கோப்பை வெல்லுமா இந்தியா: இன்று தென் ஆப்ரிக்கா ‘டுவென்டி–20’ சவால்

316

இந்தியா, தென் ஆப்ரிக்க அணிகள் மோதும் ‘டுவென்டி–20’ போட்டி இன்று துவங்குகிறது. இதில் புலி போல பாய்ந்து தென் ஆப்ரிக்க அணியை தோனி துவம்சம் செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியா வந்துள்ள தென் ஆப்ரிக்க அணி மூன்று ‘டுவென்டி–20’, ஐந்து ஒருநாள் மற்றும் நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. 72 நாட்கள் நடக்கும் இதில் முதலில் ‘டுவென்டி–20’ தொடர் துவங்குகிறது.

இந்தியா ஆதிக்கம்:

இதில் தரம்சாலாவில் முதல் போட்டி இன்று நடக்கிறது. ஒருநாள், டெஸ்ட் போட்டிகளில் தென் ஆப்ரிக்க அணி பலம் வாய்ந்ததாக இருந்தாலும், ‘டுவென்டி–20’ என வந்து விட்டால், இந்தியா தான் ஆதிக்கம் செலுத்துகிறது.

இவ்விரு அணிகள் மோதிய 8 போட்டிகளில் 6ல் இந்தியா வென்றுள்ளது. இது நமக்கு சாதகமான விஷயம்.

நீண்ட இடைவெளி:

அதேநேரம் கடந்த ஒரு ஆண்டில் இந்திய அணி 2 சர்வதேச ‘டுவென்டி–20’ போட்டியில் (எதிர்–ஜிம்பாப்வே) தான் பங்கேற்றுள்ளது. மற்றபடி இந்திய வீரர்களுக்கு பிரிமியர் தொடரில் பங்கேற்ற அனுபவம் அதிகம் உள்ளன.

கேப்டன் தோனியை பொறுத்தவரையில் ஒரு ஆண்டுக்குப் பின் இப்போது தான் ‘டுவென்டி–20’ போட்டியில் களமிறங்குகிறார். கடைசியாக 2014, செப்., 7ல் இங்கிலாந்துக்கு எதிராக விளையாடினார்.

தவிர, வங்கதேச தொடர் முடிந்து மூன்று மாத ஓய்வுக்குப் பிறகு மீண்டும் வந்துள்ளார். 2016ல் இந்திய மண்ணில் ‘டுவென்டி–20’ உலக கோப்பை நடக்கவுள்ள நிலையில், இத்தொடரை கைப்பற்ற வேண்டிய நெருக்கடி தோனிக்கு ஏற்பட்டுள்ளது.

யார் துவக்கம்:

காயத்தில் இருந்த மீண்ட ஷிகர் தவான், வங்கதேச ‘ஏ’ தொடரில் சதம் அடித்து மீண்டுள்ளார். இவருடன் இணைந்து ரோகித் சர்மா அல்லது ரகானே துவக்கம் தரலாம். ‘மிடில் ஆர்டரில்’ விராத் கோஹ்லி, ரெய்னா, தோனி வருவர்.

ஹர்பஜன் வருகை:

ஆடுகளத்தில் பந்து நன்றாக ‘சுவிங்’ ஆகும் என்பதால் இரு சுழற்பந்து வீச்சாளர்களுடன் தோனி களமிறங்கலாம். சமீபத்திய ‘இலங்கைத் தொடர் நாயகன்’ அஷ்வின், அக்சர் படேல், அமித் மிஸ்ராவுடன் ‘சீனியர்’ ஹர்பஜனும் வந்துள்ளது போட்டியை அதிகரித்துள்ளது.

வேகப்பந்து வீச்சில் மோகித் சர்மா, புவனேஷ்வர் குமார், ஸ்ரீநாத் அரவிந்த் உள்ளனர். தவிர, ஸ்டூவர்ட் பின்னி, அம்பதி ராயுடுவும் அணியில் இடம் பெறுவரா என இன்று தான் தெரியும்.

டுபிளசி ‘அனுபவம்’:

தென் ஆப்ரிக்க அணி வீரர்கள் பலர் பிரிமியர் தொடரில் பங்கேற்றவர்கள். கேப்டன் டுபிளசி, சென்னை அணியில் தோனியுடன் இணைந்து விளையாடியுள்ளார்.

இதனால் தோனியின் பலம், பலவீனம், களத்தில் வகுக்கும் திட்டங்கள் அனைத்தும் இவருக்குத் தெரியும். இது இந்திய அணிக்கு சற்று பலவீனம் தான்.தவிர, குயின்டன் டி காக், ‘சூப்பர் மேன்’ டிவிலியர்ஸ், டுமினி, டேவிட் மில்லர், இம்ரான் தாகிர், ஆல்பி மார்கல் உள்ளிட்ட அனுபவ வீரர்களும் மிரட்ட காத்திருக்கின்றனர். இருப்பினும், இந்திய ‘ஏ’ அணிக்கு எதிரான பயிற்சி போட்டியில் தோற்றதால் சற்று கூடுதல் விழிப்புணர்வுடன் செயல்படலாம்.

அட்டவணை

நாள் போட்டி இடம் நேரம்

அக். 2 முதல் ‘டுவென்டி–20’ தரம்சாலா

அக். 5  2வது ‘டுவென்டி–20’ கட்டாக்

அக். 8  3வது ‘டுவென்டி–20’ கோல்கட்டா

………

அக். 11 முதல் ஒருநாள் கான்பூர்

அக். 14 2வது ஒருநாள் இந்துார்

அக். 18 3வது ஒருநாள் ராஜ்காட்

அக். 22 4வது ஒருநாள் சென்னை

அக். 25 5வது ஒருநாள் மும்பை

…….

நவ. 5–9 முதல் டெஸ்ட் சண்டிகர்

நவ. 14–18 2வது டெஸ்ட் பெங்களூரு

நவ. 25–29 3வது டெஸ்ட் நாக்பூர் காலை

டிச. 3–7 4வது டெஸ்ட் டில்லி காலை

* ‘டுவென்டி–20’ போட்டிகள் இரவு 7.00, ஒரு நாள் போட்டிகள் மதியம் 1.30, டெஸ்ட் போட்டிகள் காலை 9.30 மணிக்கும் துவங்கும்.

SHARE