சங்கக்காரா, சனத் ஜெயசூரியாவை மிரள வைத்த ஜாகீர்கான்! பிறந்த நாள் சிறப்பு பகிர்வு

309

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஜாகீர்கானுக்கு இன்று 37வது பிறந்த தினம்..

எதிரணி துடுப்பாட்டக்காரர்களுக்கு இந்திய அணியில் ஒரு தடை கல்லாய் இருந்தவர் ஜாகீர்கான். தனது அபார பந்து வீச்சால் பல வெற்றிகளை இந்திய அணிக்கு தேடித் தந்திருக்கிறார்.

இதில் 2011ம் ஆண்டு உலகக்கிண்ணம் மற்றும் 2007ம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிராக நடந்த டெஸ்ட் போட்டி ஆகியவை மறக்க முடியாதது.

1) 311 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ள ஜாகீர்கான் கபில் தேவ்க்கு பிறகு இந்தியாவின் மிகச் சிறந்த வேகப்பந்து வீச்சாளராக இருக்கிறார்.

2) வெளிநாட்டில் 150 விக்கெட்டுகளுக்கு அதிகமாக வீழ்த்திய 3வது இந்திய வீரர் என்ற பெருமையை வைத்துள்ளார்.

3) 2003ம் ஆண்டு உலகக்கிண்ண தொடரில் ஜாகீர்கான் தான் அதிக விக்கெட் வீழ்த்தியவர்.

4) 2011ம் ஆண்டு உலகக்கிண்ணத் தொடரில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர்கள் வரிசையில் ஜாகீர்கான் (21 விக்கெட்டுகள்) அப்ரியுடன் இணைந்தார்.

5) இங்கிலாந்தில் தொடக்க கவுண்டிப் போட்டியில் வொர்செஸ்டர்ஷைர் அணியில் 10 விக்கெட் வீழ்த்தி சாதனை படைத்தார். இது 100 ஆண்டுகளுக்கு பிறகு நடந்த சாதனை ஆகும்.

6) 2007ம் ஆண்டு ஜாகீர்கான் தான் அதிக விக்கெட் வீழ்த்தியவர். அந்த வருடம் ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டியில் மொத்தம் 81 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார்.

7) 2008ம் ஆண்டு அவுஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ஒரு இன்னிங்சில் 5 விக்கெட் மற்றும் அரைசதம் விளாசினார். ஒரே இன்னிங்சில் 5 விக்கெட் மற்றும் அரைசதம் விளாசிய பந்துவீச்சாளர்களில்  ருசி, கபிலுக்கு பிறகு ஜாகீர்கான் 3வது இந்திய வீரராக இணைந்தார்.

8) டெஸ்ட் போட்டிகளில் ஜாகீர் 11 ஐந்து விக்கெட்டுகள், 1 பத்து விக்கெட்டுகளை எடுத்துள்ளார்.

9) கடந்த 2007ம் ஆண்டு இங்கிலாந்தில் நடந்த தொடரை கைப்பற்ற உதவினார். அந்த தொடரில் 18 விக்கெட்டுகளுடன் ஜாகீர் முதலிடத்தில் இருந்தார்.

10) 2008ம் ஆண்டு ஜாகீர்கானுக்கு விஸ்டன் விருது வழங்கப்பட்டது.

ஜாகீர்கானும்.. கிரேம் ஸ்மித்தும்..

தென் ஆப்பிரிக்க அணியின் கிரேம் ஸ்மித், ஜாகீர்கானின் செல்லபிள்ளையாக இருந்துள்ளார். இவர் தான் ஜாகீர்கானிடம் அதிக முறை ஆட்டமிழந்துள்ளார். இவர் மொத்தமாக 13 முறை ஆட்டமிழந்துள்ளார்.

அதே போல் இலங்கை கிரிக்கெட் அணியின் ஜாம்பவான்கள் சங்கக்காரா, ஜெயசூரியா, ஜெயவர்த்தனே ஆகியோரும் இவர் பந்தில் தடுமாறியுள்ளனர்.

இந்த வரிசையில் சங்கக்காரா (11) 2வது இடத்திலும், சனத் ஜெயசூரியா (10), மாத்யூ ஹேடன் (10) 3வது இடத்திலும், ஜெயவத்தனே (9) 4வது இடத்திலும் உள்ளனர்.

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறும் போது கூட தனக்கு ஜாகீர்கானின் பந்து வீச்சு அதிக நெருக்கடியை ஏற்படுத்தியதாக சங்கக்காரா கூறியது குறிப்பிடத்தக்கது.

ஜாகீர் கடைசியாக கடந்த 2012ம் ஆண்டு இலங்கைக்கு எதிரான ஒருநாள் போட்டியிலும், 2014ம் ஆண்டு நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியிலும் ஆடினார். அதன் பிறகு அவர் அணியில் இடம்பெறவில்லை.

ஜாகீர்கானுக்கு தற்போது 37வயதாகி விட்டது. அவர் இனிமேல் இந்திய அணியில் இடம்பெற வாய்பில்லை. அதே சமயம் ஜாகீர்கான் போன்ற திறமையான பந்துவீச்சாளருக்கு யாரும் ஈடாக யாரும் வரமுடியாது என்பது மறுக்க முடியாதது.

SHARE