அரங்கியல் பாடத்தில் பட்டம் பெற்ற 33 தமிழ் மாணவர்களும் சித்திரப் பாடத்தில் பட்டம் பெற்ற 35 தமிழ் பேசும்  மாணவர்களும் நடனப் பாடத்தில் பட்டம் பெற்ற 14 தமிழ் மாணவர்களும் சங்கீதப் பாடத்தில் பட்டம் பெற்ற 15 தமிழ் மாணவர்களுமாக பட்டம் பெற்ற 97 தமிழ் மாணவர்கள் வேலையற்ற நுண்கலைப் பட்டதாரிகளாக உள்ளனர். அதேபோன்று திருகோணமலை மாவட்டத்தில் நாடக அரங்கியல் பாடத்தில் பட்டம் பெற்ற 04 தமிழ் மாணவர்களும் சித்திரப் பாடத்தில் பட்டம் பெற்ற 07 தமிழ் பேசும்  மாணவர்களும், நடனப் பாடத்தில் பட்டம் பெற்ற 09 தமிழ் மாணவர்களும், சங்கீதப் பாடத்தில் பட்டம் பெற்ற 19 தமிழ் மாணவர்களுமாக 39 தமிழ் மாணவர்கள் வேலையற்ற நுண்கலைப் பட்டதாரிகளாக உள்ளனர். கிழக்கு மாகாணத்தில் மொத்தமாக 282 தமிழ் பேசும்  மாணவர்கள் சிறப்பு நுண்கலைப்பட்டம் பெற்றுள்ளனர்.

இருப்பினும், 78.6 சதவீதமான தமிழர்கள் வாழும்  கிழக்கு மாகாணத்தில் பல பாடசாலைகளில் நுண்கலைப் பாடங்களுக்கான ஆசிரியர் பற்றாக்குறை நிலவுகின்றது. எமது கலையை, எமது தமிழ் சமுதாய பண்பாட்டு விழுமியங்களை கற்றுக்கொள்ளும் ஆர்வம் பாடசாலை மாணவர்கள் மத்தியில் இருந்தபோதிலும், இத்துறைசார் பாடங்களை கற்பிப்பதற்கு நுண்கலை தமிழ் ஆசிரியர் பற்றாக்குறை காரணமாக இப் பாடங்களை கற்றுக்கொள்ள முடியாமல் மாணவர்கள் வேறு துறைசார் பாடங்களை தமக்கு பிடிக்காத பாடங்களை, தம்மால் கற்க இயலாத கடினமான பாடங்களை விருப்பமின்றி கற்றுக்கொள்ள வேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இக் காரணத்தினால் காலம் காலமாக எமது கலை கலாசார பண்பாட்டு விழுமியங்கள் மழுங்கடிக்கப்பட்டுக்கொண்டே இருக்கின்றது.

எனவே, நுண்கலை பட்டதாரிகளுக்கான ஆசிரியர் நியமன விண்ணப்ப சுற்றுநிருபத்தில் தற்போது தொழிலின்றி வறுமைக்கோட்டில் வாழும் தமிழ் நுண்கலைப் பட்டதாரிகளுக்கு சரியான தீர்வைப் பெற்றுக்கொடுக்க வேண்டியது கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளரினதும், கிழக்கு மாகாண கல்வி அமைச்சரினதும் கிழக்கு மாகாண முதலமைச்சரினதும்  பொறுப்பாகும். இதற்குரிய சரியான தீர்வை உரிய மாணவர்களுக்கு உடனடியாக பெற்றுக்கொடுக்க வேண்டும். இனம் மத சாதி வேறுபாடின்றி இனி வரும் காலங்களிலும் நியமணங்கள் வழங்கப்பட வேண்டும். அப்போதுதான் இன ஒற்றுமையும், இன நல்லுறவும் வலுப்பெறும். அமைந்துள்ள இந்த நல்லாட்சியிலாவது பாரபட்சம் பார்த்து வழங்கப்படும் நியமனங்களை கைவிட்டு எமது சிறுபான்மை சமூகம் முன்னேறுவதற்குரிய வழிவகைகளையும், தமிழ் பேசும் மக்களின் எதிர்கால வளர்ச்சியினையும் வழப்படுத்துங்கள் என்றும் தெரிவித்தார்.

Click here to Reply or Forward
SHARE