குப்டில் விளாசல்: தென் ஆப்பிரிக்காவுக்கு பதிலடி கொடுத்தது நியூசிலாந்து

388
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2வது டி20 போட்டியில் நியூசிலாந்து அணி 32 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 2வது சர்வதேச டி20 போட்டி செஞ்சுரியனில் நேற்று நடந்தது.இதில் நாணய சுழற்சியில் வென்ற நியூசிலாந்து தலைவர் வில்லியம்சன் துடுப்பெடுத்தாட முடிவு செய்தார்.இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணிக்கு தொடக்க ஆட்டக்காரர்களான குப்டில், அணித்தலைவர் வில்லியம்சன் நல்ல தொடக்கம் கொடுத்தனர்.

வில்லியம்சன் 25 ஓட்டங்களில் ஆட்டமிழக்க, டாம் லதாம் (3) வந்த வேகத்தில் வெளியேறினார். அதிரடியில் மிரட்டிய கப்டில் 35 பந்தில் 60 ஓட்டங்கள் (3 சிக்சர், 6 பவுண்டரி) எடுத்து ஆட்டமிழந்தார்.

அடுத்து வந்த எலியாட் (20), நீஷாம் (28) ஓரளவு ஓட்டங்கள் குவித்தனர். ரொஞ்சி (6) நிலைக்கவில்லை. 20 ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து 7 விக்கெட்டுக்கு 177 ஓட்டங்கள் எடுத்தது.

நாதன் மெக்கலம் (1), மில்னே (10) ஆட்டமிழக்காமல் இருந்தனர். தென் ஆப்பிரிக்கா சார்பில் ரபாடா 3 விக்கெட் வீழ்த்தினார்.

கடின இலக்கை நோக்கி களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணிக்கு தொடக்க ஆட்டக்காரர்களான ஆம்லா (14), வான் விக் (3) ஏமாற்றினர். அணித்தலைவர் டிவில்லியர்ஸ் (15) நிலைக்கவில்லை.

ரூசோவ் (26), பெகார்டியன் (36), டேவிட் மில்லர் (29) ஓரளவு கைகொடுத்தனர். டேவிட் வைஸ் (2), பங்கிசோ (2) வந்த வேகத்தில் நடையை கட்டினர்.

இதனால் தென் ஆப்பிரிக்க அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 125 ஓட்டங்கள் மட்டும் எடுத்து 32 ஓட்டங்களால் தோல்வியடைந்தது. கைல் அபாட் (9), ரபாடா (5) களத்தில் இருந்தனர்.

நியூசிலாந்து சார்பில் நாதன் மெக்கலம், மெக்லீனகன், இஷ் சோதி தலா 2 விக்கெட் கைப்பற்றினர்.

முதல் டி20 போட்டியில் தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற்றிருந்தது. இந்நிலையில் இந்த வெற்றியின் மூலம் 2 போட்டிகள் கொண்ட இந்த தொடர் 1-1 என்று சமநிலையில் முடிந்தது.

SHARE