குற்றங்களில் ஈடுபடும் புலம்பெயர்ந்தவர்களை வேடிக்கை பார்க்க முடியாது’: உடனடியாக நாடுகடத்த உத்தரவு

270

 

ஜேர்மனி நாட்டில் பல்வேறு குற்றங்களில் ஈடுபடும் புலம்பெயர்ந்தவர்களை உடனடியாக நாட்டை விட்டு வெளியேற்றும் கடும் சட்ட நடவடிக்கைகளுக்கு அந்நாட்டு சான்சலர் ஆதரவு தெரிவித்துள்ளதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன.ஜேர்மனி நாட்டின் தற்போதைய சட்டத்தின் அடிப்படையில் புகலிடம் கோரி காத்துள்ள புலம்பெயர்ந்தவர்கள் குற்றங்களில் ஈடுபட்டு 3 வருடங்கள் இடைநிறுத்த சிறை தண்டனை(suspended sentence) விதிக்கப்பட்டாலும் மற்றும் அவர்களுடைய தாய்நாட்டில் அவர்களது உயிருக்கு அச்சுறுத்தல் இல்லாமல் இருந்தாலும் அவர்கள் உடனடியாக நாட்டை விட்டு வெளியேற்றப்படுவார்கள்.

ஆனால், Cologne நகரில் புத்தாண்டு நள்ளிரவில் புலம்பெயர்ந்தவர்கள் பெண்கள் மீது பாலியல் வன்முறை தாக்குதலை நடத்தியதை தொடர்ந்து சான்சலரான ஏஞ்சிலா மெர்க்கல் அதிரடி அறிவிப்பு ஒன்றை நேற்று வெளியிட்டுள்ளார்.

அதில், ‘குற்றங்கள் நிரூபிக்கப்பட்ட அகதிகள் மற்றும் இடைநிறுத்த சிறை தண்டனை(எத்தனை ஆண்டுகள் இருந்தாலும்) பெற்ற புலம்பெயர்ந்தவர்களை உடனடியாக நாட்டை விட்டு வெளியேற்ற சட்டங்கள் கடுமையாக்கப்படும்’ என அறிவித்துள்ளார்.

இதன் மூலம், ஜேர்மனி சட்டங்களை மீறும் ஒரு அகதி அந்நாட்டில் குடியிருப்பு அனுமதியை இழக்க நேரிடும். அதாவது, சிறை தண்டனை அல்லது இடைநிறுத்த சிறை தண்டனை என எந்த தண்டனை பெற்றிருந்தாலும் நாட்டை விட்டு வெளியேற்றப்படுவார்கள்.

இந்த கடுமையான சட்ட நடவடிக்கையை ஜேர்மன் குடிமக்களின் பாதுகாப்பிற்காகவும், புத்தாண்டு தின வன்முறையில் ஈடுபடாத அகதிகளின் நலனிற்கு இந்த சட்டத்தை உடனடியாக செயல்படுத்த வேண்டும் என சான்சலர் உத்தரவிட்டுள்ளார்.

கடந்த சில மாதங்களாக புலம்பெயர்ந்தவர்களுக்காக ஜேர்மன் நாட்டின் கதவுகளை தாராளமாக திறந்துவிட்ட சான்சலர், அண்மையில் நடந்த புத்தாண்டு தின பாலியல் வன்முறையை தொடர்ந்து புலம்பெயர்ந்தவர்களின் மீது கடுமையான சட்டங்களை நடைமுறைப்படுத்த உத்தரவிட்டது இதுவே முதல் முறையாகும்.

எனினும், புத்தாண்டு தினத்தில் பெண்கள் மீது பாலியல் வன்முறை தாக்குதல்களை நடத்திய புலம்பெயர்ந்தவர்களின் பட்டியலில் இலங்கை மற்றும் இந்திய நாடுகளை சேர்ந்தவர்கள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE