கொழும்பில் வைத்து பின்தொடர்ந்த மர்ம நபர்கள்! உயிருக்கு அஞ்சவில்லலை! துணிந்துதான் வந்தோம்!- அனந்தி

413
கொழும்பில் வைத்து மோட்டார் சைக்கிளில் பயணித்த இரு மர்ம நபர்கள், தன்னை நேற்று செவ்வாய்க்கிழமை பின்தொடர்ந்ததாக வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் தெரிவித்தார்.

இது தொடர்பில் வெளிநாட்டுத் தூதுவர்கள் இருவரிடம் தெரிவித்தேன். அத்துடன், எனக்கு தொடர்ந்து இவ்வாறான அச்சுறுத்தல்கள் நிலவி வருவதாக வட மாகாணசபையின் அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானத்திடம் பலமுறை முறையிட்டுள்ளேன் என்றும் அவர் கூறினார்.

இது தொடர்பாக அனந்தி சசிதரன் தெரிவித்திருப்பதாவது,

நேற்று செவ்வாய்க்கிழமை நான் கொழும்பில் இருந்தேன். காலை முதல் மாலை வரை பலரையும் சந்தித்து உரையாடினேன். காலை 10 மணி முதல் மாலை 5.30 மணி வரையும், நான் செல்லும் இடமெல்லாம் மோட்டார் சைக்கிளில் பயணித்த மர்ம நபர்கள் சிலர், என்னைப் பின்தொடர்ந்தனர்.

அவர்கள் மிகவும் கொடூரமான தோற்றமுடையவர்களாகவும் என்னை கொல்ல வேண்டும் என்ற நோக்குடன் காணப்படுவதையும் நான் அவதானித்தேன்.

எனது சட்டத்தரணியைச் சந்திக்க சென்றிருந்தேன். அங்கும் அவர்கள் என்னை பின்தொடர்ந்து வந்தனர். அந்த சட்டத்தரணியும் கடந்த 2 மாத காலமாக 24 மணிநேர கண்காணிப்பிலேயே இருக்கின்றார்.

மேலும், இரு நாடுகளைச் சேர்ந்த தூதுவர்களையும் நான் அன்றைய தினம் சந்தித்து பேசினேன். இந்த பின்தொடர்தல் மற்றும் அச்சுறுத்தல்கள் தொடர்பில் தூதரகங்களுக்கும் அறிவித்தேன்.

இதுபோன்ற தொடர்ச்சியான அச்சுறுத்தல் தொடர்பாக வடமாகாண சபை அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானத்திடம் பல தடவைகள் முறையிட்டுள்ளேன்.

வடமாகாணசபை உறுப்பினர்களில், எனக்கும் எம்.கே.சிவாஜிலிங்கத்துக்கும் தொடர்ச்சியாக அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டு வருகின்றன.

ஆனால், இது தொடர்பில் எந்த விதமான ஆக்கபூர்வமான நடவடிக்கையையும் வடமாகாண சபை எடுக்கவில்லை.

நாம் உண்மைகளை கதைக்கின்றோம். மக்களுக்காக பேசுகின்றோம். சர்வதேச ரீதியில் எமது பேச்சுக்கு மதிப்பு கிடைத்துள்ளது. எமக்கு வழங்கப்பட்ட பொலிஸ் பாதுகாப்புக்கள் மீளப்பெறப்பட்டு பல நாட்கள் கழிந்துவிட்டன.

இது தொடர்பாக நான் அவைத்தலைவரிடம் கேட்கும் போதெல்லாம் அவர் சிரித்தபடி பதில் சொல்கிறார். அத்துடன், அவைத்தலைவர் ஒரு தடவை மாத்திரம் பொலிஸ் திணைக்களத்திற்கு கடிதம் எழுதிவிட்டு பேசாமல் இருக்கின்றார்.

நாங்கள் உயிருக்கு அஞ்சவில்லை. துணிந்துதான் இங்கு வந்தோம் என அனந்தி சசிதரன் மேலும் தெரிவித்தார்.

LANKASRI

SHARE